பாடம் : 6 பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.12
7068. ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், 'நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்' என்று கூறிவிட்டு, 'இதை நான் உங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்' என்றார்கள்.
Book : 92
7069. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
ஒரு(நாள்) இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத்துடன் விழித்தெழுந்து 'அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள் தாம் என்ன! (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட குழப்பங்கள் தாம் என்ன! -தம் துணைவியரை மனத்தில் கொண்டு - இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பி விடுகிறவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்' என்று கூறினார்கள்.13
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :92
7070. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :92
7071. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :92
7072. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.15
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :92
7073. சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் 'அபூ முஹம்மதே! (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்துசென்றார்; அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க்கொள்' என்று அவரிடம் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினேன். அதற்கு அம்ர்(ரஹ்) அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.16
Book :92
7074. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் பள்ளிவாசலில் அம்புகள் சிலவற்றை அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவற்றின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க் கொண்டு எந்த முஸ்லிமையும் கீறிவிடாதபடி செல்லுமாறு அவருக்கக் கட்டளையிட்டார்கள்.
Book :92
7075. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் 'அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்' அல்லது 'தம் கைக்குள் (அதன் முனையை) மூடிவைத்துக் கொள்ளட்டும்'. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறிவிடக் கூடாது.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :92
பாடம் : 8 ,,எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்கின்ற நிராகரிப்பாளர்களாய் மாறிவிட வேண்டாம்,, என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
7076. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற குற்றச்செயல்) ஆகும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.17
Book : 92
7077. நபி(ஸல்) அவர்கள் ('விடைபெறும்' ஹஜ்ஜின்போது) கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.18
Book :92
7078. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள். மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மெளனமாக இருந்தார்கள்.) பிறகு 'இது நஹ்ர் உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள் 'ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னோம். நபியவர்கள், 'இது எந்த ஊர்?' இது புனித நகரமல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள் 'ஆம், இறைத்தூதர் அவர்களே' என்று சொன்னோம். நபியவர்கள், 'இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள் 'ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னோம். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களின் இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புநிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களின் மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே' என்று கூறிவிட்டு, '(நான் வாழ்ந்த இதுகாலம்வரை உங்களிடம் இறைச்செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா?' எனக் கேட்டார்கள். நாங்கள், 'ஆம் (தெரிவித்து விட்டீர்கள்)' என்று பதிலளித்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! நீயே சாட்சி!' என்றார்கள்.
பிறகு (மக்களிடம்), 'இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர், தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம்' என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்) நபி(ஸல்) அவர்கள் கூறியபடியே நடந்தது. (நினைவாற்றல் குறைந்தவர்கள் தம்மைவிடச் சிறந்த நினைவாற்றல் உள்ளோரிடம் அவற்றைத் தெரிவித்தார்கள்.)
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பின்னால் ஒருவரையொருவர் பிடரியில் வெட்டி மாய்த்துக் கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் நீங்கள் மாறிவிட வேண்டாம்' என்றும் (அன்றைய உரையில்) குறிப்பிட்டார்கள்.19
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஹள்ரமீ(ரஹ்) அவர்கள் ஜாரியா இப்னு குதாமா என்பவரால் (உயிருடன்) கொளுத்தப்பட்ட நாளில் (ஜாரியா தம் ஆட்களிடம்), 'அபூ பக்ரா(ரலி) அவர்களை ஏறிப் பாருங்கள் (அவர் நமக்கு ஆதரவாளரா என்பதைக் கண்டுவாருங்கள்)' என்றார். அப்போது மக்கள் 'இதோ அபூ பக்ரா(ரலி) அவர்கள் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்' என்று கூறினர்.
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் 'மக்கள் என்னிடம் (என்னைத் தாக்க) வந்தால் அப்போது (நான் அவர்களைத் தடுக்க) ஒரு மூங்கில் குச்சியைக் கூட எடுக்கமாட்டேன்' என்றார்கள் என என் தயார் என்னிடம் தெரிவித்தார்கள். 20
Book :92
7079. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :92
7080. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
'விடைபெறும்' ஹஜ்ஜின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களை மெளனம் காக்கச் சொல்லுங்கள்' என்று சொல்லிவிட்டு (மக்கள் மெளனமான) பின்னர், 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்' என்றார்கள்.
பகுதி 9
(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.
Book :92
பாடம் : 9 (விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும். அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.
7081. 'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாம்) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21
Book : 92
7082. & 7083. 'விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மெளனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகிறாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :92
பாடம் : 11 ஒரு கூட்டமைப்பு இல்லாதபோது (எழும் பிரச்சினைகளில்) எவ்வாறு நடந்து கொள்வது?
7084. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியமே காரணம். நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கின்றதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கின்றது)' என்று பதிலளித்தார்கள். நான், 'அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்' என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு கூட்டத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் நீ காண்பாய்' என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களின் அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளையே பேசுவார்கள்' என்று பதிலளித்தார்கள். நான், 'இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக் கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே)' என்று பதிலளித்தார்கள்.22
Book : 92
பாடம் : 12 குழப்பவாதிகள் மற்றும் அநியாயக்காரர் களின் எண்ணிக்கையை அதிகரி(த்துக் காட்டக் காரணமாக இரு)ப்பது வெறுக்கப் பட்டதாகும்.
7085. அபுல் அஸ்வத் முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதில் என் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அப்போது நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இது குறித்துத் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகத் தெரிவித்தார்கள்.
(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) சில முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப் போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். (முஸ்லிம்கள் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்ப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும். அல்லது (வாளால்) அடிவாங்கிப் பலியாவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ், 'தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது...' எனும் (திருக்குர்ஆன் 04:97 வது) வசனத்தை அருளினான்.23
Book : 92
பாடம் : 13 ஒரு முஸ்லிம் தரம்தாழ்ந்த மக்களிடையே வாழநேரிடும்போது (எப்படி நடந்து கொள்ள வேண்டும்)
7086. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகள் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன்.
ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் ('அமானத்' எனும்) நம்பகத்தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருக்கும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)
இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் 'நம்பகத்தன்மை' எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இராது.
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும். (அளவுக்கு நம்பிக்கையாளர் அரிதாம்விடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி 'அவரின் அறிவுதான் என்ன! அவரின் விவேகம் தான் என்ன! அவரின் வீரம் என்ன!' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதரின் இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை (ஈமான்) இராது.
(அறிவிப்பாளர் ஹுதைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. ஏனெனில், முஸ்லிமாக இருந்தால் இஸ்லாம் (என்னுடைய பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறிஸ்தவராயிருந்தால் அவருக்கான அதிகாரி என்னிடம் (என்னுடைய பொருளை) மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார் இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன். 24
Book : 92
பாடம் : 14 குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்25
7087. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை; ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்' என்று சொன்னேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி 'ரபதா' என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்தார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.26
Book : 92