பாடம் தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை2 பாடம் : 1 விபசாரமும் குடியும் ளநபி (ஸல்) அவர்கள் கூறியதாகன இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் விபசாரம் புரியும் போது, இறை நம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3
6772. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அதில் கொள்ளையடிப்பது பற்றிக் கூறப்படவில்லை.
Book : 86
பாடம் : 2 மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை.5
6773. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 86
பாடம் : 3 வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது.
6774. உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
குடி போதையிலிருந்து 'நுஐமான்' என்பவர், அல்லது 'அவரின் புதல்வர்' நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6
Book : 86
பாடம் : 4 பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.
6775. உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
போதையிலிருந்து 'நுஐமான்' என்பவர், அல்லது 'அவரின் புதல்வர்' நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் (மிகவும்) வேதனைப்பட்டார்கள். மேலும், அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனவே, அவர்கள் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அவரை அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.
Book : 86
6776. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.
Book :86
6777. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்' என்றார்கள்.
Book :86
6778. அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.
Book :86
6779. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும், உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம் மது அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள் கையாலும் காலணியாலும் மேலங்கியாலும் அடிப்போம்.
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) நாற்பது சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். (மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.
Book :86
பாடம் : 5 குடிகாரனை சபிப்பது வெறுக்கப்பட்ட தாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.
6780. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று கூறினார்கள்.
Book : 86
6781. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
போதையிலிருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பியபோது ஒருவர் (அவரைப் பார்த்து), 'அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள்' என்றார்கள்.
Book :86
பாடம் : 6 திருடன் திருடுகின்றபோது...
6782. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரிகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.7
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 7 திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.8
6783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.
Book : 86
பாடம் : 8 தண்டனைகள் (குற்றங்களுக்கான) பரிகாரமாகும்.
6784. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; விபசாரம் செய்வதில்லை என்று என்னிடம் உறுதிமொழி கூறுங்கள்' என்று கூறி, இது தொடர்பான (திருக்குர்ஆன் 60:12 வது) வசனத்தை முழுவதும் ஓதினார்கள். மேலும், இந்த உறுதிமொழியை உங்களில் நிறைவேற்றுகிறவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து அதற்காக அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம்விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் (அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.) அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' என்றார்கள்.9
Book : 86
பாடம் : 9 ஓர் இறைநம்பிக்கையாளர் குற்றவியல் தண்டனைக்காகவோ (மனித) உரிமை (மீறலு)க்காவோ தவிர, (வேறு எந்தக் காரணங்களுக்காவும் வேதனை அனுப விப்பதிலிருந்து) காக்கப்பட வேண்டும்.
6785. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), 'மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியும்?' என்று கேட்டார்கள். மக்கள், 'இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்' என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள், 'மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இதோ இந்த ஊர் '(மக்கா') தான்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்' என்று கூறிவிட்டு, 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?' என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், 'ஆம்' என்று நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர். பிறகு, 'உங்களுக்கு அழிவுதான்' அல்லது 'உங்களுக்குக் கேடுதான்'! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்கள் நீங்கள் மாறிவிடவேண்டாம்' என்றார்கள்.10
Book : 86
பாடம் : 10 குற்றவியல் தண்டனைகளை நிலை நாட்டுவதும், இறைவனின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும் போது நடவடிக்கை எடுப்பதும்.
6786. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென என்று எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர.11
Book : 86
பாடம் : 11 உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவர் மீதும் தண்டனையை நடைமுறைப்படுத்துவது.
6787. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
('மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களைவிட்டு விடுவார்கள். எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்' என்றார்கள்.12
Book : 86
பாடம் : 12 ஆட்சியாளரிடம் வழக்கு சென்றுவிட்டால் தண்டனை(யைக் கைவிடுவது) தொடர்பாகப் பரிந்துரைப்பது வெறுக்கப்பட்டதாகும்.
6788. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?' என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?' என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.
Book : 86
பாடம் : 13 திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள் எனும் (5:38ஆவது) வசனத்தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.14 அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற் காக) முன்கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15 திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தை விட்டுவிட்டு) இடக் கரம் துண்டிக்கப் பட்டது. இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அவ்வளவுதான். (இனி வலக் கரம் துண்டிக்கப்படாது) என்று கூறினார்கள்.
6789. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 86
6790. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :86
6791. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கால் தீனாருக்காக (பொற் காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப்படும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :86