பாடம் : 1 சலாமைத் தொடங்குதல்2
6227. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, 'நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்' என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். 'சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)' என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) 'இறைவனின் கருணையும்' என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழம்லும்) குறைந்து கொண்டேவருகின்றன.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 79
பாடம் : 2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லாத வரை (அவற்றினுள்) பிரவேசிக் காதீர்கள். (அவ்வாறு நடப்பதே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவ தற்காக (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). அதில் நீங்கள் யாரையும் காணா விட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப் படும் வரை அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், திரும்பிப் போய்விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால்,அவ்வாறே திரும்பிவிடுங்கள். அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (யாரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்தால், அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும், அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாய்ச் செய்வதையும் நீங்கள் மறைத்துவைப்பதையும் நன்கறிவான். (24:27-29) -சயீத் பின் அபில்ஹஸன் (ரஹ்) அவர்கள் (தம் சகோதரர்) ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம்,அந்நியப் பெண்கள் தங்கள் நெஞ்சுப் பகுதியையும் தம் தலை களையும் திறந்தவண்ணம் இருக்கிறார்கள்என்று சொன்னார்கள். அதற்கு ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், அப்பெண்களை(ப் பார்க்காதே. அவர்களை) விட்டு உன் பார்வையைத் திருப்பிக்கொள். (ஏனெனில்,) அல்லாஹ் (குர்ஆனில்), (நபியே!) இறை நம்பிக்கையுடைய ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளு மாறும் தங்கள் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கூறுங்கள். இது அவர்களைத் தூய்மையாக்கி வைக்கும்' (24:30) என்று கூறுகின்றான் என்றார்கள். அவர்களுக்கு எதுவெல்லாம் அனுமதிக்கப் படவில்லையோ அதிலிருந்து தங்கள் கற்பை அவர்கள் பேணிக்காத்திட வேண்டும் என கத்தாதா (ரஹ்) அவர்கள் விளக்கமளித்தார்கள். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும் இறைநம்பிக்கையுடைய பெண்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் கற்பைப் பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். (24: 31) (40:19ஆவது வசனத்திலுள்ள) கண்கள் செய்யும் சூதுகள்' என்பது எவற்றைப் பார்க்கக் கூடாதோ அவற்றை(க்கள்ளத் தனமாக)ப் பார்ப்பதைக் குறிக்கிறது. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பருவ வயதை அடையாத பெண்களி(ன் உறுப்புகளி)ல் எதைப் பார்ப்பது பாலுணர்வைத் தூண்டுமோ அதைப் பார்ப்பது முறையல்ல. அவள் சிறுமியாக இருந்தாலும் சரியே! அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், மக்காவில் விற்கப்படும் அடிமைப் பெண்களைப் பார்ப்பதும் வெறுக்கத்தக்க செயலாகும். (அவளை விலை கொடுத்து) வாங்கும் எண்ணம் இருந்தாலே தவிர! என்று கூறினார்கள்.4
6228. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் இப்னு அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தம் வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தம் கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரின் முகத்தைத் திருப்பிவிட்டார்கள்.
அப்போது அப்பெண், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (நிறைவேறும்)' என்று பதிலளித்தார்கள்.5
Book : 79
6229. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'சாலையின் உரிமை என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.6
Book :79
பாடம் : 3 அஸ்ஸலாம்' என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும்.7 அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு சலாம் (முகமன்) கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) சலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். (4:86)8
6230. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது 'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ற கூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆக இருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில் இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் என அமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்' என்றார்கள்.9
Book : 79
பாடம் : 4 சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது.
6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.10
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 79
பாடம் : 5 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.
6232. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 79
பாடம் : 6 நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.
6233. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 79
பாடம் : 7 சிறியவர் பெரியவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.
6234. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 79
பாடம் : 8 (மக்களிடையே) சலாமைப் பரப்புவது
6235. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவையாவன:)
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது. 4. நலிந்தவருக்கு உதவுவது. 5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது. 6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது. 7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.
(பின்வருவனவற்றைச் செய்யக் கூடாதென) தடைசெய்தார்கள்.
1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது. 3. மென்பட்டுத் திண்டில் அமர்வது. 4. சாதாரணப் பட்டு அணிவது. 5. அலங்காரப் பட்டு அணிவது. 6. எம்ப்திய பட்டு அணிவது. 7. தடித்த பட்டு அணிவது.11
Book : 79
பாடம் : 9 அறிமுகமானவருக்கும் அறிமுகமில்லா தவருக்கும் சலாம் சொல்வது.
6236. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள்.12
Book : 79
6237. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.
என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.13
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து மூன்று முறை செவியேற்றுள்ளேன்.
Book :79
பாடம் : 10 பர்தா குறித்த வசனம் (அருளப்பெறுதல்).
6238. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது எனக்குப் பத்து வயது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வி(ன் இறுதிப் பகுதியி)ல் பத்தாண்டு காலம் நான் அவர்களுக்குச் சேவகம் செய்தேன். பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்ளில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். அது குறித்து உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் என்னிடம் கேட்டு(த் தெரிந்து) உள்ளார்கள்.
