6881. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்துவிட்டால்) பழிக்குப்பழி (ம்ஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக் கொண்டு கொலையாளியை மன்னித்துவீடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவேதான், அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்) இந்தச் சமுதாயத்தை நோக்கி 'இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுபவர் கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (இழப்பீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு' (திருக்குர்ஆன் 02:178) என்று கூறுகிறான்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'மன்னிப்பு அளித்தல்' ('அஃப்வ்') என்பது, வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்பதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.18
Book :87
பாடம் : 9 நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.
6882. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 87
பாடம் : 10 தவறுதலாக நிகழ்ந்துவிட்ட கொலைக்குப் பின் (கொல்லப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளியை) மன்னித்துவிடுவது.
6883. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். பின்னர் மக்களிடையே இப்லீஸ் புகுந்து), 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்' என்று கூவினான். எனவே, முஸ்லிம்களில் முன் அணியினர் பின் அணியினரை நோக்கித் திரும்பி (அவர்களைத் தாக்கத் தொடங்கி)னர். அப்போது முஸ்லிம்கள் அல்யமான்(ரலி) அவர்களைக் கொன்றுவிட்டனர். உடனே (அவரின் புதல்வர்) ஹுதைஃபா(ரலி) அவர்கள் 'என் தந்தை என் தந்தை' என்று கூறினார். (ஆயினும் எதிரி என்று நினைத்து) அவரின் தந்தையை மக்கள் கொன்றுவிட்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி) அவர்கள், 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று (கொலை செய்தவர்களை நோக்கிக்) கூறினார்கள். தோல்வியுற்றவர்(களான இணைவைப்பாளர்)களில் சிலர் தாயிஃப் நகருக்குச் சென்றுவிட்டனர்.19
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 87
பாடம் : 11 அல்லாஹ் கூறுகின்றான்: தவறாக அன்றி, ஓர் இறைநம்பிக்கை யாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதன்று. அவ்வாறு தவறாக எவரேனும் ஓர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதும் கொல்லப் பட்டவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதும் அதற்குப் பரிகாரமாகும்- அவருடைய குடும்பத்தார் (அதை மன்னித்து) தர்மமாக விட்டுவிட்டால் தவிரலி அதாவது கொலையுண்டவர் உங்களுடைய எதிரி சமூகத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளராக இருந்தால் அப்போது இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இழப்பீடு செலுத்த வேண்டிய தில்லை.) கொலையுண்டவர் உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பின்,அவருடைய குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதுடன் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலையும் செய்ய வேண்டும். இவ்வாறு (அடிமையை விடுதலை) செய்ய இயலாத போது,அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும் பொருட்டு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் நன்கறிந்த வனாகவும் விவேகமிக்கவனாகவும் இருக்கின் றான். (4:92) பாடம் : 12 ஒருவர் தாம் கொலை செய்ததாக ஒரே தடவை வாக்குமூலம் அளித்தாலும் அதைக் கொண்டே அவர் (பதிலுக்குக்) கொல்லப் படுவார்.
6884. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், 'உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?' என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் அச்சிறுமி ஆம்; அவன்தான்' என்று) தலையால் சைகை செய்தாள். எனவே, அந்த யூதன் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டான். (அவனிடம் விசாரிக்கப்பட்டபோது) அவன் (குற்றத்தை) ஒப்புக் கொண்டான். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட அவ்வாறே அவனுடைய தலை கல்லால் நசுக்கப்பட்டது. 20
ஹம்மாம் இப்னு யஹ்யா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'இரண்டு கற்களால் (நசுக்கப்பட்டது)' என இடம் பெற்றுள்ளது.
Book : 87
பாடம் : 13 பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படல்.
6885. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு சிறுமியை, அவளுடைய வெள்ளி நகைக்காக கொலை செய்த (ஆண்) யூதன் ஒருவனைக் கொலை செய்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள்.21
Book : 87
பாடம் : 14 ஆண்களாயினும் பெண்களாயினும் காயங்களுக்கும் தண்டனை உண்டு.22 பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனை யாக ஆண் கொல்லப்படுவான் என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆணைக் கொன்றதற்குத் தண்டனை யாகப் பெண் பழிவாங்கப்படுவாள். இது வேண்டுமென்றே நடந்த எல்லாக் கொலைகளுக்கும், கொலையைவிடக் குறைவான காயங்களுக்கும் பொருந்தும் என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்),இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் தம் தோழர் களிடமிருந்து இதையே அறிவித்துள்ளார்கள். ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) அவர் களுடைய சகோதரி ஓர் ஆணைக் காயப் படுத்திவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கும்) பழிவாங்கல் உண்டு என்று சொன்னார்கள்.
6886. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்யப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். உடனே அவர்கள், 'என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்' என்று (சைகையால்) கூறினார்கள். அப்போது நாங்கள் 'நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)' என்று சொல்லிக் கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது '(என் வாயில் மருந்தூற்றவேண்டாம் என்று நான் தடுத்தும் நீங்கள் கேட்காததற்குப் பகரமாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் (இந்த வீட்டிலுள்ள) அனைவர் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்' என்று கூறிவிட்டு, 'ஆனால் அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், மருந்தூற்றும்போது உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை' என்று கூறினார்கள். 23
Book : 87
பாடம் : 15 ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தமது உறவினருக் காகத்) தாமே பழிவாங்குவதும்.24
6887. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 25
Book : 87
6888. மேற்சொன்ன அதே அறிவிப்பாளர் தொடரில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.
Book :87
6889. யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
'ஒருவர் நபி(ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டு சென்றார்கள்' என்று ஹுமைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் 'இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு ஹுமைத்(ரஹ்) அவர்கள், 'அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் தாம் ( அறிவித்தார்கள்)' என்று பதிலளித்தார்கள். 26
Book :87
பாடம் : 16 ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால்..?27
6890. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான்(ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா(ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, 'அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை' என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்தால் அவர்கள் இறைவனை அடையும் வரை (அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது. 28
Book : 87
பாடம் : 17 ஒருவர் தவறுதலாகத் தம்மைத் தாமே கொலை செய்து கொண்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.29
6891. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரிடம்) 'ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?' என்று கூறினார். எனவே, ஆமிர்(ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஒட்டகவோட்டி யார்?' என்று கேட்டார்கள். 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்து கொண்ட) மக்கள், 'அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (இறைத்தூதர் அவர்களே!)?' என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் காலையில் (தம் முழங்காலில் தம் வாளாலேயே) தாக்கப்பட்டு இறந்தார். அப்போது மக்கள், 'ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன் அவர் (தம் வாளால் தம்மைத் தாமே குத்திக்கொண்டு) தற்கொலை செய்துகொண்டார்' என்று பேசினார். (கைபரிலிருந்து) நான் திரும்பியபோது 'ஆமிரின் நற்செயல்கள் அழிந்துபோயின' என்று மக்கள் பேசிக்கொண்டனர். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிர்(ரலி) அவர்களின் (நற்செயல்கள் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு. அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறை வழியில்) அறப்போரும் புரிந்தார். அவர் பெற்ற நற்பலனை விட அதிகமான நற்பலனைப் பெற்றுத்தரும் (வீர) மரணம் எது?' என்று கேட்டார்கள்.30
Book : 87
பாடம் : 18 ஒருவர் மற்றவர்(கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்...?31
6892. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது' என்றார்கள்.
Book : 87
6893. யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.
நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒருவர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தம் கையை விடுவிக்கும் போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.
Book :87
பாடம் : 19 பல்லுக்குப் பல்32
6894. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளுடைய முன்பல்லை உடைத்துவிட்டார். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தார்கள். அப்போது நபியவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.
Book : 87
பாடம் : 20 விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமான வையா? மாறுபட்டவையா?)33
6895. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதைப் போன்றே நபி(ஸல்) அவர்களிடம் தாம் செவியேற்றதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
Book : 87
பாடம் : 21 ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்தி விட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப்படுவார்களா? பழிவாங்கப் படுவார்களா?34 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும்படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விருவரும் அழைத்துவந்து (இவர்தாம் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக் கினார்கள். மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டி யிருப்பேன் என்றும் கூறினார்கள்.
6896. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான். அப்போது உமர்(ரலி) அவர்கள், 'இந்தக் கொலையில் (யமனிலுள்ள) ஸன்ஆ வாசிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரையும் நான் (பதிலுக்குக்) கொல்வேன்' என்றார்கள்.
ஹகீம் அஸ்ஸன்ஆனி(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'நான்கு பேர் (சேர்ந்து) ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டனர். அப்போது உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்' என்று வந்துள்ளது.
கன்னத்தில் ஓர் அறைவிட்ட குற்றத்திற்காக அபூ பக்ர்(ரலி) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அலீ(ரலி), சுவைத் இப்னு முகர்ரின்(ரலி) ஆகீயோர் பழிவாங்கும்படி தீர்ப்பளித்தனர்.
சாட்டையால் ஓர் அடி அடித்த குற்றத்திற்காக உமர்(ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள். மூன்று சாட்டையடிகளுக்காக அலீ(ரலி) அவர்கள் பழிவாங்கிடச் செய்தார்கள்.
(நீதிபதி) ஷுரைஹ்(ரஹ்) அவர்கள் சாட்டையடிக்கும் பிறாண்டி காயப்படுத்தியதற்கும் பழிக்குப்பழி தண்டனை வழங்குமாறு தீர்ப்பளித்தார்கள்.
Book : 87
6897. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். 'நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்றவேண்டாம் என்று தடை செய்யவில்லை)' என்று நாங்கள் கூறிக்கொண்டோம் அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது' என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நாங்கள் 'மருந்து உட்கொள்ளப் பிடிக்காமலேயே (அவ்வாறு சைகை செய்தீர்கள்)' என்று சொன்னோம்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(நான் தடுத்தும் கேட்காததற்கு பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக் கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும்' என்று கூறிவிட்டு, 'ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும் போது) அவர் உங்களுடன் கலந்து கொள்ளவில்லை' என்று கூறினார்கள்.35
Book :87
பாடம் : 22 அல்கஸாமா' எனும் சத்தியம்36 அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உம்முடைய இரண்டு சாட்சிகள் தேவை. அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் தேவை என்று சொன்னார்கள்.37 இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆவியா (ரலி) அவர்கள் அல்கஸாமா'சத்தியத்தை ஏற்றுப் பழி வாங்கும்படி உத்தரவிடவில்லை. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தாம் பஸ்ரா நகருக்கு ஆளுநராக நியமித்திருந்த அதீ பின் அர்தாத் அவர்களுக்கு, நெய்வியாபாரிகளின் வீடுகளில் ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஒருவர் தொடர்பாக(ப் பின்வருமாறு) கடிதம் எழுதினார்கள்: கொல்லப்பட்டவரின் நண்பர்கள் சாட்சியத்தைக் கொண்டுவந்தால் சரி. அவ்வாறில்லையாயின், (சாட்சியில்லாமல் நீங்கள் தீர்ப்பளித்து) மக்களுக்கு அநீதி யிழைத்துவிடாதீர்கள். இதைப் போன்ற வழக்குகளில் மறுமை நாள்வரை (சரியான) தீர்ப்பு வழங்க முடியாது.
6898. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார்.
என் குலத்தாரில் சிலர் கைபர் நோக்கிச் சென்றார்கள். அங்கே அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டனர். அவர் கிடந்த இடத்தில் இருந்த (யூத) மக்களிடம் அவர்கள், 'எங்கள் நண்பரை நீங்கள் (அநியாயமாகக்) கொன்றுவிட்டீர்கள்' என்று கூறினர். (அந்த யூத) மக்கள் 'நாங்கள் (அவரைக்) கொல்லவுமில்லை. (அவரைக்) கொலை செய்தவர் யார் என எங்களுக்குத் தெரியவுமில்லை' என்று கூறினர். எனவே (கைபர் சென்ற) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். அங்கு எங்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கக் கண்டோம்' என்று கூறினர்.
அப்போது (பேச்சைத் துவங்கிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களை நோக்கி (நபி(ஸல்) அவர்கள், 'பெரியவர்களைப் பேசவிடு! பெரியவர்களைப் பேசவிடு!' என்று கூறினார்கள். பிறகு (கொல்லப்பட்டவர்களின் நண்பர்களைப் பார்த்து) நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கொலை செய்தவர் யார் என்பதற்குச் சாட்சி கொண்டுவாருங்கள்!' என்று கூறினார்கள். அவர்கள், 'எங்களிடம் சாட்சியில்லை' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (யூதர்களான) அவர்கள் சத்தியம் செய்யட்டும்' என்றார்கள். அதற்கு (கொல்லப்பட்டவரின் நண்பர்களான) அவர்கள், 'யூதர்களின் சத்தியத்தை நம்பி) ஏற்றுக் கொள்ளமாட்டோம்' என்று கூறினர்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல் தாமே நூறு தர்ம ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கினார்கள்.38
Book : 87
6899. அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ஒரு நாள் மக்களிடம் பேசுவதற்காகத் தம் ஆசனத்தை எடுத்து வெளியே வைத்தார்கள். பிறகு மக்களுக்கு அனுமதி அளித்திட மக்கள் உள்ளே வந்தனர். பின்னர் (அவர்களிடம்) 'அல்கஸாமா சத்தியம் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். மக்கள், 'அல்கஸாமா மூலம் பழிவாங்கிடல் உண்டு என்றே கருதுகிறோம். கலீஃபாக்கள் அதைக் கொண்டு பழிவாங்கியுள்ளனர்' என்று கூறினர். உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் மக்களின் பார்வையில் நான் படும் வகையில் என்னை நிறுத்திவைத்து என்னிடம், 'அபூ கிலாபா அவர்களே! (இது குறித்து) நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்டார்கள். உடனே நான், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களிடம் படைத் தளபதி (களான ஆளுநர்)களும் அரபுத் தலைவர்களும் உள்ளனர். இவர்களில் ஐம்பது பேர் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரிலுள்ள திருமணமான ஒருவர் குறித்து அவரைப் பார்க்காமலேயே அவர் விபசாரம் புரிந்துவிட்டதாகச் சாட்சியம் அளித்தால் அவருக்கு நீங்கள் கல்லெறி தண்டனை வழங்கிவிடுவீர்களா, சொல்லுங்கள்?' என்று கேட்டேன். உமர்(ரஹ்) அவர்கள் 'இல்லை' என்றார்கள். நான், 'இவர்களில் ஐம்பது பேர் ஹிம்ஸ் (சிரியா) நாட்டிலுள்ள ஒருவர் திருடிவிட்டார் என்று அவரைப் பார்க்காமலேயே அவருக்கெதிராகச் சாட்சியம் அளித்தால் அவரின் கையை நீங்கள் துண்டித்துவிடுவீர்களா, சொல்லுங்கள்!' என்று கேட்டேன். உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள், 'இல்லை' என்றார்கள். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காகவே தவிர எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை' என்று கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு:)
1. மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு) கொலை செய்தவர். 2. திருமணமான பின்னர் விபசாரம் புரிந்த மனிதர். 3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து (வெளியேறி இறை மறுப்பிற்குத்) திரும்பிச் சென்றுவிட்ட மனிதர்.
