பாடம் : 38 தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
663. அப்துல்லாஹ் இப்னுமாலிக்(ரலி) அறிவித்தார்.
இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒருவர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிரைச் சூழ்ந்தனர். 'ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா?' என்று அம்மனிரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.
Book : 10
பாடம் : 39 ஜமாஅத்தை விட்டுவிடுவதற்குரிய நோயாளியின் நோயின் அளவு.
664. அஸ்வத் கூறினார்:
ஒரு முறை நாங்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்குச் சில நாள்களுக்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த பொழுது பாங்கும் சொல்லப்பட்டது. அப்பொழுது 'மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்கரிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அபூ பக்ர் மென்மையான உள்ளமுடையவர்; உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது' என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி(ஸல்) அவர்கள் முதலில் கூறியவாறே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது, 'நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் சொல்லுங்கள்!' என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை உணர்ந்தபோது, இரண்டு ஸஹாபாக்களின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் போட்டவாறு, கால்களைத் தரையில் கோடிட்டவாறு புறப்பட்டதை பார்த்தேன். நபி(ஸல்) அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) இமாமுடைய இடத்திலிருந்து பின்வாங்க முயன்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையினால், 'உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அபூ பக்ர்(ரலி)யின் பக்கத்தில் அமர்த்தப் பட்டார்கள்' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூ பக்ரும் அபூ பக்ருடைய தொழுகையைப் பின்பற்றி மக்களும் தொழுதார்களா? என்று அஃமஷ் இடம் கேட்கப் பட்டபோது 'ஆம்' எனத் தம் தலையை அசைத்துப் பதில் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் வந்து அபூ பக்ர்(ரலி) உடைய இடப்பக்கமாக அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நின்று தொழுதார்கள் எனக் காணப்படுகிறது.
Book : 10
665. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாகி அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடையில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.
இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'இல்லை' என உபைதுல்லாஹ் பதிலளித்தார். 'அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book :10
பாடம் : 40 மழை மற்றும் (கடுங்காற்று போன்ற) வேறு காரணங்களை முன்னிட்டு ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தம் இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு.
666. நாஃபிவு கூறினார்:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றார்கள். 'குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள்' என்றும் கூறினார்கள்.
Book : 10
667. மஹ்மூத் இப்னு ரபீஃ கூறினார்:
பார்வையற்ற இத்பான்பின் மாலிக் தம் சமுதாயத்திற்கு இமாமத் செய்பவராக இருந்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது! நானோ பார்வையற்றவன். எனவே நீங்கள் என் வீட்டில் வந்து தொழுங்கள். அவ்விடத்தை நான் தொழுமிடமாக்கிக் கொள்கிறேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்று 'நான் எங்கே தொழ வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். அவர் வீட்டில் ஓர் இடத்தைக் காட்டினார். அவ்விடத்தை நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
Book :10
பாடம் : 41 (மழை குளிர் போன்ற நேரங்களில்) வந்தி ருப்பவர்களுக்கு மட்டும் இமாம் தொழுகை நடத்தலாமா?வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மழையிருந்தாலும் (குத்பா) உரை நிகழ்த்தவேண்டுமா?
668. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் கூறினார்:
மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்' என இப்னு அப்பாஸ் கூறினார்கள்.
'(மழைக் காலங்களில் பள்ளியில் தொழுமாறு உங்களுக்கு நான் கூறிக்) கஷ்டம் கொடுத்து நீங்களும் பள்ளிக்கு வந்து உங்களுடைய கால் மூட்டுகளால் மண்ணை மிதிக்கச் செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 10
669. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் மழை பெய்து, அதனால் பள்ளி வாசலின் முகடு ஒழுக ஆரம்பித்தது. பேரீச்ச மட்டையினால் பள்ளி வாசல் முகடு வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூத செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.
