623. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10
பாடம் : 14 பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும்,தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
624. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.'
என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார்.
Book : 10
625. அனஸ்(ரலி) அறிவித்தார்.
முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுன்னத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
Book :10
பாடம் : 15 இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.
626. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஃபஜ்ரு நேரம் வந்து, முஅத்தின் ஃபஜ்ருக்கு பாங்கு சொன்னதற்கும் ஃபஜ்ருத் தொழுகைக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரணடு ரக்அத்துகள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
Book : 10
பாடம் : 16 பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. விரும்பியவர் அதைத் தொழுதுகொள்ளலாம்.
627. அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார்.
'ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு' என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை 'விரும்பியவர்கள் தொழலாம்' என்றார்கள்.
Book : 10
பாடம் 17 பயணத்தில் ஒரேயொருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும்.
628. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்' என்று கூறினார்கள்.
Book : 10
பாடம் : 18 பயணிகள் கூட்டமாகச் செல்லும் போதும் (ஹஜ்ஜின்போது) அரஃபா முஸ்த-ஃபாவில் இருக்கும் போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான இரவுகளிலும் மழை பெய்யும் நேரங்களிலும் உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள்(அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்') என்று அறிவிப்புச் செய்வதும்.
629. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தோம். (லுஹர் தொழுகைக்கு) முஅத்தின் பாங்கு சொல்ல ஆயத்தமானபோது 'கொஞ்சம் பொறு' என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து முஅத்தின் பாங்கு சொல்லத் தயாரான போதும் மலைக் குன்றுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாகும் வரை '(பாங்கு சொல்வதைப்) பிற்படுத்துங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறிவிட்டு, 'நிச்சயமாக இந்தக் கடும் வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும்' என்று கூறினார்கள்.
Book : 10
630. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10
631. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்' என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.
Book :10
632. நாஃபிவு அறிவித்தார்.
மக்காவை அடுத்துள்ள 'ளஜ்னான்' என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். மேலும் 'பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழை பெய்யும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்:
Book :10
633. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'அப்தஹ்' என்ற இடத்தில் இருந்தபோது அங்கு வந்த பிலால்(ரலி) தொழுகை நேரம் (வந்துவிட்டது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். பின்னர் பிலால் ஒரு கைத்தடியை எடுத்து வந்து அதை நபி(ஸல்) அவர்கள் முன் நாட்டிவிட்டுத் தொழுகைக்காக இகாமத் கூறினார்கள்.
Book :10
பாடம் : 19 தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா? அவர் பாங்கு சொல்லும் போது (ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும் தலையைத்) திருப்பவேண்டுமா? பாங்கு சொல்லும் போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை காதுக்குள் வைத்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை பாங்கு சொல்லும் போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை காதுகளில் வைக்க மாட்டார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், அங்கசுத்தி (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில் தவறில்லைஎனக் கூறினார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்வதற்காக) அங்கசுத்தி (உளூ) செய்வது (மார்க்கத் தில்) உள்ளது தான் ; நபிவழியே என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (உளூவுடனும் உளூ இல்லாமலும்) அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
634. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
பிலால்(ரலி) பாங்கு சொல்லும்போது (பாங்கை நீட்டிச் சொல்வதற்காக) தம் வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.
Book : 10
பாடம் : 20 எங்களுக்குத் தொழுகை தவறிவிட்டது என்று கூறலாமா? இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் வெறுப்பிற்குரியதாகக் கருதினார்கள். மாறாக அவர், (தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை' என்று கூறலாம் என்றார்கள். (பின்வரும் ஹதீஸில் தவறிப்போனதை' என்று நபி ளஸல்ன அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே,முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களுடைய கருத்தைவிட) நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்.
635. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் 'உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு '(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்' என்று பதில் கூறினர். 'அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 10
பாடம் : 21 தொழுகையில் போய்ச் சேர அவசர அவசர மாகச் செல்ல வேண்டாம். நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள், (இமாமுடன்) உங்களுக் குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப் போன (ரக்அத்)தைப் (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
636. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10
பாடம் : 22 (தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?) எப்போது எழ வேண்டும்?
637. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம்.'
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
Book : 10
பாடம் : 23 தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது. நிதானமாகவும் கண்ணிய மான முறையிலும் எழுந்து செல்ல வேண்டும்.
638. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம். அமைதியைக் கடைபிடியுங்கள்.'
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
Book : 10
பாடம் : 24 (இகாமத் சொன்ன பிறகு) ஏதாவது காரணத் திற்காகப் பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா?
639. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இகாமத் சொல்லப்பட்டு, வரிசைகள் சரி செய்யப்பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வந்தார்கள். அவர்களின் இடத்தில் நின்றதும் அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் 'உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் குளித்துவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும் வரை நாங்கள் அப்படியே நின்றிருந்தோம்.
Book : 10
பாடம் : 25 (இகாமத் சொல்லப்பட்ட பின்) இமாம், நான் திரும்பி வரும்வரை அப்படியே இருங்கள் என்று (மக்களிடம்) சொல்லிவிட்டுச் சென்றால் (அவர் வரும் வரை) அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.
640. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தங்கள் வரிசைகளைச் சரி செய்தனர். நபி(ஸல்) அவர்கள் வந்து முன்னே நின்றார்கள். அவர்களின் மீது குளிப்புக் கடமையாகி இருந்தால், 'உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். பின்னர் தலையிலிருந்து நீர் சொட்ட வந்து எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
Book : 10
பாடம் : 26 ஒருவர் நாம் தொழவில்லை' என்று சொல்லலாம்.
641. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
கந்தக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) வந்து 'இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் (அஸர்) தொழவில்லை' என்றார்கள். நோன்பு வைத்திருந்தவர்கள் நோன்பு துறந்த பின் இது நடந்தது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் தொழவில்லை' என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் 'புத்ஹான்' என்ற இடத்திற்குச் சென்றார்கள். உளூச் செய்து அஸர் தொழுதார்கள். அதன் பிறகு மஃரிபு தொழுதார்கள்.
Book : 10
பாடம் : 27 இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.
642. அனஸ்(ரலி) அறிவித்தார்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கிவிட்டனர்.
Book : 10