பாடம் : 13 கொள்ளை நோயிலிருந்து வெருண்டோடு வதற்காகத் தந்திரம் செய்வது விரும்பத் தக்கதன்று.
6973. அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி ரபீஆ(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (நாட்டு மக்களின் நிலவரம் அறிய) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், 'ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் (வலியப்) போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது கொள்ளைநோய் பரவிவிட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள். எனவே, உமர்(ரலி) அவர்கள் சர்ஃகிலிருந்து (மதீனாவிற்குத்) திரும்பிவிட்டார்கள். 27
சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உமர்(ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸைச் செவியுற்றதால்தான் சர்ஃக்கிலிருந்து திரும்பிவிட்டார்கள்.
Book : 90
6974. ஆமிர் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உசாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொள்ளைநோய் பற்றிக் குறிப்பிட்டபோது, 'அது (இறைவன் வழங்கும்) வேதனையாகும். அதன் மூலம் (அட்டூழியங்கள் புரிந்த) சில சமுதாயத்தார் வேதனைக்குள்ளாக்கப்பட்டனர். பிறகு அதில் சிறிதளவு (இன்றளவும்) எஞ்சியுள்ளது. எனவே, அது அவ்வப்போது வந்துபோகும். ஒரு பகுதியில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். அது பரவியிருக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்றார்கள்.28
Book :90
பாடம் : 14 அன்பளிப்பு மற்றும் விலைகோள் உரிமை (ஷுஃப்ஆ) ஆகியவற்றில் தந்திரம் செய்வது.29 ஒரு மனிதர் (இன்னொருவருக்கு) ஆயிரம் வெள்ளிக் காசுகளை, அல்லது அதை விட அதிகமான காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். அவை அவரிடம் பல ஆண்டுகள் இருந்துவந்தன. பின்னர் அன்பளிப்பு வழங்கியவர் (அன்பளிப்பு பெற்றவரிடம் சமரசம் செய்து கொண்டு) அந்த வெள்ளிக் காசுகளைத் தந்திரமாகத் திரும்பப்பெற்றுக் கொண்டார். இந்நிலையில், இந்த இருவரில் எவர் மீதும் ஸகாத் கடமையாகாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு கூறுகின்றவர்கள், அன்பளிப்பு தொடர்பாக (அதைத் திரும்பப் பெறாதீர்கள் என்று கூறிய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதுடன், (பொருள் கைமாறுவதன் மூலம்) ஸகாத் கடமையாவதையும் நீக்கிவிடுகிறார்கள்.
6975. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தன் அன்பளிப்புப் பொருளை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தான் வாந்தி எடுத்ததைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இதைப் போன்ற) இழிகுணம் நமக்கு முறையன்று.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.30
Book : 90
6976. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பிரிக்கப்படாத ஒவ்வொரு (அசையாச்) சொத்தில் தான், பங்காளிக்கே விற்கவேண்டும் என்ற விலைகோள் உரிமையை (ஷுஃப்ஆ) நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு பாதைகள் குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற (கட்டாய) நிலையில்லை. 31
சிலர், '(பங்காளிக்கு இருப்பதைப் போன்றே அண்டை வீட்டாருக்கும் விலைகோள் (ஷுஃப்ஆ) உரிமை உண்டு' என்று கூறுகின்றனர். பிறகு இவ்விதியை உறுதிப்படுத்த விரும்பிய அவர்கள், (முன்னுக்குப் பின் முரணாக ஒரு கட்டத்தில்) இதே விதியைச் செல்லாததாக்கி விடுகிறார்கள். (அதன் விவரமாவது:) ஒருவர் ஒரு வீட்டை (முழுவதும்) வாங்க விரும்பினார். ஆனால், அண்டை வீட்டான் விலைகோள் (ஷுஃப்ஆ) உரிமை கோரக்கூடும் என அஞ்சினார். எனவே, (அந்த வீட்டின்) நூறு பங்குகளில் (பிரிக்கப்படாத) ஒரு பங்கை (மட்டும் முதலில்) விலைக்கு வாங்கினார். (இதையடுத்து அவர் வீட்டு உரிமையாளருக்குப் பங்காளியாகி விடுகிறார்.) பிறகு மீதிப் பங்குகளையும் விலைக்கு வாங்கினார். (இப்போது அண்டை வீட்டானுக்கு விலைகோள் உரிமை இல்லாமல் போய்விடும். ஏனெனில், அவர் வாங்கிய) முதலாவது பங்கில் மட்டும்தான் அண்டை வீட்டானுக்கு விலைகோள் உரிமை இருந்தது. (அதை அவன் பயன்படுத்தத் தவறிவிட்டான்.) வீட்டின் மீதியுள்ள பங்குகளில் அவனுக்கு அந்த உரிமை கிடையாது. (பங்காளிக்கே அந்த உரிமை உண்டு.) இவ்வாறு அவர் தந்திரம் செய்ய அவருக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார்கள்.32