அப்போது மக்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சில திருடர்க(ளின் கை கால்க)ளைத் துண்டித்துக் கண்களில் சூடிட்டுப் பிறகு அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். உடனே நான், 'உங்களுக்கு அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் அறிவிப்பைக் கூறுகிறேன்' என்று சொல்லிவிட்டு அனஸ்(ரலி) அவர்கள் கூறியதை(ப் பின்வருமாறு) தெரிவித்தேன். 39
'உக்ல்' எனும் குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழி வழங்கினர். அப்போது (மதீனா) பூமியின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, அவர்களின் உடல்நலம் பாதித்தது. எனவே, இது குறித்து அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நம் மேய்ப்பாளர் உடன் சென்று அவரிடமுள்ள (முஸ்லிம்களுக்குச் சொந்தமான) ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தலாமே!' என்று (யோசனை) கூறினார்கள். உக்ல் குலத்தார், 'சரி' என்று சொல்லிவிட்டு அங்கு சென்றனர். அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி உடல் நலம் தேறினர். பிறகு அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவிப்பாளரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பி வைத்தார்கள். எனவே, அவர்கள் பிடிக்கப்பட்டு (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுமாறும் அவர்களின் கண்களில் சூடிடுமாறும் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் இறக்கும் வரை அவர்களை வெயிலில் தூக்கி எறிந்தார்கள்.40
நான், 'இந்த உக்ல் குலத்தார் செய்ததை விடக் கொடிய செயல் வேறேது? அவர்கள் இஸ்லாத்திற்கு (இறை மறுப்பிற்கு) திரும்பிச் சென்றார்கள்; கொலை செய்தார்கள்; கொள்ளையடித்தார்கள்' என்று சொன்னேன். அப்போது அன்பஸா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (உம்மிடம் இதைச் செவியேற்றது) போல் ஒருபோதும் நான் செவியேற்றதில்லை' என்று கூறினார்கள். உடனே நான், 'அன்பஸா! என் செய்தியை நீங்கள் மறுக்கின்றீர்களா?' என்று கேட்டேன். அவர், 'இல்லை (நான் மறுக்கவில்லை). மாறாக, இச்செய்தியை நீங்கள் உள்ளபடி கூறினீர்கள்' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (ஷாம்) மாகாணத்தாரிடையே இந்த மூதறிஞர் வாழ்ந்துகொண்டிருக்கும் வரை மக்கள் நன்மையில் நீடிப்பர்' என்று (என்னைக் குறித்துக்) கூறினார்கள்.
நான், 'இந்த (கஸாமா) விஷயம் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து முன்மாதிரி கிடைத்துள்ளது' என்றேன். (அதாவது) அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் (மட்டும் முன்பே கைபர் செல்வதற்காக) வெளியேறினார். (அங்கு) அவர் கொல்லப்பட்டார். பிறகு அவருக்குப் பின்னால் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்கள் தம் தோழர் இரத்த (வெள்ள)த்தில் மிதப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடன் பேசிக்கொண்டிருந்த எங்கள் நண்பர் எங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றார். நாங்கள் சென்று பார்த்தபோது அவர் இரத்த(வெள்ள)த்தில் மிதக்கிறார்' என்று கூறினர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறிச் சென்று, 'இவரை யார் கொலை செய்திருப்பார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். மக்கள், 'யூதர்கள்தாம் இவரைக் கொலை செய்திருப்பார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்' என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்கள். (யூதர்கள் வந்ததும் அவர்களை நோக்கி) 'நீங்களா இவரைக் கொலை செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (வாதிகளான அன்சாரிகளை நோக்கி) 'யூதர்களில் ஐம்பது பேர் 'நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை' என்று சத்தியம் செய்வதை நீங்கள் விரும்புகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'எங்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு (தாங்கள் கொலை செய்யவில்லையென) சத்தியம் செய்யக்கூட யூதர்கள் தயங்க மாட்டார்கள்' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களைப் பார்த்து), 'உங்களில் ஐம்பது பேர் (யூதர்களே! கொலையாளிகள் என்ற) சத்தியம் செய்வதன் மூலம் இழப்பீட்டுத் தொகைக்கு உரிமை பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'நாங்கள் சத்தியம் செய்வதற்கு தயாராக) இல்லை' என்று பதிலளித்தனர். எனவே, கொல்லப்பட்டவருக்காக நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள்.41
(அறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:) மேலும், நான் (பின்வருமாறும்) கூறினேன்: ஹுதைல் குலத்தார் அறியாமைக் காலத்தில் தாம் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்த ஒருவனிடம் ஒப்பந்த முறிவுப் பிரகடனத்தை வெளியிட்டனர். எனவே, அந்த ஒப்பந்த முறிவுக்குள்ளானவன் (மக்காவிலுள்ள) 'பத்ஹா' எனுமிடத்திலிருந்த யமன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை இரவு நேரத்தில் தாக்கிக் கொள்ளையடிக்க முற்பட்டான். அப்போது அவர்களில் ஒருவர் அவனைக் கண்டு விழித்துக்கொண்டு அவனை நோக்கி வாளை வீசி அவனைக் கொன்றுவிட்டார். உடனே ஹுதைல் குலத்தார் வந்து அந்த யமன்வாசியைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் ஹஜ் காலத்தில் அவரை (கலீஃபா) உமர்(ரலி) அவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தி 'இவர் எங்கள் (ஒப்பந்த) நண்பரைக் கொன்றுவிட்டார்' என்று கூறினர். அதற்கு அந்த யமன்வாசி, '(நான் திருடனைத்தான் கொலை செய்தேன்.) ஹுதைல் குலத்தார் அவனுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுவிட்டனர்' என்று கூறினார். உடனே உமர்(ரலி) அவர்கள், 'ஹுதைல் குலத்தாரில் ஐம்பது பேர் '(நாங்கள்) அவருடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளவில்லை' எனச் சத்தியம் செய்யட்டும்' என்றார்கள். எனவே, அவர்களில் நாற்பத்தொன்பது பேர், (நாங்கள் அந்த மனிதருடனான ஒப்பந்தத்தை முறிக்கவில்லை என்று பொய்ச்) சத்தியம் செய்தனர். அப்போது ஹுதைல் குலத்தாரில் ஒருவர் ஷாம் நாட்டிலிருந்து வந்தார். (ஐம்பதாவது நபராக) அவரையும் சத்தியம் செய்திடுமாறு ஹுதைல் குலத்தார் கோரினர். ஆனால், அவர் தம் சத்தியத்திற்கு பதிலாக ஆயிரம் திர்ஹங்களை அவர்களிடம் வழங்கினார். (சத்தியம் செய்வதிலிருந்து விலகிக் கொண்டார்.) இதையடுத்து அவரின் இடத்தில் மற்றொருவரை அவர்கள் சேர்த்துக் கொண்டதுடன், அந்த (ஐம்பதாவது) நபரைக் கொலையுண்டவரின் சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டனர். அவரின் கை இவரின் கையுடன் பிணைக்கப்பட்டது.
பின்னர் அவர்களிருவரும் சத்தியம் செய்த ஐம்பது பேரும் புறப்பட்டார்கள். அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ளள்ள) 'நக்லா' எனுமிடத்தை அடைந்தபோது மழை பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் அங்கிருந்த ஒரு மலையின் குகைக்குள் நுழைந்து கொண்டார்கள். அப்போது அந்தக் குகை (பொய்ச் சத்தியம் செய்த) அந்த ஐம்பது பேர் மீது இடிந்து விழுந்து அவர்கள் அனைவரும் மாண்டு போயினர். (கைகோத்து விடப்பட்ட) அந்த இரண்டு நண்பர்களும் தப்பித்துக் கொண்டனர். அப்போது அவர்களை ஒரு கல் தொடர்ந்து வந்து கொலையுண்டவருடைய சகோதரரின் காலை முறித்துவிட்டது. பிறகு அவர் ஓராண்டு காலம் வாழ்ந்து பிறது மரணித்தார்.
(தொடர்ந்து அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
அப்துல் மலிக் இப்னு மர்வான் அல்கஸாமை'வைக் கொண்டு ஒருவரை பழிவாங்கிடுமாறு ஆணையிட்டார். பிறகு தம் செயல் குறித்து அவர் வருந்தினார். எனவே, சத்தியம் செய்த ஐம்பது பேரின் பெயர்களை (படை வீரர்களின்) பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கியதுடன் அவர்களை ஷாம் நாட்டிற்கு நாடு கடத்தவும் செய்தார்.
Book :87
பாடம் : 23 ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர் களுடைய அனுமதியில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.
6900. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் நீளமான அம்பின் 'கூர்முனையால்' அல்லது 'கூர்முனைகளால்' அவருக்குத் தெரியாமல் அவரைக் குத்துவதற்காகச் சென்றார்கள். 43
Book : 87