பாடம் : 1 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள் எனும் (4:59ஆவது) இறைவசனம்.2
7137. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 93
7138. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.3
Book :93
பாடம் : 2 ஆட்சித் தலைவர்கள் குறைஷியராய் இருப்பார்கள்.4
7139. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா(ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள், 'விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்' என்று அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொண்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள்.
இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சில பேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்துகிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாமென உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்றார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.5
Book : 93
7140. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6
Book :93
பாடம் : 3 இறைச் சட்டத்தின்படி தீர்ப்பளிப்பவருக்குக் கிடைக்கும் பிரதிபலன். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் அருளிய (வேதச்சட்டத்)தின் படி எவர் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தாம் பாவிகள். (5:47)
7141. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.7
Book : 93
பாடம் : 4 இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாத வரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).8
7142. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.9
Book : 93
7143. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்தாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.10
Book :93
7144. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
Book :93
7145. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, 'நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம்' என்றனர். அவர், 'விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்' என்றார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், '(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?' என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரின் கோபமும் தணிந்தது. பிறகு நபி(ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறிருக்கமாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்' என்றார்கள்.12
Book :93
பாடம் : 5 ஆட்சியதிகாரத்தை (விரும்பிக்) கேட்காத வருக்கு (அது வழங்கப்பட்டால்) அதற்காக அல்லாஹ் உதவி செய்வான்.
7146. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மானே! ஆட்சிக் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களின் சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)தற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்' என்றார்கள்.13
Book : 93
பாடம் : 6 ஆட்சியதிகாரத்தைக் கேட்டுப் பெறுபவர் அதோடு (தனியாக) விடப்படுவார்.
7147. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா! ஆட்சித் தலைமையை (நீங்களாக)க் கேட்காதீர்கள். கேட்டு அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதோடு (தனியாக) விடப்படுவீர்கள். (இறையுதவி உங்களுக்குக் கிடைக்காது. நீங்களாகக்) கேட்காமல் அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (இறைவனின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால், சிறந்தது எதுவோ அதைச் செய்துவிட்டு, உங்களின் சத்தியத்(தை முறித்த)தற்காகப் பரிகாரம் செய்துவிடுங்கள்' என்று கூறினார்கள்.14
Book : 93
பாடம் : 7 ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப் படுவது வெறுக்கப்பட்டதாகும்.
7148. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book : 93
7149. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நானும் என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், 'எங்களுக்குப் பதவி தாருங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள், 'கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (-பதவியை) வழங்கமாட்டோம்' என்றார்கள்.
Book :93
பாடம் : 8 குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?
7150. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்' எனக் கூறினார்கள்.
Book : 93
7151. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :93
பாடம் : 9 (மக்களை) யார் சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.
7152. தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்:
விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான்15 (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.
அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்திபடைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.
(ஃபர்பரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
நான் அபூ அப்தில்லாஹ் (புகாரீ - ரஹ் அவர்களிடம், 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவுயுற்றேன் என்று சொல்பவர் யார்? ஜுன்தப்(ரலி) அவர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; ஜுன்தப்(ரலி) அவர்கள் தாம்' என்று பதிலளித்தார்கள்.
Book : 93
பாடம் : 10 சாலையில் தீர்ப்பு வழங்குவதும் மார்க்க விளக்கம் அளிப்பதும். (நீதிபதி) யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் சாலையில் தீர்ப்பளித்தார்கள். ஷஅபீ (ரஹ்) அவர்கள் தமது வீட்டின் வாசலில் தீர்ப்பளித்தார்கள்.
7153. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நானும் நபி(ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாசலின் முற்றத்தருகே எங்களை ஒருவர் சந்தித்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமைநாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதற்காக என்ன முன்னேற்பாடு செய்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். உடனே அம்மனிதர் அடங்கிப் போனவரைப் போன்று காணப்பட்டார். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ தொழுகையோ தானதர்மங்களோ செய்துவைத்திருக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்' என்று கூறினார்கள்.16
Book : 93
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களுக்கு வாயிற்காவலர் இருந்ததில்லை.
7154. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், 'இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அப்பெண்மணி, 'ஆம் (தெரியும்)' என்று கூறினார். அனஸ்(ரலி) கூறினார்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், 'என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை. (எனவேதான் இப்படிப் பேசுகிறீர்)' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது ஒருவர் அவ்வழியே சென்றார். அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?' என்று கேட்டார். அப்பெண், 'எனக்கு அவர் யாரென்றும் தெரியாது' எனக் கூறினாள். அம்மனிதர், 'அவர்கள்தாம் இறைத்தூதர்(ஸல்)' என்று சொல்ல அவள், நபி(ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. எனவே அவள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள், 'பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்' என்றார்கள்.17
Book : 93
பாடம் : 12 நீதிபதி தமக்கு மேலுள்ள ஆட்சியாளரின் (சிறப்பு) அனுமதி பெறாமலேயே உரிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம்.
7155. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(அன்சாரிகளில் ஒருவரான) கைஸ் இப்னு ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் (அவர்களின் அவையில்) ஆட்சித் தலைவருக்கு ஒரு காவல்துறை அதிகாரியைப் போன்று செயல்பட்டு வந்தார்கள்.18
Book : 93
7156. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிற்கு நீதி மற்றும் நிர்வாக அதிகாரியாக) அனுப்பினார்கள். என்னைத் தொடர்ந்து முஆத்(ரலி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.19
Book :93