பாடம் : 34 (இறைவா) என்னால் எவரேனும் மன வேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
6304. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.2
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 80
6305. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்துவிட்டனர்' அல்லது 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப் பிரார்த்தனை உண்டு; அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்.' அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :80
பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து) ஓடுமாறு செய்வான். (71:10-12) அல்லாஹ் கூறுகின்றான்: (இறையச்சம் உடையோரான) அவர்கள் (பிறர் விஷயத்தில்) ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ,தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ (அந்த நிமிடமே மனம் வருந்தி) அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரு வார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்த(த)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135)
6306. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)
இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 3 பக-லும் இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).
6307. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)3
Book : 80
பாடம் : 4 பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவது (தவ்பா).4 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:(66:8ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) தவ்பத்தந் நஸூஹா' எனும் சொற்றொடருக்கு உண்மையான முறையில் தூய்மையான எண்ணத்தோடு (மனப்பூர்வ மாகப் பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல்' என்று பொருள்.
6308. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)
1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள்.
பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்:
2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான்.
இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book : 80
6309. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.5
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Book :80
பாடம் : 5 வலப் பக்கத்தின் மீது ஒருக்களித்து படுப்பது
6310. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவது வழக்கம். ஃபஜ்ர் (வைகறை) உதயமாம்விட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள்.
பிறகு பாங்கு சொல்பவர் வந்து தம்மை அழைக்கும் வரை தம் வலப் பக்கத்தின் மீது ஒருக்களித்துப் படுத்திருப்பார்கள்.6
Book : 80
பாடம் : 6 அங்க சுத்தி (உளூ) செய்து கொண்டு இரவில் உறங்குவது.
6311. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த' என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப்பேச்சாக ஆக்கிக்கொள்.
இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
'நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். ('நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்' என்பதற்கு பதிலாக) 'நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்' என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; 'நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்' என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.7
Book : 80
பாடம் : 7 உறங்கச் செல்லும் போது ஓத வேண்டியது
6312. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.
Book : 80
6313. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒருவருக்கு அறிவுரை கூறினார்கள். அப்போது 'நீ படுக்கைக்குச் செல்ல நினைத்தால், 'அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த, வபி நபிய்யக்கல்லதீ அர்சல்த்த' என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திருப்பினேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னை சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்.) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்) (இவ்வாறு பிரார்த்தனை செய்து நீ உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்துவிட்டால், (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய்' என்றார்கள்.8
Book :80
பாடம் : 8 வலக் கன்னத்திற்குக் கீழே வலக் கையை வைத்(து உறங்கு)தல்.
6314. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு உறங்கச் சென்ற பின்னால் தம் (வலக்) கையைத் தம் (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு, 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வஇலைஹிந் நுஷூர்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.9
Book : 80
பாடம் : 9 வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவது
6315. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ஸீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த' என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்துவிடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்' என்று கூறினார்கள்.
Book : 80
பாடம் : 10 இரவில் (இடையே) விழிக்கும் போது ஓதவேண்டியது.
6316. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள்.
பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். 'அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார்.
(உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.
Book : 80
6317. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹ்ஜ்ஜுத் (எனும் இரவுத் தொழுகை) தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்:
அல்லாஹும்ம! லக்கல் ஹம்து, அன்த்த நூருஸ் ஸமாவாத்தி, வல் அர்ளி, வமன் ஃபீஹின்ன. வ லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மன்ஃபீஹின்ன வ லக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்க ஹக்குன். வ வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வஸ்ஸாஅத்து ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்ஸகித்து. வ அலைக்க தவக்கல்த்து. வபிக்க ஆமன்த்து. வ இலைக்க அனப்த்து. வ பிக்க காஸகித்து. வ இலைக்க ஹாக்ககித்து. ஃபஃபக்ஃபிர்லீ மா கத்தகித்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. 'லா இலாஹ இல்லா அன்த்த' அல்லது 'லா இலாஹ ஃகைருக்க.
(பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றி உள்ளவர்களின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களை நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும், நீ உண்மையானவன். உன் வாக்கு உண்மையானது. உன்னுடைய கூற்று உண்மை. உன்னுடைய தரிசனம் உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. மறுமைநாள் உண்மை நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையானவர்கள். முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மையானவர்கள். இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன். உன்னிடம் நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே (என்னை மறுமையில்) முதலில் எழுப்புகிறவன். நீயே (என்னை இம்மையில்) இறுதியில் அனுப்பியவன். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை' அல்லது 'உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
Book :80
பாடம் : 11 உறங்கப் போகும் போது அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும் கூறுவது.
6318. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
(என் துணைவியார்) ஃபாத்திமா அவர்கள் (மாவு அரைக்கும்) திரிகை சுற்றியதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (என்னிடம்) முறையிட்டார். இது தொடர்பாக நபியவர்களிடம் தெரிவிக்கும் படி கூறினேன்.ன எனவே, ஒரு பணியாளரை (தமக்குத் தரும்படி) கேட்க நபி(ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அப்போது வீட்டில் இல்லாததால் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அது பற்றிக் கூறி(விட்டுத் திரும்பலா)னார்கள். நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் ஆயிஷா(ரலி) அவர்கள் விஷயத்தை தெரிவித்தார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்திருக்க முற்பட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்) அந்த இடத்திலேயே இருங்கள்' என்று கூறிவிட்டு எங்களுக்கு நடுவில் வந்து அமர்ந்தார்கள். அப்போது (என்னைத் தொட்டுக் கொண்டிருந்த) அவர்களின் பாதங்களின் குளிர்ச்சியை என்னுடைய நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.) 'பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் 'படுக்கைக்குச் சென்றதும்' அல்லது 'விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும். என்றார்கள்.
இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் 'சுப்ஹானல்லாஹ் என முப்பத்து நான்கு முறை கூற வேண்டும்' என்று அறிவித்தார்கள்.
Book : 80
பாடம் : 12 உறங்கப் போகும் போது இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதும் (குர்ஆன் அத்தியாயங்களை) ஓதுவதும்.
6319. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் இறைப் பாதுகாப்புக் கோரும் (112, 113, 114 ஆகிய மூன்று) அத்தியாயங்களை தம் மேனியில் தடவிக் கொள்வார்கள்.
Book : 80
பாடம் : 13
6320. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்:
பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்)விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.
Book : 80
பாடம் : 14 நள்ளிரவில் பிரார்த்திப்பது
6321. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சுபிட்சமும் உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையைநான் அங்கிகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறிகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 80
பாடம் : 15 கழிவறைக்குச் செல்லும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
6322. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
Book : 80
பாடம் : 16 அதிகாலையில் ஓத வேண்டிய பிரார்த்தனை
6323. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து' என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்' அல்லது சொர்க்கவாசியாவார்' காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்)
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 80