Book :90
6977. அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்கள் வந்து என் தோள்மீது தம் கையை வைத்து, (என் மாமா) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் (அழைக்க,) நானும் அன்னாருடன் சென்றேன். அப்போது (நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையான) அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள் மிஸ்வர்(ரலி) அவர்களிடம், 'என் வீட்டிலுள்ள ஓர் அறையை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு ஸஅத் அவர்களுக்கு நீங்கள் யோசனை கூற மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத்(ரலி) அவர்கள், 'நான் (வாங்குவதாக இருந்தால்) அவருக்கு (பொற்காசுகளில்) நானூறைவிட அதிகமாகத் தரமாட்டேன்; அதையும் பல தவணைகளில் தான் தர முடியும்' என்று கூறினார்கள். அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள், '(இந்த வீட்டை விலைக்குக் கேட்டு) எனக்கு ரொக்கமாக ஐநூறு (வெள்ளி அல்லது பொற்காசுகள்) தரப்பட்டது. ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. 'அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமைபடைத்தவராவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை மட்டும் நான் கேட்டிராவிட்டால், இந்த வீட்டை உங்களுக்கு நான் 'விற்க' அல்லது 'கொடுக்க' முன்வந்திருக்கமாட்டேன்' என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
(எனக்கு இதை அறிவித்த) சுஃப்யான்(ரஹ்) அவர்களிடம் நான் 'மஅமர்(ரஹ்) அவர்கள் இவ்வாறு (இந்த அறிவிப்பாளர் தொடரில்) கூறவில்லையே?' என்று கேட்டேன். சுஃப்யான் அவர்கள், 'ஆனால், மஅமர்(ரஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறே கூறினார்கள்' என்றார்கள்.
சிலர் கூறுகிறார்கள்: ஒருவர் (அண்டை வீட்டாருக்குரிய) விலைகோள் உரிமையை மறுக்க எண்ணினால், தந்திரம் செய்து, அதை இல்லாமல் ஆக்கிவிடலாம். அதாவது விற்பவர் வாங்கும் எண்ணத்தில் உள்ளவருக்கு அந்த வீட்டை அன்பளிப்பாக வழங்கிட வேண்டும். அத்துடன் அதற்கு எல்லைகளை வகுத்து அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும். வாங்கியவர் (முன்பே பேரம் பேசாமல்) அதற்கு பதிலாக ஆயிரம் வெள்ளிக் காசுகளை வழங்கிடவேண்டும். இவ்வாறு செய்தால் (அன்பளிப்பு என்பது வாரிசுரிமை என்பதால்) விலைகோள் உரிமை கோர அதில் எவருக்கும் அதிகாரம் கிடையாது.
Book :90
6978. அபூ ராஃபிஉ(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் என்னிடம் (என்னுடைய) வீட்டை நானூறு பொற் காசுகளுக்குப் பகரமாக விலை பேசினார்கள். அப்போது நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அண்மையில் இருப்பதால் அண்டைவீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்' என்று கூறியதை நான் செவியேற்றிராவிட்டால் (இந்த வீட்டை) உங்களுக்கு நான் வழங்கியிருக்கமாட்டேன்' என்று சொன்னேன்.
'வீட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கிய ஒருவர் (அதன் மீதுள்ள) விலை கோள் உரிமையைத் தடுக்க விரும்பினால் பருவமடையாத தம் மகனுக்கு அன்பளிப்பாக வழங்கிடலாம். (அன்பளிப்பாகத்தான் அது வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காகச்) சத்தியம் செய்ய வேண்டிய பொறுப்பு (சிறுவனான) அவனுக்குக் கிடையாது' என்று சிலர் கூறுகிறார்கள்.
Book :90
பாடம் : 15 தமக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பதற்காக அதிகாரி தந்திரம் செய்வது (விரும்பத் தக்கதன்று).
6979. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸதாக்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், 'இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்' என்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தம் தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தம் தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்' என்று கூறினார்கள்.
பிறகு, தம் அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, 'இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?' என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.33
Book : 90
6980. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்.
என அபூ ராஃபிஉ(ரலி) அறிவித்தார்.
சிலர் கூறுகின்றனர்.
ஒருவர் ஒரு வீட்டை இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்க விரும்பினார். அவர் (அண்டை வீட்டாருக்குரிய விலைகோள் உரிமையைச் செயலிழக்கச் செய்யப் பின்வருமாறு) தந்திரம் செய்வதில் தவறில்லை. அதாவது இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் விலைபேசி வீட்டை அவர் வாங்கிக் கொள்வார். ஆனால், விற்றவரிடம் 9,999 வெள்ளிக் காசுகளையும், இருபதாயிரத்தில் மீதியுள்ள (10,001) வெள்ளிக் காசுகளுக்கு பதிலாக ஒரு பொற் காசையும் அவர் ரொக்கமாகச் செலுத்துவார். இந்நிலையில், விலைகோள் உரிமை கோருபவர் தம் உரிமையைக் கோரினால், (பேசப்பட்டுவிட்ட) இருபதாயிரம் வெள்ளிக் காசுகளைக் கொடுத்து வீட்டை எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல், அந்த வீட்டின் மீது அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
மேலும், இந்த நிலையில், அது வேறொருவருக்குச் சொந்தமான வீடு என்று தெரியவந்தால், விலைக்கு வாங்கியவர் விற்றவரிடம் செலுத்திய தொகையை மட்டுமே திரும்பப் பெறுவார். அது 9,999 வெள்ளிக் காசுகளும் ஒரு பொற் காசுமாகும். ஏனெனில், விற்கப்பட்ட பொருள் வேறொருவருக்குச் சொந்தமானது என்று தெரியவரும்போது, ஏற்கெனவே விற்றவரும் வாங்கியவரும் செய்த (10,001 வெள்ளிக் காசுகளுக்கு பதிலாக) ஒரு பொற்காசு என்ற நாணயமாற்று ஒப்பந்தம் முறிந்துவிடும்.
அதே நேரத்தில், விலைக்கு வாங்கியவர் அந்த வீட்டில் குறைபாடு உள்ளதைக் கண்டார்; ஆனால், வீடு மற்றவருக்குச் சொந்தமானது என உரிமை கோரப்படவில்லை. அப்போது, இருபதாயிரம் வெள்ளிக் காசுகளைப் பெற்றதை உரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார். (இது முன்னுக்குப் பின் முரணாகும். ஏனெனில், இவர் செலுத்தியதோ 9,999 வெள்ளிக்காசுகளும் ஒரேயொரு பொற்காசும் தாம். திரும்பப் பெறுவதோ இருபதாயிரம் வெள்ளிக்காசுகள்.)
அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:
இவ்வாறு கூறும் இவர்கள் முஸ்லிம்களிடையே மோசடி நடைபெறுவதை அனுமதிக்கின்றனர். ஆனால், நபி(ஸல்) அவர்களோ, 'முஸ்லிமின் வியாபாரத்தில் எந்தக் குறையோ, தீங்கோ, மோசடியோ இராது' என்று கூறினார்கள்.34
Book :90
6981. அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அபூ ராஃபிஉ(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் ஒரு வீட்டை நானூறு பொற்காசுகளுக்கு விலைபேசினார்கள். (வீட்டின் உரிமையாளர்) அபூ ராஃபிஉ(ரலி) அவர்கள் 'அண்மையில் இருப்பதால் அண்டைவீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிராவிட்டால் உங்களுக்கு நான் (இந்த வீட்டை) வழங்கியிருக்கமாட்டேன் என்றார்கள்.
Book :90

பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அருளப்பெற்ற இறைஅறிவிப்பு (வஹீ) உண்மைக் கனவாவே இருந்தது.
6982. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் 'வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.
'வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்' என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் 'என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் 'ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்' என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2
(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபலகுஸ் ஸுப்ஹ்' (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃபாலிகுல் இஸ்பாஹ்' (என்பதிலுள்ள 'இஸ்பாஹ்') எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்' என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 91
பாடம் : 2 நல்லோரின் கனவு அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை நனவாக்கிவிட்டான்; அல்லாஹ் நாடினால்,நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலையை மழித்துக் கொண்டவர்களாகவும் (அல்லது) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். (அப்போது எவருக்கும்) நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான். (அதன் பின்னர்) இதையன்றி நெருக்கமானதொரு வெற்றியையும் (உங்களுக்கு) அமைத்துக் கொடுத்தான். (48:27)
6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். 3
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 91
பாடம் : 3 கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.
6984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.4
Book : 91
6985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :91
பாடம் : 4 நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
6986. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Book : 91
6987. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.5
என உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.
Book :91
6988. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
Book :91
6989. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :91
பாடம் : 5 நற்செய்தி(கூறும் கனவு)கள்
6990. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு' என்று விடையளித்தார்கள்.
Book : 91
பாடம் : 6 (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கண்ட கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: யூசுஃப் தம் தந்தையாரிடம், என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங் களும், சூரியனும்,சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம்பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன் என்று கூறிய பொழுது, என் அருமை மகனே! உனது கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு (எதிராக) சதி செய்வார்கள்; ஏனெனில், (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக் கின்றான். இவ்வாறே உம் இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உமக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உம்மீதும், யஅகூபின் சந்ததியார் மீதும் முழுமையாகச் சொரிவான். இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீதும் தன் அருளை அவன் முழுமையாகச் சொரிந்ததைப் போன்று. நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையோனுமாய் இருக்கின் றான். (12:4-6) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லாரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), என் தந்தையே! இது தான் முன்பு நான் கண்ட கனவின் விளக்க மாகும்; அதை என் இறைவன் மெய்ப்பித்தான். மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டாக்கிவிட்ட பின்னர் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுணுக்கமாகச் செய்கின்றவன்;நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன் என்று கூறினார். என் இறைவா! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங் களையும் எனக்குக் கற்றுத்தந்தாய். வானங் களையும் பூமியையும் படைத்தவனே! இம்மை யிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிராத்தித்தார்.) (12:100, 101) (அபூஅப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) (12:101ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ஃபாத்திர்' (படைத்தவன்) எனும் சொல்லும் அல்பதீஉ, அல்முப்திஉ, அல்பாரிஉ, அல்கா-க் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவை ஆகும். (மேலும், 12:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பத்வு' எனும் சொல்லுக்குக் கிராமம்' என்று பொருள். பாடம் : 7 (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: பின்னர் இஸ்மாயீல் (தம் தந்தை) இப்ராஹீமுடன் நடக்கும் பருவத்தை அடைந்த போது, என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் ப-யிடுவதாகக் கனவு கண்டேன். இதைப் பற்றி உமது கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! என்று இப்ராஹீம் கூறினார். அதற்கு இஸ்மாயீல், என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பெற்ற கட்டளையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார். ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் இணங்கி, (இப்ராஹீம்) இஸ்மாயீலைப் ப-யிட முகம் குப்புறக் கிடத்திய போது,நாம் அவரை அழைத்து, இப்ராஹீம்! உறுதியாகவே நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே நற்பலன் அளிக்கிறோம். என்று கூறினோம். (37:102-105) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (37:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்லமா' என்பதற்கு (இப்ராஹீம் இஸ்மாயில் ஆகிய) இருவரும் இறைவனின் கட்டளைக்கு இணங்கினர்' என்று பொருள். மேலும், வ தல்லஹு' என்பதற்கு,இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலை (அறுத்துப் ப-யிட) முகங் குப்புறக் கிடத்தினார்கள்' என்று பொருள். பாடம் : 8 பலர் காணும் கனவு ஒத்திருப்பது
