பாடம் : 1 அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவ தில்லை. ஆயினும், நீங்கள் உறுதிப்பாட்டுடன் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற் கான குற்றப் பரிகாரம் (இது தான் ): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், (இவற்றில் எதற்கும்) சக்தி பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் இது தான் அவற்றுக்குரிய குற்றப் பரிகாரமாகும். எனவே, உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள். இவ்வாறு தன்னுடைய சட்டத் திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்து வோராய் திகழக்கூடும் என்பதற்காக! (5:89)
6621. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் சத்தியத்தை முறித்ததற்காக பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை (தாம் செய்த) எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள். மேலும் அவர்கள், 'நான் ஒரு சத்தியத்தைச் செய்து, அதன்பின்னர் (அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் நன்மை எதுவோ அதையே செய்வேன். சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தையும் செய்துவிடுவேன்' என்றார்கள்.2
Book : 83
6622. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து' என்றார்கள். 3
Book :83

6623. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை' என்றார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகள் கொண்டுவரப்பட்டன. எனவே, அவற்றின் மீது எங்களை ஏற்றி அனுப்பினார்கள். நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள்' அல்லது 'எங்களில் சிலர்', 'அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி(ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாது. நபி(ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் நாம் மீண்டும் சென்று அவர்கள் செய்த சத்தியத்தை) அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்' என்று சொல்லிக் கொண்டோம். அவ்வாறே நபி அவர்களிடம் சென்றோம். (அவர்கள் செய்த சத்தியத்தை நினைவுபடுத்தினோம்.) அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை, மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் 'சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே செய்வேன்' அல்லது 'சிறந்ததையே செய்துவிட்டு, சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்' என்றார்கள்.4
Book :83
6624. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.5
Book :83
6625. மேலும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சயத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும்.6
Book :83
6626. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (எனவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! - அதாவது பரிகாரம் செய்யட்டும்!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :83
பாடம் : 2 (சத்தியம் செய்யும் போது) வ அய்முல்லாஹி' என நபி (ஸல்) அவர்கள் கூறியது.7
6627. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, (இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால் (இது ஒன்றும் புதிதல்ல!) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் தான் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். வஅய்முல்லாஹி (அல்லாஹ்வின் மீதாணையாக!) அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். மக்களிலேயே (அவரின் புதல்வரான) இவர் (உசாமா) என் அன்புக்குரியவராவார்' என்றார்கள்.8
Book : 83
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்தார்கள்?9 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்யும் போது), என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! என்று கூறினார்கள்.10 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், (ஹுனைன் போரின்போது) லா ஹல்லாஹி இதன்' (இல்லை. அல்லாஹ் வின் மீதாணையாக!) என்று சொன்னார்கள்.11 (பெரும்பாலும் சத்தியம் செய்யும் போது) வல்லாஹி', பில்லாஹி', தல்லாஹி' என்று சொல்லப்படுவதுண்டு.12
6628. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக!' என்பது நபி(ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)யமாக இருந்தது.13
Book : 83
6629. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயம் இறைவழியில் செலவழிக்கப்படும்.
என ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.14
Book :83
6630. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(தற்போதுள்ள பைஸாந்திய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயமாக இறைவழியில் செலவழிக்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.15
Book :83
6631. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :83
6632. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை (நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது)”. என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்றார்கள். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் “இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்)” என்று கூறினார்கள்.
Book :83
6633. & 6634. அபூஹுரைரா (ரலி) ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது
இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள் என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் ஆம் அல்லாஹ்வின் தூதரே* அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்* என்னைப் பேச அனுமதியுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், பேசுங்கள் என்றார்கள். அந்த மனிதர், என் மகன் இவரிடம் அஸீஃப் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அஸீஃப் என்பதற்குக் கூலியாள் என்று பொருள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். ஆகவே, மக்கள் என்னிடம், உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கிடினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறத்துக்) கேட்டேன். அவர்கள், (திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவருடைய மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள் என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக* உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன், உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும் என்று கூறிவிட்டு,, அவருடைய மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே,, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.
Book :83
6635. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'பனூ தமீம், பனூ ஆமிர் இப்னு ஸஅஸமு, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழுவிய) அஸ்லம், ஃம்ஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் சிறந்தோரென்றால், (முதலில் கூறிய பிரபலமான) அந்தக் குலத்தார் நஷ்டமும் இழப்பும் அடைந்தவர்கள்தாமே!' என்று கேட்டார்கள். தோழர்கள் 'ஆம்' என்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (அஸ்லம் முதலான) இவர்கள் (பனூ தமீம் முதலான) அவர்களைவிட(ப் பல மடங்கு) சிறந்தவர்கள்' என்று கூறினார்கள்.19
Book :83
6636. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை ('ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!' என்று கூறினார்கள்.
பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து 'இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்' என்று கூறிவிட்டு '(இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்' என்று கூறினார்கள்.
அபூ ஹுமைத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள்.
இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றார்கள். (வேண்டுமானால்,) அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.20
Book :83
6637. அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21
Book :83
6638. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிக்' என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.
Book :83
6639. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) சுலைமான்(அலை) அவர்கள் (ஒரு முறை), 'நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர் 'இன்ஷாஅல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்' என்று கூறினார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை. (மறந்துவிட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர்களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத் தாம் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள் அனைவரும் இறைவழியில் அறப்போர் புரிகிற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 22
Book :83
6640. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து) 'இதைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஸஅத்(பின் முஆத்) அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை' என்று கூறினார்கள்.
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா(ரஹ்) மற்றும் இஸ்ராயீல்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக' என்பது இடம் பெறவில்லை.23
Book :83