Book :10
670. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், 'என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை' எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரின் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பாயை விரித்து அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தினார். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
ஜாருத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் 'நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுகை தொழுதார்களா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு 'அன்றைய தினத்தைத் தவிர அவர்கள் லுஹா தொழுததை நான் பார்க்கவில்லை' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10
பாடம் : 42 உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?) (இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்). ஒருவர் தமது (அத்தியாவசியத்) தேவைகளை நோக்கிச் சென்று (அவற்றை முடித்துவிட்டு) தமது உள்ளம் ஓய்வாக இருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபடுவதே புத்திசா-த் தனமாகும் என அபூத் தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
671. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.'
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 10
672. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இரவு நேர உணவு தயாராகி விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள்.'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10
673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.)
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இப்னுஉமர்(ரலி), உணவுவைக்கப் பட்டுத் தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்படுமானால் உணவு அருந்தி முடிவது வரை தொழுகைக்கு வர மாட்டார்கள். அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் ஓதுவதைச் செவியுறுவார்கள் என நாஃபிவு கூறுகிறார்.
Book :10
674. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப் பட்டு எழுந்து விட வேண்டாம்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10
பாடம் : 43 இமாமின் கையில் உணவு இருக்கும் நிலையில் அவரைத் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்...
675. அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொடைக் கறியை வெட்டித் துண்டாக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு அழைக்கப்பட்டதும் கத்தியை எறிந்துவிட்டு எழுந்து உளூச் செய்யாமல் தொழுதார்கள்.
Book : 10
பாடம் : 44 வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும்.
676. அஸ்வத் கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்' என ஆயிஷா(ரலி) கூறினார்.
Book : 10
பாடம் : 45 நபி (ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழி முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது.
677. அபூ கிலாபா கூறினார்:
எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து 'இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்' என்று கூறினார்கள்.
நான் அபூ கிலாபாவிடம் 'நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்' என்று கேட்டேன். '(அதற்கு அம்ர் இப்னு ஸலாமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று தொழுதார்கள்' எனக் கூறினார்கள். அந்த மனிதர் வயதானவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜுதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என்று அய்யூப் அறிவித்தார்.
Book : 10
பாடம் : 46 கல்வியும் சிறப்பும் உடையவரே தலைமை தாங்கித் தொழுவிக்க மிகவும் தகுதியுடையவராவார்.
678. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையானபோது, 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்' என்றார்கள். அப்போது ஆயிஷா(ரலி) 'அவர் இளகிய மனதுடையவர். நீங்கள் நின்ற இடத்தில் அவர் நின்றால், அவரால் மக்களுக்குத் தொழுகை நடத்த முடியாது' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்' என்றார்கள். ஆயிஷா(ரலி) தாம் கூறியதைத் திரும்பவும் கூறினார்கள். 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்! நிச்சயமாகப் பெண்களாகிய நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ பக்ரிடம் ஒருவர் வந்து (சொன்னார்). நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது அபூ பக்ர்(ரலி) (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.
Book : 10
679. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது 'மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்ரிடம் கூறுங்கள்' எனக் கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
மேலும், 'அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி)விடமும் கூறினேன்.
அவ்வாறே ஹப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, 'நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா(ரலி) என்னிடம் 'உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை' எனக் கூறினார்கள்.
Book :10
680. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களின் முகம் புத்தகத்தின் காகிதம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூ பக்ர்(ரலி), நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னாலுள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.
Book :10
681. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மூன்று நாள்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டதும் அபூ பக்ர்(ரலி) தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்தபோது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பார்த்துத் தொழுகை நடத்துமாறு தங்கள் கையினால் சைகை செய்து, திரையைப் போட்டு (விட்டு உள்ளே சென்று)விட்டார்கள். பின்னர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.
Book :10
682. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமானபோது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்' என்றார்கள். ஆயிஷா(ரலி), 'அபூ பக்ர் இளகிய உள்ளம் படைத்தவர்; அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்து விடும்' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்' என்றார்கள். ஆயிஷா(ரலி) தம் பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள். நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்' என்றார்கள்.
Book :10