7157. (தொடர்ந்து) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
(யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற பின்பு யூதராக மாறிவிட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்தபோது முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் வந்தார்கள். 'இவருக்கு என்ன?' என்று முஆத் கேட்டார்கள். நான், 'இவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு யூதராம்விட்டார்' என்று சொன்னேன். முஆத்(ரலி) அவர்கள், 'நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும்' என்றார்கள்.20
Book :93
பாடம் : 13 நீதிபதி கோபமாக இருக்கும் போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?
7158. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).
Book : 93
7159. அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.
ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்துவதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், 'மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். எனவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்' என்றார்கள்.21
Book :93
7160. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
என் மனைவி மாதவிடாயில் இருந்தபோது, அவளை நான் மணவிலக்கு (தலாக்) செய்துவிட்டேன். இதை (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்துக் கோபமடைந்தார்கள். பிறகு, 'அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும். பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவளை மணவிலக்குச் செய்தே தீர வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அவளை மணவிலக்குச் செய்துவிடட்டும்' என்றார்கள்.22
Book :93
பாடம் : 14 மக்களின் உரிமைகள் தொடர்பாக நீதிபதி தமது சொந்த அறிவால் தீர்ப்பளிப்பது செல்லும்; ஆனால்,சந்தேகமும் அவதூறும் கிளம்பும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாகாது. நபி (ஸல்) அவர்கள், ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று: உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள். (மக்களிடையே) பிரபலமாக உள்ள விஷயங்களில்தான் இது செல்லும்.23
7161. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) பூமியின் முதும்லுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று பூமியின் முதும்லுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறிவிட்டுப் பிறகு, '(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்கரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் குழந்தைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?' என்று கேட்டார் நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'நியாயமான அளவுக்கு (எடுத்து) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதால் உன் மீது குற்றமேதும் வராது' என்று பதிலளித்தார்கள்.
Book : 93
பாடம் : 15 முத்திரையிடப்பெற்ற கடிதத்திற்கு (அது இன்னாரது கடிதம்தான் என்று) சாட்சிய மளிப்பதும், அதில் எது செல்லும்? அல்லது செல்லாது? என்பதும், ஆட்சியாளர் தம் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதமும், ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எழுதும் கடிதமும். (அறிஞர் பெரு)மக்களில் சிலர், குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் தவிர மற்ற விஷயங்களில் (நீதிபதிக்கு ஆலோசனை கூறி) ஆட்சியாளர் கடிதம் எழுதலாம் என்று கூறினர். பிறகு அவர்களே,தவறுதலாக நடந்துவிடும் கொலை விஷயத்தில் மட்டுமே (இப்படி ஆலோசனை கூறி ஆட்சியாளர் நீதிபதிக்குக்) கடிதம் எழுதுவது செல்லும் என்று கூறுகிறார்கள். ஏனெனில், இது அவர்களைப் பொறுத்த வரை (இழப்பீடு வழங்க வேண்டிய) பொருள் சம்பந்தப்பட்ட விஷயம்தான். (ஆனால், இந்தக் கருத்து தவறானதாகும்.) ஏனென்றால், இது பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறுவ தெல்லாம் கொலை நிரூபணமான பின்புதான். ஆகவே, (ஆரம்பக் கட்டத்தில்,) தவறுதலாக நடந்த கொலையானாலும் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலையானாலும் இரண்டும் ஒன்றே. