பாங்கு
603. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள்.
Volume :1 Book :10
604. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
Volume :1 Book :10
605. அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் 'கத்காமதிஸ்ஸலாத்' என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Volume :1 Book :10
606. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
மக்களின் எண்ணிக்கையில் அதிகமானபோது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது, நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் எனக் கருத்துச சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Volume :1 Book :10
607. அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் 'கத்காமதிஸ்ஸலாத்' என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Volume :1 Book :10
608. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
609. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.
அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.
Volume :1 Book :10
610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்" என்றார்கள்.
Volume :1 Book :10
611. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்."
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
612. ஈஸா இப்னு தல்ஹா அறிவித்தார்.
முஆவியா(ரலி) ஒரு நாள் பாங்கு சப்தத்தைச் செவியுறபோது 'அஷ்ஹது அன்ன முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்' என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே கூறினார்கள்.
Volume :1 Book :10
613. யஹ்யா அறிவித்தார்.
முஅத்தின் 'ஹய்ய அலஸ்ஸலாத்' என்று கூறும்போது அதைச் செவியுறுபவர் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்று சொல்ல வேண்டும். இவ்வாறுதான் உங்கள் நபியவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என முஆவியா(ரலி) கூறினார் என எங்கள் சகோதரர்களில் சிலர் அறிவித்துள்ளனர்.
Volume :1 Book :10
614. சொல்வதைக் கேட்ட பின், 'பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
615. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
616. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.
மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ்ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூடு அவ்வாறு செய்திருக்கிறார்கள்!' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Volume :1 Book :10
617. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்."
இதை அறிவிக்கும் இப்னு உமர்(ரலி) 'அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ்நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :10
618. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
Volume :1 Book :10
619. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸுப்ஹுத் தொழுகை;காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்.
Volume :1 Book :10
620. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று."
இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.
என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்"
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10