6861. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் (நபியவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்' என்று கூறினார்கள். அந்த மனிதர், 'பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்' என்றார்கள். அந்த மனிதர், 'பிறகு எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்' என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், 'அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அருளினான்.3
Book :87
6862. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :87
6863. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும்.
என ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார்.
Book :87
6864. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book :87
6865. உபைதுல்லாஹ் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்,) 'இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என்னுடைய கை ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு அவன் (என்னைவிட்டுப்போய்) ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து) கொண்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னான். அவன் இதைச் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா?' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (வேண்டாம்) அவனைக் கொல்லலாம் அல்லவா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். இந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்' என்று கூறினார்கள்.4
Book :87
6866. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், 'இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனத்திற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?' என்று கேட்டார்கள்.5
Book :87
பாடம் : 2 ஓர் உயிரை வாழவைப்பவன் மக்கள் அனைவரையும் வாழவைப்பவனைப் போன்றவனாவன் எனும் (5:32ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) முறையின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள் கின்றாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.
6867. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களின் முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.6
Book : 87
6868. ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 7
Book :87
6869. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.8
இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.
Book :87
6870. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனுக்கு இணைகற்பிப்பதும் 'தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்' அல்லது பொய்ச் சத்தியம் செய்வதும்' பெரும் பாவங்களாகும்.
மற்றோர் அறிவிப்பில், 'இறைவனுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் 'தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்' அல்லது 'மனிதனைக் கொலை செய்வதும்' பெரும் பாவங்களாகும்' என்று வந்துள்ளது.
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.9
(மேற்காணும் இரண்டு அறிவிப்புகளில் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவித்தார்கள்.
Book :87
6871. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.
இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'பெரும் பாவங்கள்' என்று வந்துள்ளது.
Book :87
6872. உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஜுஹைனா' குலத்தைச் சேர்ந்த 'ஹுரக்கா' எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டோம். அப்போது அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றார். எனவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கி கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவரின் மீது பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'உசாமா! 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?' என்று கேட்டார்கள். நான் 'அவர் உயிரைப் காத்துக்கொள்ளவே (அவ்வாறு கூறினார்)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?' என்று திரும்பத் திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி) நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருக்குமே! என்று ஆசைப்பட்டேன்.10
Book :87
6873. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்விற்கு நாங்கள் எதனையும் இணை கற்பிக்கமாட்டோம்: திருடமாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்; அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்; கொள்ளையடிக்கமாட்டோம்; (எந்த நற்செயலிலும் உங்களுக்கு) மாறு செய்யமாட்டோம்; (இவற்றை நாங்கள் செய்யாமல்விட்டுவிட்டால்) எங்களுக்கு சொர்க்கம் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்தால் அதன் முடிவு அல்லாஹ்விடம் உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்துகொடுத்த தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.11
Book :87
6874. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.
Book :87
6875. அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு (அலீ(ரலி) அவர்களுக்கு) உதவுவதற்காக (காலதாமதமாக)ப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, 'எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'நான் இந்த மனிதருக்கு உதவச் சொல்கிறேன்' என்றேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். ஏனெனில், (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்கே செல்வார்கள்' என்றார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர். (நரகத்திற்குச் செல்வது சரி!) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கொல்ல வேண்டுமென்று இவர் பேராசை கொண்டிருந்தாரே!' என்று கூறினார்கள்.12
Book :87