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பாகத் தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.25 உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களும் உடைக்கப்பட்ட ஒரு பல் தொடர்பான வழக்கில் (தனி மனிதரின் சாட்சியத்தை ஏற்கலாம் என்று) தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு நீதிபதி மற்றொரு நிதிபதிக்கு (ஆலோசனைகள் கூறி) கடிதம் எழுதுவது செல்லும்; எந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டதோ அவர் கடிதத்தையும் முத்திரையையும் (உண்மையானவை என) அறிந்திருந்தால் மட்டுமே செல்லும். ஷஅபீ (ரஹ்) அவர்கள் நீதிபதியிடமிருந்து தமக்கு வருகின்ற முத்திரையிடப்பட்ட கடிதத்தில் உள்ளவற்றை செயல்படுத்திவந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்படுகின்றது. முஆவியா பின் அப்தில் கரீம் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: நான் பஸ்ரா நீதிபதி அப்துல் ம-க் பின் யஅலா (ரஹ்) அவர்களையும், இயாஸ் பின் முஆவியா (ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்), பிலால் பின் அபீபுர்தா (ரஹ்), அப்துல்லாஹ் பின் புரைதா அல்அஸ்லமீ (ரஹ்), ஆமிர் பின் அபீதா (ரஹ்), அப்பாத் பின் மன்ஸூர் (ரஹ்) ஆகியோரைக் கண்டுள்ளேன். அவர்கள் சாட்சிகள் ஆஜராகாமலேயே நீதிபதிகளின் கடிதங்களை (விசாரணை முடிவுகளை) ஆதாரமாகக் கொள்ளலாம்' என அனுமதித்துள்ளனர். இக்கடிதம் போ-யானது' என யாருக்கெதி ராகக் கடிதம் வந்ததோ அவர் (-எதிரி) கூறினால், அதிலிருந்து வெளியேறும் வழியைப் பார்'என்று அவரிடம் சொல்லப் படும். இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களும் சவ்வார் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களும்தாம் முதன்முதலில் நீதிபதியின் கடிதத்திற்கு (-இது நீதிபதியின் கடிதம்தான் என்பதற்கு) ஆதாரத்தைக் கேட்டவர்களாவர். உபைதுல்லாஹ் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பஸ்ரா நீதிபதியான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து கடிதமொன்றைக் கொண்டுவந்தேன். நான் அன்னாரிடம் எனக்குக் கூஃபாவில் உள்ள இன்னார் இவ்வளவு தர வேண்டியுள்ளது என்று ஆதாராம் சமர்ப்பித்திருந்தேன். நான் அ(ந்தக் கடிதத்)தை (கூஃபா நீதிபதி) காசிம் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அதை அவர்கள் செல்லுமென ஏற்றுக் கொண்டார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களும் அபூகிலாபா (ரஹ்) அவர்களும், ஒருவர் எழுதிய மரண சாசனத்தில் என்ன உள்ளது என்பதை அறியாமல் அதற்கு சாட்சியம் அளிப்பதை வெறுத்துள்ளார்கள். ஏனெனில்,அதில் தவறு நடந்திருக்க இடமுண்டு; அது அவருக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்கள் கைபர்வாசிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் (உங்கள் பகுதியில் கொல்லப் பட்ட) உங்களுடைய தோழ(ர் அப்துல்லாஹ் பின் சஹ்ல் என்பவ)ருக்காக இழப்பீடு வழங்க வேண்டும்; அல்லது போருக்குத் தயாராக வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். திரைக்கப்பாலுள்ள பெண்ணுக்கெதி ராக சாட்சியம் அளிப்பது குறித்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறும் போது அவளை நீ அறிந்திருந்தால் சாட்சியம் அளிக்கலாம்; இல்லையேல் அளிக்க வேண்டாம்என்றார்கள்.