6991. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(நபித் தோழர்களில்) சிலருக்கு 'லைலத்துல் கத்ர்' (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாள்களில் தேடிக் கொள்ளுங்கள்' என்றார்கள்.6
Book : 91
பாடம் : 9 சிறைக் கைதிகள், குழப்பவாதிகள் மற்றும் இணைவைப்போர் காணும் கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: (நம் தூதர்) யூசுஃபுடன் இரு இளைஞர் களும் சிறைக்குள் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவர், நான் திராட்சை மது பிழிவதாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினார். மற்றவர், நான் என் தலைமீது ரொட்டியைச் சுமப்ப தாகவும், அதிலிருந்து பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்என்று கூறினார். (பின் இருவரும் யூசுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீ ராக;மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமிக்க) நல்ல மனிதர்களில் ஒருவராகக் காண்கிறோம் (என்று கூறினார்கள்). அதற்கு அவர் கூறினார்: (இங்கு) உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்பே உங்களது கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்துவிடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்ப வர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டுவிட்டேன். நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதன்று. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும்,மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. என்னுடைய சிறைத் தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் சிறந்தவையா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டி ருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை. அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. (ஆட்சி செலுத்தும்) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளை யிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வ தில்லை. என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இது தான் :) உங்களில் ஒருவர் தம் எசமானுக்கு (எகிப்து அரசனுக்கு மறுபடியும்) திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்;மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர் களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று யூசுஃப் கருதினாரோ அவரிடம், என்னைப் பற்றி உம் எசமானிடம் (எகிப்து அரசனிடம்) கூறுவீராக! என்று சொன்னார். ஆனால், (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எசமானிடம் (யூசுஃபைப் பற்றிக்) கூறவிடாமல் ஷைத்தான் அவரை மறதியிலாழ்த்திவிட்டான். ஆகவே, யூசுஃப் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார். (இந்நிலையில் ஒருநாள் எகிப்து) அரசன், நான் (கனவில்) ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டி ருப்பதையும், ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் கண்டேன். பிரதானிகளே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறக்கூடியவர் களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினார். (இவை) குழப்பமான கனவுகளாகும். இத்தகைய கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்கள் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள். அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலை யடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூசுஃபை) நினைவு கூர்ந்து இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன்; என்னை (யூசுஃபிடம்) அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். (சிறையில் யூசுஃபைக் கண்ட) அவர், யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெ-ந்த பசுக்கள் தின்று கொண்டி ருப்பதையும் பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்த கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எங்களுக்கு அறிவிப்பீராக. மக்கள் அறிந்துகொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது (என்று கூறினார்). அதற்கு யூசுஃப் கூறினார்: நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (அமோக மாக) விவசாயம் செய்வீர்கள். பிறகு நீங்கள் அறுவடை செய்வதில் நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, மீதியை அதற்குரிய கதிர்களிலேயே விட்டுவையுங்கள். பின்னர் அதற்கப்பால் கடினமான ஏழு (பஞ்ச) ஆண்டுகள் வரும். அந்தப் பஞ்சமான ஆண்டு களுக்காக நீங்கள் முன்பே பத்திரப்படுத்தி வைத்துள்ளதில் சொற்பமானதைத் தவிர மற்றதை அந்தப் பஞ்ச ஆண்டுகள் தின்றுவிடும். பின்னர் அதற்கப்பால் ஓராண்டு வரும். அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழி(ந்து உட் கொண்டு சுகமாக வாழ்)வார்கள். (இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட் டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று அரசர் கூறினார். (அவருடைய) தூதர் யூசுஃபிடம் வந்த போது அவர், நீர் உம் எசமானிடம் திரும்பிச் சென்று, தம் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன? என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று கூறினார். (12:36-50) (12:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இத்தகர' எனும் சொல் ஃதகர்த்து (நினைவுகூர்ந்தேன்) எனும் சொல்லின் இஃப்தஅல்' வாய்பாட்டில் அமைந்ததாகும். உம்மத்' எனும் சொல்லுக்கு பல்லாண்டு' என்று பொருள். இதே சொல் மற்றோர் ஓதும் முறையில் அமஹ்' என்றும் ஓதப்பட்டுள்ளது. (இதன்படி) இதற்கு மறதி' என்று பொருள் வரும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்: (12:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஉஸிரூன்'என்பதற்கு ஒ-வம், திராட்சை முத-யவற்றின் ரசத்தை அவர்கள் பிழிந்து கொண்டு (சுகவாழ்வில்) இருப்பார்கள் என்றுபொருள். (12:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஹ்ஸினூன்' எனும் சொல்லுக்குப் பத்திரப்படுத்தி பாதுகாத்துவைப்பார்கள்' என்று பொருள்.
6992. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.7
Book : 91