பாடம் : 3 இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதி லாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசு களா)ல் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப் பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறை யில் அவனிடம் (இழப்பீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் யாராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு எனும் (2:178ஆவது) இறைவசனம். பாடம் : 4 ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் வரை கொலையாளியிடம் (ஆட்சித் தலைவர்) விசாரணை செய்வதும்,குற்றவியல் தண்டனைகளில் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதும்.13
6876. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், 'உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?' என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டது. (அச்சிறுமி 'ஆம்' என்று ஒப்புக்கொண்டாள்.) எனவே, அந்த யூதன் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டான். அவன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை அவனிடம் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். (அவன் ஒப்புக் கொண்டவுடன்) அவனுடைய தலை கல்லால் நசுக்கப்பட்டது. 14
Book : 87
பாடம் : 5 கல் அல்லது தடியால் (தாக்கிக்) கொலை செய்தால்...?15
6877. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி (வீட்டிலிருந்து) புறப்பட்டாள். அப்போது அவளின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னார் உன்னைத் தாக்கினாரா?' என்று கேட்டார்கள். அவள் (இல்லை என்று) தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், 'இன்னார் உன்னைத் தாக்கினாரா?' என்று கேட்டார்கள். அவள் அப்போதும் (இல்லை என்று) சைகை செய்தாள். தொடர்ந்து (மூன்றாம் முறையாக) அவளிடம் அவர்கள் 'இன்னாரா உன்னைத் தாக்கினார்?' என்று கேட்டபோது அவள் (ஆம் என்று கூறும் விதமாக) தலையை கீழ் நோக்கித் தாழ்த்தி சைகை செய்தாள். எனவே, அந்த யூதனை அழைத்து வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவனை அழைத்துவந்து விசாரித்தபோது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.) எனவே, இரண்டு கற்களுக்கிடையில் வைத்து அவ(னது தலையி)னை நசுக்கிக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
Book : 87
பாடம் : 6 அவர்களுக்கு நாம் அ(ந்த வேதத்)தில், உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங் களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழிவாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால்,அது அவருடைய பாவங்களுக்குப் பரிகார மாகும். யார் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! எனும் (5:45ஆவது) இறைவசனம்.
6878. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.
Book : 87
பாடம் : 7 (கல்லால் அடித்துக் கொலை செய்தவனுக் குக்) கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுவது.
6879. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நசுக்கிக்) தாக்கினான். அவளுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் அச்சிறுமி கொண்டு வரப்பட்டாள். அப்போது (அவளிடம்) நபி(ஸல்) அவர்கள், 'இன்னாரா உன்னைத் தாக்கினார்?' என்று கேட்டார்கள். அவள் 'இல்லை' என்று தலையால் சைகை செய்தாள். பிறகு இரண்டாவது முறை (வேறொரு நபர் குறித்து) நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது அப்போதும் 'இல்லை' என்று தலையால் சைகை செய்தாள். மூன்றாம் முறை நபி(ஸல்) அவர்கள் (கொலையாளியின் பெயர் கூறி) அவளிடம் கேட்டபோது அவள் 'ஆம்' என்று தலையால் சைகை செய்தாள். எனவே, இரண்டு கற்களுக்கிடையில் (அவன் தலையை வைத்து நசுக்கி) அவனைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.16
Book : 87
பாடம் : 8 கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு (இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய) இரண்டு யோசனைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
6880. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் தங்கள் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்தததற்கு பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் 'பனூலைஸ்' குலத்தாரில் ஒருவரை குஸாஆ குலத்தார் கொலை செய்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) கூறினார்கள்:
இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டு யானைப் படையை அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். மேலும், மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன் தூதருக்கும் நம்பிக்கையாளருக்கும் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் யுத்தம் புரியவே அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திம்டமின்றி (இங்கு) போரிடுதல் இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக்கூடாது. இதன் மரம் வெட்டப்படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர் யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டால் அவரின் உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு யோசனைகளில் சிறந்ததை அவர்கள் தேர்வு செய்யலாம்' என்று கூறினார்கள்.
அப்போது யமன்வாசிகளில் 'அபூ ஷாத்து' என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவருக்கு (என் உரையை) எழுதிக்கொடுங்கள்' என்றார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக்கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமானது) 'இத்கிர்' புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனென்றால், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்' என்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இத்கிர் புல்லைத் தவிர!' என்றார்கள். 17
அபூ நுஐம்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'யானைப்படை என்பதற்கு பதிலாக, 'கொலை செய்வதை' என்று இடம் பெற்றுள்ளது எனச் சிலர் அறிவித்துள்ளனர்.
உபைதுல்லாஹ் இப்னு மூஸா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'கொலையுண்டவரின் குடும்பத்தார் (சார்பாக) பழிவாங்கல்' என்று இடம் பெற்றுள்ளது.
Book : 87