7162. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுதவிரும்பியபோது மக்கள், 'ரோமர்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை மட்டுமே படிப்பார்கள்' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை தயாரித்துக் கொண்டார்கள். அதன் மின்னும் வெண்மையை நான் (இன்னும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (இறைத்தூதர் முஹம்மத்) என இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.26
Book : 93
பாடம் : 16 நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்? ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியுள்ளான் என்று கூறிவிட்டு தாவூதே! உங்களை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். ஆகவே, மக்களுக்கிடையே (நேர்மையாக) சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள். மன இச்சையைப் பின்பற்றாதீர்கள். அது உங்களை இறைவழியிலிருந்து தவறச் செய்து விடும். இறைவழியிலிருந்து தவறிச்செல்பவர்களுக்கு, அவர்கள் கணக்கு வாங்கும் நாளை மறந்துவிட்ட காரணத்தால் கடுமையான வேதனை உண்டு எனும் (38:26ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். மேலும், நிச்சயமாக நாம்தாம் தவ்ராத்' தையும் அருளினோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன; (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். இறைபக்தியாளர்களும் அறிஞர் களும் -அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்ததாலும்- அவர்கள் அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங் களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள். எவர் அல்லாஹ் அருளிய(வேதத்)தைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக இறைமறுப்பாளர்கள்தாம் எனும் (5:44ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். மேலும், இன்னும் தாவூதும் சுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்பளித்தனர். அவர்களது தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது, நாம் சுலைமானுக்கு அதை (-தீர்ப்பளிப்பதன் முறையை)ப் புரியவைத்தோம். (அவ்விருவரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்பளிக்கும்) ஞானத்தையும் அறிவையும் வழங்கினோம் எனும் (21:78,79) வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். (இந்த வசனத்தில்) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்துள்ளான். தாவூத் (அலை) அவர்களைப் பழிக்கவில்லை. இந்த இருவரின் விவகாரத்தையும் அல்லாஹ் எடுத்துரைத்திருக்காவிட்டால், நீதிபதிகள் அழிந்துபோவதைத்தான் நான் பார்த்தி ருப்பேன். ஏனெனில்,அல்லாஹ் ஒருவரை ளசுலைமான் (அலை) அவர்களைன அவருடைய அறிவுக்காகப் பாராட்டியுள்ளான். மற்றொரு வரை ளதாவூத் (அலை) அவர்களைன அவருடைய ஆராய்ச்சிக்காக மன்னித்திருக்கின்றான். முஸாஹிம் பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: ஒரு நீதிபதி ஐந்து பண்புகளில் எந்த ஒன்றைத் தவறவிட்டாலும் அது அவருக்குக் களங்கமாகும். அவையாவன: அவர் (விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளும்) விளக்கமுள்ளவராகவும் (பழிவாங்கும் எண்ணமில்லாத) சகிப்புத் தன்மையுடைய வராகவும், (விலக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) மார்க்கநெறி காப்பவராகவும், (எடுக்கும் முடிவில்) உறுதியானவராகவும், கல்விமானாகவும், கல்வியறிவைப் பெருக்கிக் கொள்ள அதிகம் கேள்வி கேட்பவராகவும் இருக்க வேண்டும். பாடம் : 17 ஆட்சியாளர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கான ஊதியம். நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் (நீதி மன்றத்தில்) தீர்ப்பு வழங்கும் தமது பணிக்காக ஊதியம் பெற்றுவந்தார்கள்.27 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அநாதையின் காப்பாளர் தமது வேலைப் பளுவுக்கேற்ப அநாதையின் செல்வத்திலிருந்து உண்ணலாம். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (நிர்வாகப் பணிக்காக அரசு நிதியிலிருந்து ஊதியம் பெற்று) உண்டார்கள்.
7163. அப்துல்லாஹ் இப்னு சஅதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், 'நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'ஆம்' என்றேன். உமர்(ரலி) அவர்கள், 'நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்க, நான், 'என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். எனவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன்' என்று பதிலளித்தேன். உமர்(ரலி) கூறினார்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பிவந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், 'என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்' என்று சொல்லிவந்தேன். இறுதியில் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்தபோது, நான், 'என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) இதை வழங்குங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லையென்றால்,) தர்மம் செய்துவிடுங்கள். இச்செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்தோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்' என்றார்கள்.
Book : 93
7164. உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்குவார்கள். அப்போது நான், 'என்னை விட அதிகமாகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்' என்று சொல்வேன். ஒரு முறை எனக்கு (நன்கொடைப்) பெருநாள் ஒன்றை அவர்கள் வழங்கியபோது, நான், 'என்னை விட அதிகமாக இது யாருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) நீங்கள் இதை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு (உங்களுக்குத் தேவைப்படாவிட்டால்) தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசைப்பட்டு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இச்செல்வத்திலிருந்து உங்களுக்கு (தானாக) வரும் எதுவாயினும் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதன் பின்னே நீங்களாகச் செல்லாதீர்கள்' என்றார்கள்.