(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணந்து தாம்பத்திய உறவைத் தொடங்கிய சந்தர்ப்பத்தில்தான் (இந்த வசனம்) ஆரம்பமாக அருளப்பெற்றது. நபி(ஸல்) அவர்கள் ஸைனபின் மணாளராக இருந்தபோது (வலீமா - மணவிருந்துக்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகிலேயே நீண்ட நேரம் இருந்தனர். அவர்கள் வெளியேறட்டும் என்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நானும் அவர்களுடன் வெளியேறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடக்க, நானும் அவர்களுடன் நடந்தேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். பிறகு அக்குழுவினர் வெளியேறிப்பார்கள் என்று எண்ணியவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸைனப் அவர்களின் இல்லத்திற்குத்) திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். ஸைனப்(ரலி) அவர்களிடம் வந்தபோது அந்தக் குழுவினர் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மீண்டும்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். (இப்போதும்) ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போது அந்தக் குழுவினர் வெளியேறிச் சென்று விட்டிருந்தனர். அப்போதுதான் பர்தா தொடர்பான (திருக்குர்ஆன் 33:53 வது) இறைவசனம் அருளப்பெற்றது. உடனே எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் திரையிட்டார்கள்.
Book : 79
6239. அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்கள் வந்து (வலீமா - மணவிருந்து) உண்டுவிட்டு, பிறகு (எழுந்து செல்லாமல் அங்கேயே) அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்குத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. இதைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றபோது மக்களில் சிலரும் எழுந்து சென்றனர். மற்றவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (வெளியில் சென்றுவிட்டு) நபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைய வந்தபோது அந்தச் சில பேர் (அப்போதும்) அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவர்களும் எழுந்து நடந்தார்கள். (மீண்டும் வெளியில் சென்றிருந்த) நபி(ஸல்) அவர்களிடம் நான் (சென்று அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டதைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். (அவர்களுடன்) நானும் நுழையப் போனேன். அப்போதுதான் எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் (ஹிஜாப்) திரையிட்டார்கள்.
மேலும், உயர்ந்தவனான அல்லாஹ் 'இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
'விருந்தளிப்பவர் (அவையிலிருந்து) எழுவதற்கும் வெளியே செல்வதற்கும் விருந்தாளிகளிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை' என்றும், 'விருந்தாளிகள் எழுந்து செல்லட்டும் என்ற நோக்கில் தாம் எழுந்து போகத் தயாராவது போல் காட்டலாம்' என்றும் இந்த ஹதீஸிலிருந்து (நமக்கு) மார்க்கச் சட்டம் கிடைக்கிறது. 15
Book :79
6240. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'தங்கள் துணைவியரை பர்தா அணியச் சொல்லுங்கள். (அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)' என்று கூறுவார்கள். ஆனால், (அப்போது) நபி(ஸல்) அவர்கள் (ஒன்றும்) செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களின் துணைவியரான நாங்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள திறந்த வெளியான) 'மனாஸிஉ' எனுமிடத்திற்குச் செல்வோம்.
(ஒரு நாள் நபியவர்களின் துணைவியார்) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) அவர்கள் (அங்கு செல்ல) வெளியேறினார்கள். அவர் உயரமான பெண்ணாயிருந்தார். அப்போது ஓர் அவையில் அமர்ந்திருந்த உமர்(ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, 'சவ்தாவே! தங்களை நாம் அடையாளம் கண்டுகொண்டோம்' என்று பர்தா சட்டம் அருளப்பெற வேண்டுமென்ற பேரார்வத்தில் கூறினார்கள். பிறகு, அல்லாஹ் பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.16
Book :79
பாடம் : 11 (பார்க்கக் கூடாததைப்) பார்க்க நேரும் என்பதாலேயே (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல் (சட்டமாக்கப்பட்டது).
6241. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப்பார்த்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் மோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது' என்றார்கள். 17
Book : 79
6242. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் 'கூர்முனையுடன்' அல்லது 'கூர்முனைகளுடன்' அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரின் கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.
Book :79
பாடம் : 12 மர்ம உறுப்பு அல்லாத (மற்ற) உறுப்புகளின் விபசாரம்.
6243. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளதை விடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை. 18
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book : 79
பாடம் : 13 மும்முறை சலாம் சொல்லி அனுமதி கோருவது.19
6244. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்.20
Book : 79
6245. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா(ரலி) அவர்கள் வந்து, 'நான் உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர்(ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை' என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், '(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்' என்று கூறினார்கள்' என்றேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்' என்றார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?' என்று கேட்டார்கள்.
அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்' என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா(ரலி) அவர்களுடன் சென்று 'நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்' என்று உமர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்'
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :79
பாடம் : 14 (முன்பே) அழைக்கப்பட்ட ஒருவர் வந்தால் அவரும் அனுமதி கோர வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவரை அழைத்ததே அவருக்கு அனுமதிதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21
6246. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்களின் இல்லத்திற்குள்) நுழைந்தேன். அங்கு அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் இருக்கக் கண்டார்கள். உடனே (என்னிடம்) 'அபூ ஹிர்! திண்ணை வாசிகளிடம் சென்று, 'அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார்கள்.
எனவே, நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (இறைத்தூதர்(ஸல்) அவர்களின்) இல்லத்தினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் நுழைந்தனர். 22
Book : 79