6841. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்து 'தவ்ராத்' வேதத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபசாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்களுக்குச் சாட்டையடி வழங்கப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.
(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை தழுவிய) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை (ரஜ்கி) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது' என்றார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை பற்றிக் கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தார். அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது.
யூதர்கள், 'இவர் (-அப்துல்லாஹ் இப்னு சலாம்) உண்மையே சொன்னார், முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது' என்றார்கள். உடனே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கிடுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண் அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அவளின் மீது கவிழ்ந்து மறைத்துக் கொள்வதை பார்த்தேன்.55
Book :86
பாடம் : 39 ஒருவர் நீதிபதியிடமும் பொதுமக்களிடமும் தம் மனைவி மீதோ, மற்றவரின் மனைவி மீதோ விபசாரக் குற்றம் சாட்டினால், அவளுக்கு ஆளனுப்பி அந்தக் குற்றச்சாட்டு குறித்து நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமா?
6842. & 6843. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், '(நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள்' என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார். (பின்னர் கிராமவாசியான முதல் நபர்) 'என்னைப் பேச அனுமதியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'பேசு' என்றார்கள். அவர், 'என் மகன், இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் (இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூற ஆடுகளையும் என்னுடைய அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையை வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர்' என்றார்.
இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: உம்முடைய ஆடுகளும் உம்முடைய அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்படவேண்டும்' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகள் வழங்கினார்கள். ஓராண்டுக் காலத்திற்கு அவரின் மகனை நாடு கடத்தினார்கள். (அருகிலிருந்த) உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம், 'அந்த மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!' என்று கூறினார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரணை செய்தபோது அவளும் (தன்னுடைய குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். எனவே அவளுக்கு உனைஸ்(ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.56
Book : 86
6844. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தம் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து), 'இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் தண்ணீரில்லாத இடத்தில் தடுத்து (தங்கவைத்து)விட்டாயே!' எனக் கடிந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் தங்களின் கையால் என் இடுப்பில் குத்த ஆரம்பித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலை என் மடிமீது இருந்த காரணத்தாலேயே நான் அசையாது இருந்தேன். அப்போது அல்லாஹ் 'தயம்மும்' உடைய வசனத்தை அருளினான்.59
Book :86
6845. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் கழுத்தாணியை நான் தொலைத்துவிட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்கநேரிட்டபோது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், 'ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்துவிட்டாயே!' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்தால் நான் அசையாடிதிருந்தேன். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியினால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது... (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :86
பாடம் : 41 ஒருவர் தம் மனைவியுடன் அந்நிய ஆடவர் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டு அவரைக் கொன்று விட்டால் (என்ன சட்டம்)?
6846. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், 'என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்' என்றார்கள்.60
Book : 86
பாடம் : 42 குறிப்பால் உணர்த்துவது தொடர்பாக வந்தவை.61
6847. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)' என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்றார். 'அவற்றின் நிறம் என்ன?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் 'சிவப்பு' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் இருக்கின்றதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என கருதுகிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக்கூடும்' என்றார்கள்.62
Book : 86
பாடம் : 43 கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற் காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63
6848. அபூ புர்தா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
Book : 86
6849. அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்:
'அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :86
6850. அபூ புர்தா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
Book :86
6851. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர் நோன்பு நோற்க வேண்டாமென்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் 'அவ்வாறாயின், நீங்கள் தொடர் நோன்பு நோற்கின்றீர்களே, இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கிற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மக்கள் மறுத்தபோது ஒரு நாள் தொடர் நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர் நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மக்கள் மறுத்தபோது ஒரு நாள் தொடர் நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர் நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில் - கூறினார்கள்.64
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :86
6852. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (நிறுக்கப்படாமல், அளக்கப்படாமல்) குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.65
Book :86
6853. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!66
Book :86
பாடம் : 44 மானக்கேடான செயலையும் குற்றச் சாட்டையும் சந்தேகத்தையும் ஒருவர் சாட்சி இல்லாமல் வெளியிடுவது.
6854. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்து கொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், 'இவளை நான் என்னிடமே (மனைவியாக) வைத்துக் கொண்டிருந்தால் நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு பொய்யாகிவிடும்' என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) 'அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்' என்று ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன்.
பிறகு, 'அந்தப் பெண் அருவருக்கப்பட்ட தோற்றத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்' என்றும் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.67
Book : 86
6855. காசிம் இப்னு முஹம்மத்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.
பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத்(ரஹ்) அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறைவேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறைவேற்றியிருப்பேன்' என்று கூறியது இந்தப் பெண் தொடர்பாகத்தானா?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், 'இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டாள் எனப் பம்ரங்கமாகப் பேசப்பட்டு வந்த பெண் ஆவாள்' என்று கூறினார்கள்.68
Book :86
6856. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு நாள் மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம்(ரலி) அவர்கள், 'நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்' என்றார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.
(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.
(இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி(ஸல்) அவக்ள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.
(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், 'இல்லை; (அவன் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டுவந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.)' என்று பதிலளித்தார்கள்.69
Book :86
பாடம் : 45 பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது (அல்லாஹ் கூறுகின்றான்:) யார் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சாட்டையடி வழங்குங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள்தாம் தீயவர்கள். எனினும், (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி (தங்களைத்) திருத்திக்கொள்கிறார்களோ நிச்சயமாக (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். (24:4,5) (மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:) யார் இறைநம்பிக்கையுடைய ஒழுக்க முள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ,அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்ட வர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (24:23)
6857. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.70
Book : 86
பாடம் : 46 அடிமைகள் மீது அவதூறு கூறுதல்
6858. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 47 வழக்கு நடைபெறும் இடத்தில் இல்லாத ஒருவர் மீது ஆட்சித் தலைவரது உத்தரவின் பேரில் மற்றொரு மனிதர் தண்டனையை நிறைவேற்றலாமா? இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
6859. & 6860. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
(கிராமவாசி) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: நீங்கள் அல்லாஹ்வின் சட்டப்படியே எங்களிடையே தீர்ப்பளிக்கவேண்டும்' என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து 'அவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார். (பின்னர் அக்கிராமவாசி) 'என்னைப் பேச அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'பேசு!' என்று கூறினார்கள். அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு அறிஞர்கள் சிலரிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனை என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்கி) வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்' என்று கூறினார்.
இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்' என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று கேளுங்கள். அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்' என்றார்கள். அவ்வாறே (உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க) அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, உனைஸ் அவர்கள் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.71
Book : 86