Book :93
பாடம் : 18 பள்ளிவாசலில் தீர்ப்புக் கூறுவதும் (தம்பதியரை) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்') செய்யவைப்பதும். உமர் (ரலி) அவர்கள் (ஒரு தம்பதியரை) நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்') செய்யச் சொன்னார்கள். (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்), யஹ்யா பின் யஅமர் (ரஹ்) ஆகியோர் பள்ளிவாசலில் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஆளுநர்) மர்வான் பின் ஹகம், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சத்தியம் செய்ய வேண்டும் என்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே தீர்ப்பளித்தார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களும் ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும் மஸ்ஜிதுக்கு வெளியே முற்றத்தில் வைத்துத் தீர்ப்பளித்துள்ளார்கள்.
7165. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஒரு தம்பதியர் (பள்ளிவாசலில்) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாக இருந்தேன். அவ்விருவரும் (மணபந்தத்திலிருந்து) பிரித்துவைக்கப்பட்டார்கள்.
Book : 93
7166. பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவுகொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்று விடலாமா? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்டார். பிறகு (இறைகட்டளைக்கேற்பக் கணவன், மனைவி) இருவரும் பள்ளிவாசலிலேயே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். அப்போது நானும் அங்கிருந்தேன்.28
Book :93
பாடம் : 19 பள்ளிவாசலில் தீர்ப்பளிப்பவர் தண்டனை (வழங்கும் முடிவு)க்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வெளியே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிட வேண்டும். உமர் (ரலி) அவர்கள் (பள்ளிவாசலில் வைத்து தண்டனை வழங்கப்பட்ட கைதி குறித்து) அவரைப் பள்ளிவாச-லிருந்து வெளியேற்(றி தண்டனை நிறைவேற்)றுங்கள் என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் குறித்தும் இவ்வாறே அறிவிக்கப்படுகிறது.
7167. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களை அழைத்து, இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்' என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பினார்கள். (இவ்வாறு) அவர் தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் அளித்தபோது, 'உனக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரை (பள்ளிவாசலில் இருந்து வெளியே) கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்' என்றார்கள்.29
Book : 93
7168. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாவேன்.30
கல்லெறி தண்டனை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :93
பாடம் : 20 (வழக்கின்போது) தலைவர் எதிரிகளுக்கு அறிவுரை கூறுவது.
7169. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தம் ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். நான் கேட்பதை வைத்து அதற்கேற்ப தீர்ப்பு வழங்கிவிடுவேன். எவருக்கு நான் அவரின் சகோதரரின் உரிமையில் சிறிதை (உண்மை நிலை அறியாமல் வாதங்களை வைத்து) கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அதை அவர் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அப்போது நான் அவருக்குப் பெயர்த்துக் கொடுப்பதெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான்.
என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.31
Book : 93
பாடம் : 21 ஒருவர் நீதிபதி பதவி வகிக்கும் போது, அல்லது அதற்கு முன்பு தமக்குக் கிடைத்த சாட்சியத்தை வைத்து (வாதி, பிரதிவாதி இருவரில்) ஒருவருக்குச் சாதகமாகத் தாமே தீர்ப்பளிக்கலாமா? (அல்லது மற்றொரு நீதிபதியிடம் அந்த சாட்சியத்தை அளிக்க வேண்டுமா?) (கூஃபா நகர) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் (தமக்காக) சாட்சியம் அளிக்குமாறு வேண்டினார். அதற்கு அன்னார் நீ ஆட்சியரிடம் (வழக்கைக் கொண்டு) செல். நான் (அங்கு வந்து) உனக்காக சாட்சியம் அளிக்கிறேன் என்றார்கள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம், ஒருவன் விபசாரம் புரிவதையோ திருடுவதையோ நீங்கள் ஆட்சியராயிருக்கும் நிலையில் கண்டால் என்ன செய்வீர்கள்? (உங்கள் சாட்சியத்தை வைத்தே தண்டனை வழங்கிடு வீர்களா?) என்று கேட்டார்கள். ளஅதற்கு, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், இல்லை; என்னுடன் மற்றொருவரும் சாட்சியமளிக்காதவரை தண்டனை வழங்க மாட்டேன் என்று சொன்னார்கள்.