பாடம் : 28 தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது.
643. ஹுமைத் அறிவித்தார்.
நான் தாபித் அல் புனானி இடம் தொழுகைக்கு இகாமத் சொன்ன பின்பேசக் கூடியவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், 'தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் ஒருவர் வந்து நபி(ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதனால் அவர்கள் தொழுகைக்குத் தாமதமாக வந்தார்கள்' என்று அனஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸைக் கூறினார்.
Book : 10
பாடம் : 29 கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமையானதாகும். ஒரு தாய் (தன் மகன் மீதுள்ள) பாசம் காரணமாக இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால் அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
644. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10
பாடம் : 30 கூட்டுத் தொழுகையின் சிறப்பு. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாசலில்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் சேரச்) சென்றுவிடுவார்கள். அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்து விட்டிருந்தது. ஆகவே பாங்கும், இகாமத்தும் சொல்லி ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 10
646. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.'
என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :10
647. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் 'இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!' என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10
பாடம் : 31 ஃபஜ்ர் தொழுகையை (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவதன் சிறப்பு
648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.'
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் 'நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது' (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.
Book : 10
649. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10
650. உம்மு தர்தா(ரலி) அறிவித்தார்.
அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் நான் காணவில்லை!' எனக் கூறினார்கள்.
Book :10
651. 'யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :10
பாடம் : 32 லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே (சென்று) நிறைவேற்றுவது.
652. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10
653. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள். பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல்வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டி போட்டு முந்தி வந்து, அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராகி விடுவார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10
654. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10
பாடம் : 33 (கூட்டுத் தொழுகை முதலிய நற்செயல்கள் புரிவதற்காக எடுத்து வைக்கும்) கால் எட்டுகளின் அளவுக்கு நன்மையை எதிர் பார்க்கலாம்.
655. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஸலமாவின் மக்களே! காலடிகளை அதிகம் வைப்பதன் மூலம் நன்மையை நீங்கள் நாட வேண்டாமா?'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
'அவர்கள் செய்த செயல்களையும் அவர்களின் (விட்டுச் சென்ற) அடையாளங்களையும் நாம் எழுதுவோம்' (திருக்குர்ஆன் 36:12) என அல்லாஹ் குறிப்பிடுவது காலடிகளைத்தான் என முஜாஹித் கூறுகிறார்.
Book : 10
656. அனஸ்(ரலி) அறிவித்தார்.
பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். 'நீங்கள் அதிகமாகக் காலடிகள் எடுத்து வைத்து(த் தொழ வருவதன் மூலம்) நன்மையைப் பெற வேண்டாமா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
Book :10
பாடம் : 34 இஷாத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவதன் சிறப்பு.
657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10
பாடம் : 35 இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் ஜமாஅத்' ஆவர்.
658. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தொழுகை நேரம் வந்ததும் நீங்கள் பாங்கு, இகாமத் சொல்லுங்கள். உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்.'
என மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 10
பாடம் : 36 தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும், பள்ளி வாசல்களின் சிறப்பும்.
659. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், 'இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!' என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10
660. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10
661. ஹுமைத் கூறினார்:
'நபி(ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்களா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, 'ஆம்! ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் நடுப்பகுதி வரை தாமதப் படுத்தினார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர் எங்கள் பக்கம் வந்து 'மக்கள் தொழுதுவிட்டுத் தூங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர் பார்த்து இருக்கும் போதெல்லாம் தொழுகையல் இருந்தவர்களாகவே கருதப்படுவீர்கள்' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் மோதிரம் மின்னியதை நான் இப்பொழுது பார்ப்பதுபோல் இருக்கிறது' என்று அனஸ்(ரலி) கூறினார்.
Book :10
பாடம் : 37 பள்ளிவாசலுக்குச் சென்று வரும் மனிதர் அடையப் பெறும் சிறப்பு.
662. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10