6792. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :86
6793. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தை 'விடத் தாழ்ந்த பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புள்ளதாகும்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் முர்சலாக (தொடர் முறிந்ததாக) வந்துள்ளது.
Book :86
6794. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கவசம்' அல்லது 'தோல் கேடயத்தின்' விலையை விடத் தாழ்ந்த (விலையுள்ள) பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையதாகும்.
Book :86
6795. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதில்) 'கீமத்துஹு' என அறிவித்தார்கள் என்று லைஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இரண்டுக்கும் பொருள்: விலை)
Book :86
6796. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
Book :86
6797. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
Book :86
6798. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காகத் திருடனின் கையைத் துண்டித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதிலாக) 'கீமத்துஹு' (அதன் விலை) என அறிவித்தார்கள்.
Book :86
6799. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.16
Book :86
பாடம் : 14 திருடனின் பாவமன்னிப்புக் கோரிக்கை17
6800. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(திருட்டுக் குற்றம் புரிந்துவிட்ட 'மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்ற) ஒரு பெண்ணின் கையை நபி(ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அதன் பிறகு, அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். அப்போது நான் அவளுடைய தேவையை நபி(ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி(த் திருந்தி)யிருந்தாள்.18
Book : 86
6801. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய்வதில்லை' என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்குகிறேன். உங்களில் (இவற்றை) நிறைவேற்றுகிறவரின் பிரதிபலன் அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.19
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
கை வெட்டப்பட்டதற்குப் பின் திருடன் பாவமன்னிப்புக்கோரி மனம் திருந்திவிட்டால் அவனுடைய சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறே குற்றவியல் தண்டனைகள் பெற்ற அனைவரும்; அதைச் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவர்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்.
Book :86
பாடம் : 15 இறைமறுப்பாளர்கள் மற்றும் மதம் மாறியோரில் வன்முறையாளர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் தொடுத்து, பூமியில் கலகம் விளைவித்துக் கொண்டி ருப்போரின் தண்டனை இது தான் : அவர்கள் கொல்லப்பட வேண்டும். அல்லது தூக்கிலடப்பட வேண்டும். அல்லது மாறுகை, மாறுகால் வெட்டப்பட வேண்டும். அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். (5:33)20
6802. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'உக்ல்' குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரைவிட்டுவிடச் செய்தார்கள்.21
Book : 86
பாடம் : 16 மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோரின் காயங்களுக்கு மருந்திடாமல் அவர்கள் மாண்டுபோகும் வரை நபி (ஸல்) அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.
6803. அனஸ்(ரலி) அறிவித்தார்.
உரைனா குலத்தாரின் கை கால்களை நபி(ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கம் வரை அவர்களின் காயங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.22
Book : 86
பாடம் : 17 மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோருக்கு அவர்கள் சாகும்வரை தண்ணீர் தரப்பட வில்லை.
6804. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஏழைகள் மற்றும் அகதிகளின் சாவடியாக அமைந்திருந்த) திண்ணையில் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரின் (பொறுப்பிலிருக்கும்) ஒட்டகங்களை நீங்கள் சென்றடைவதைத் தவிர (வேறு வழி இருப்பதாக) நான் காணவில்லை' என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அந்த ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நலமும் உடல் வளமும் பெற்றனர். பிறகு (அந்த ஒட்டகங்களின்) மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது இரைந்து சப்தமிட்டபடி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பிடித்து வருவதற்காகச் சிலரை அனுப்பி வைத்தார்கள். பகல் பொழுது உச்சிக்கு வருவதற்குள் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பிடித்துக் கொண்டுவரப்பட்டார்கள். அப்போது ஆணிகளை பழுக்கக் காய்ச்சி கண் இமைகளின் ஓரங்களில் சூடிடுமாறு பணித்தார்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டச் செய்து அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அப்படியேவிட்டுவிடச் செய்தார்கள். பிறகு, மதீனாவின் புறநகரிலிருந்த 'ஹர்ரா'ப் பகுதியில் அவர்கள் போடப்பட்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு நீர் கேட்டுக் கொண்டிருந்தனர். இறக்கும்வரை அவர்களுக்குக் குடிப்பதற்கு நீர் தரப்படவில்லை.
(அறிவிப்பாளர்) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள்.
Book : 86
பாடம் : 18 வன்முறையாளர்களின் கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச்செய்தது.
6805. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'உக்ல்' அல்லது 'உரைனா' (குலத்தாரில் பத்துப்பேருக்கும் குறைவான) சிலர் மதீனா வந்தனர். அப்போது (அவர்கள் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டனர். எனவே) நபி(ஸல்) அவர்கள் பால் தரும் ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் (சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும்) அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அவர்கள் மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். அதிகாலையில் இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களைத் தேடி ஆட்களை அனுப்பிவைத்தார்கள். சூரியன் உச்சியை அடைவதற்குள் அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார்கள். அப்போது அவர்களின் கை கால்களைத் தரித்து அவர்களின் கண்களில் சூடிடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு, அவர்கள் ஹர்ராப் பகுதியில் எறியப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப்படவில்லை.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த (உக்ல்) குலத்தார் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்ட பின் நிராகரித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்செயல்களில் ஈடுபட்டார்கள். (எனவேதான் கொடுஞ் செயல் புரிந்த அவர்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது.)
Book : 86
பாடம் : 19 மானக்கேடான செயல்களைக் கைவிட்ட வரின் சிறப்பு.23
6806. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1. நீதிமிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்.
6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.
7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 24
Book : 86
6807. 'தம் இரண்டு கால்களுக்கிடையே உள்ளத(ான மர்ம உறுப்பி)ற்கும், தம் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ளத(ான நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.25
Book :86

பாடம் : 20 விபசாரம் புரிவோருக்கு நேரும் பாவம் அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவனின் உண்மையான அடியார்கள்) விபசாரம் செய்ய மாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். திண்ணமாக! அது மானங்கெட்ட செயலாக வும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (17:32).
6808. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் விபசாரம் பம்ரங்கமாக நடைபெறுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவதும் 'மறுமை நாளில் அடையாளங்களில் உள்ளதாகும்; அல்லது 'இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது'.
Book : 86
6809. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும் அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான்.26
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
'இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்?' என்று நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இவ்வாறுதான்' என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். 'அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது' என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக் காட்டினார்கள்.
Book :86
6810. & 6811. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்' என்று சொன்னார்கள். 'பிறகு, எது (பெரிய பாவம்)?' என்று கேட்டேன். அவர்கள், 'உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்' என்றார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்' என்றார்கள்.
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பாளர் அம்ர் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ(ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுக்கும் அபூ வாயில்(ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூ மைசரா(ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரைவிட்டுவிடுக!விட்டுவிடுக! என்று கூறினார்கள்.
Book :86