ன உமர் (ரலி) அவர்கள், அப்படியானால் (ஆட்சி யாளராக இருக்கும்) உங்கள் சாட்சியமும் முஸ்லிம்களில் ஒருவரின் சாட்சியமாக மதிக்கப்படும் (அப்படித்தானே!)என்று கேட்க அவர்கள், உண்மைதான் என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் உமர் இறைவேதத்தில் (இல்லாத ஒன்றைச்) சேர்த்துவிட்டார் என்று மக்கள் பேசுவார்கள் எனும் அச்சம் இல்லாவிட்டால் ரஜ்ம்' (கல்லெறி தண்டனை) தொடர்பான வசனத்தை நான் என் கையாலேயே (குர்ஆன் பிரதியில்) எழுதியிருப்பேன் என்று கூறினார்கள்.32 மாஇஸ் பின் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) தாம் விபசாரம் புரிந்ததாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மாஇஸ் திருமணமானவராக இருந்ததால்) அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது தம்மிடமிருந்தவர்கள் எவரையும் (மாஇஸ் விபசாரம் செய்ததற்கு) சாட்சியாக ஆக்கியதாகச் சொல்லப்படவில்லை. ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள், ஒருவன் தான் விபசாரம் புரிந்ததாக நீதிபதியிடம் ஒரேயொரு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் அவனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கப் படும் என்று கூறுகிறார்கள். ஆனால், ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள், நான்கு முறை வாக்குமூலம் அளித்தால்தான் கல்லெறி தண்டனை வழங்கப்படும் என்கிறார்கள்.
7170. அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(போரில் எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை' என்று கூறினார்கள். உடனே நான் (என்னால்) கொல்லப்பட்டவரை நானே கொன்றேன் என்பதற்கு ஆதாரம் தேடுவதற்காக எழுந்தேன். எனக்காக சாட்சியம் சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. எனவே, நான் உட்கார்ந்து கொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (போரில் எதிரி ஒருவனைக்) கொன்றதைச் சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், '(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கிற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடம் இருந்து (எனக்கு) இசைவு பெற்றுத் தாருங்கள்' என்றார்.
அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தைவிட்டுவிட்டு, குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்' என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்கு பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்த பின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது.33
மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.34
ஹிஜாஸ் அறிஞர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி தாம் அறிந்ததை (மட்டும்) வைத்துத் தீர்ப்பளிக்கலாகாது. அவர் தம் பதவிக்காலத்தில் அதற்கு சாட்சியாக இருந்தாலும் சரி! அதற்கு முன்பே சாட்சியாக இருந்தாலும் சரி! (அவரின் மீது களங்கம் கற்பிக்க இடமுண்டு என்பதே இதற்குக் காரணம்.) நீதிமன்றத்தில் பிரதிவாதி ஆஜராம் மற்றவரின் உரிமை குறித்து நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தாலும், இரண்டு சாட்சிகளை அழைத்து அவரின் வாக்குமூலத்தின்போது ஆஜர்படுத்தாத வரை அவருக்கெதிராகத் தீர்ப்பளிக்கலாகாது என அந்த அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.
இராக்வாசிகளில் சிலர் கூறுகின்றனர்: நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட, அல்லது பார்த்த ஒன்றை (ஆதாரமாக) வைத்து அவர் தீர்ப்பளிக்கலாம். நீதிமன்றமல்லா மற்ற இடங்களில் (தாம் கேட்ட அல்லது பார்த்த) ஒன்றை வைத்து அவர் தீர்ப்பளிக்கலாகாது; பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும்போது இரண்டு சாட்சிகளை ஆஜர்படுத்தினால் தவிர.
இராக்வாசிகளில் இன்னும் சிலர், 'அல்ல! (வாதியின் வாக்குமூலத்தை வைத்தே) நீதிபதி தீர்ப்பளிக்கலாம். ஏனெனில், அவர் (நீதிபதி) நம்புதற்குரிய ஒருவராவார்; சாட்சியத்தால் நோக்கமே உண்மையை அறிவதுதான். நீதிபதி தீர்ப்பளிப்பார்; மற்ற பிரசினைகளில் (அவ்வாறு தாம் அறிந்ததை வைத்து, சாட்சிகள் இல்லாமல்) தீர்ப்பளிக்க மாட்டார்' என்று கூறுகின்றனர்.
காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வேறு யாரும் அறியாத, தாம் (மட்டும்) அறிந்திருக்கும் ஒன்றை வைத்துத் தீர்ப்பளிப்பது நீதிபதிக்கு முறையாகாது. பிறரின் சாட்சியத்தைவிட அவர் அறிந்திருப்பது பலமானதாக இருக்கலாம். ஆனாலும், இதன் மூலம் முஸ்லிம்களிடையே தம்மை அவர் தவறான எண்ணத்திற்கு உட்படுத்திக் கொள்வதும், முஸ்லிம்களைச் சந்தேகத்தில் ஆட்படுத்துவதும் நேரலாம். நபி(ஸல்) அவர்கள், பிறர் சந்தேகப்படும் வகையில் நடப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால்தான், (தம்மைப் பள்ளிவாசலில் சந்தித்துவிட்டுச் சென்ற தம் துணைவியாரை இருவர் பார்த்தபோது) 'இவர் ஸஃபிய்யா தாம் (வேறு யாருமல்லர்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.35
Book : 93
7171. அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவுடன் (சிறிது தூரம் நடந்து) சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து, '(இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதாம்' என்றார்கள். உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் (உங்களின் மீதூ சந்தேகப்படுவோம்)' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்' என்றார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.36
Book :93
பாடம் : 22 ஆட்சித் தலைவர் இரு ஆட்சியர்களை ஒரே இடத்திற்கு அனுப்பும் போது அவ்விருவரும் இணக்கத்தோடு நடந்து கொள்ளும்படியும் பிணங்கிக்கொள்ளாமல் இருக்கும்படியும் கட்டளையிடுவது.
7172. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்' என்றார்கள். அப்போது நான், 'எங்கள் (யமன்) நாட்டில் 'பித்உ' எனும் (மது) பானம் (தேனில்) தயாரிக்கப்படுகிறதே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்றார்கள்.37
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 93
பாடம் : 23 ஆட்சியாளர் (வலீமா-மண) விருந்தழைப்பை ஏற்பது (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுடைய அடிமையின் விருந்தழைப்பை ஏற்றுச் சென்றார்கள்.
7173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; (விருந்துக்கு) அழைப்பவருக்கு (அவரின் அழைப்பை ஏற்று) பதிலளியுங்கள்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.38
Book : 93
பாடம் : 24 அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள்
7174. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, 'இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், 'நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, 'இது உமக்குரியது; இது எனக்குரியது' என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக்கொண்டிருக்கும்' என்றார்கள். பிறகு, அவர்களின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, 'நான் எடுத்துரைத்துவிட்டேனா?' என்று மும்முறை கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுமைத்(ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:
இதை நான் என் கண்ணால் கண்டேன்; காதால் கேட்டேன். (சந்தேகமிருப்பின்) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருடன் என்னுடன் இதைக் கேட்டார்.39
Book : 93
பாடம் : 25 அடிமையாயிருந்து விடுதலையடைந்தவர் களை நீதிபதிகளாக்குவதும் அதிகாரிகளாக்கு வதும்.
7175. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் 'குபா' பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார்கள். அந்த நபித்தோழர்களில் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), அபூ ஸலமா(ரலி), ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரும் அடங்குவர்.40
Book : 93
பாடம் : 26 சமூகத் தலைவர்கள் (அல்உரஃபா)41
7176. & 7177. மர்வான் இப்னு ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு உக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடனிருந்தவர்களுக்கும் முஸ்லிம்கள் அனுமதியளித்தபோது, 'உங்களில் யார் போர்க் கைதிகளை விடுவிக்க) சம்மதம் தெரிவிக்கிறார்; யார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் சமூகத் தலைவர்கள் உங்களின் முடிவை எங்களிடம் வந்து தெரிவிக்கட்டும்' என்று கூறினார்கள்.
உடனே மக்கள் திரும்பிச் சென்றார்கள். அவர்களிடம் அவர்களின் சமூகத் தலைவர்களை பேசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்கள்.41-ஹ
Book : 93