7288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :96
பாடம் : 3 அதிகமாகக் கேள்விகள் கேட்பதும் தனக்குத் தேவையில்லாததை வ-ந்து செய்வதும் விரும்பத் தகாததாகும்.17 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். (5:101)
7289. 'தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 96
7290. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பள்ளிவாசலில் பாயினால் அறை அமைத்துக் கொண்டு அதில் சில இரவுகள் (இரவுத் தொழுகை) தொழுதார்கள். அதனால் மக்கள் அவர்கள் பின்னே திரண்டு (தொழத் தொடங்கி)விட்டார்கள். ஒரு நாள் நபி(ஸல்) அவர்களின் குரலை மக்களால் கேட்க முடியவில்லை. எனவே, நபி அவர்கள் (வீட்டினுள்) உறங்கிவிட்டார்கள் போலும் என்று மக்கள் நினைத்துக்கொண்டனர். எனவே, அவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் வெளியேறி வருவதற்காக கனைக்கலானார்கள். எனவே (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள், '(ஒவ்வொரு நாளும் என்னைப் பின்தொடர்ந்து இரவுத் தொழுகையைத் தொழுகின்ற) உங்கள் செயலை நான் கண்டுவந்தேன். உங்களின் மீது (ரமளானின் இரவுத் தொழுகையான) அது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு உங்களுடைய அச்செயல் தொடர்ந்து கொண்டே இருந்தது. நீங்கள் தொழுது (இரவுத்) தொழுகை உங்களின் மீது கடமையாக ஆக்கப்பட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.18
Book :96
7291. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு மக்கள் அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்டபோது நபி அவர்கள் கோபமடைந்து, '(நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும்) என்னிடம் கேளுங்கள்' என்றார்கள். உடனே ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஹுதாஃபாதாம் உன் தந்தை' என்றார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'ஷைபா வால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்தாம் உன் தந்தை' என்றார்கள். (இக்கேள்விகளால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட கோபக் குறியை உமர்(ரலி) அவர்கள் கண்டபோது, 'நாங்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்று கூறினார்கள்.19
Book :96
7292. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
முஆவியா(ரலி) அவர்கள், முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதை எனக்கு எழுதி அனுப்புங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள் பின்வருமாறு முஆவியா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும், அல்லாஹுவைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் எவருமில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; புகழனைத்தும் அவனுக்கே உரியது; அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின் செல்வமும் உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது' என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள்.
மேலும், முஆவியா(ரலி) அவர்களுக்கு முஃகீரா(ரலி) அவர்கள் எழுதினார்கள்: நபி(ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றைப்) பேசுவது, அதிகமாகக் கேள்வி கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுததவருக்குரியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்குரியதைத் தனக்குத்) தருமாறு கோருவது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.20
Book :96
7293. அனஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், 'வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது' என்றார்கள்.21
Book :96
7294. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) வெளியே வந்து லுஹ்ர் தொழுகை தொழுகை நடத்தினார்கள், (தொழுகை முடிந்து) சலாம் கொடுத்த பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி உலக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளில் பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு, 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் (என்னிடம்) அவர் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்கமாட்டேன்' என்றும் சொன்னார்கள். அப்போது மக்களின் அழுகை அதிகமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கேளுங்கள் என்னிடம்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் எங்கு செல்வேன் (சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா)?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நரகத்திற்கு' என்று பதிலளித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா(ரலி) அவர்கள் எழுந்து, 'என் தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'உன் தந்தை ஹுதாஃபா' என்று கூறிவிட்டு, கேளுங்கள் என்னிடம்! கேளுங்கள் என்னிடம்' எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். (நபியவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து 'அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்றும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்' என்று கூறினார்கள். உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு கூறியபோது மெளனமாக இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்னர் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! சற்று முன் நான் தொழுது கொண்டிருக்கையில் இந்தச் சுவற்றில் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை' என்றார்கள்.22
Book :96
7295. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இன்னார்தாம் உன் தந்தை' என்றார்கள். அப்போது, 'இறை நம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவி) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்' எனும் (திருக்குர்ஆன் 05:101 வது) இறை வசனம் அருளப்பெற்றது.23
Book :96
7296. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்விகேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில், 'அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?' என்று கூடக் கேட்பார்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :96
7297. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றிய படி நின்றிருந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், 'இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்' என்றார். மற்றொருவர், 'நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது' என்றார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, 'அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், 'அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். எனவே, வஹீ (இறைச்செய்தி) வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின் தள்ளி நின்றேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) 'நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகிறார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.24
Book :96
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களின் (சொற்களை மட்டு மன்றி) செயற்களை(யும்) பின்பற்றுதல்.
7298. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் பொன் மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நான் பொன் மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டேன். (அப்படித்தானே!)' என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மேலும், 'நான் அதை ஒருபோதும் அணியமாட்டேன்' என்றும் சொன்னார்கள். உடனே, மக்கள் அனைவரும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள்.25
Book : 96
பாடம் : 5 கல்வி(யாளர்களிடையே கருத்து வேறு பாடுள்ள) விஷயங்களில் (ஒரேயடியாய்) மூழ்கிப்போவதும் விதண்டாவாதம் செய்வதும் வெறுக்கப்பட்டதாகும். மார்க்க விஷயங்களிலும் நவீன அனுஷ்டானங் களிலும் வரம்பு மீறிச் செல்வதும் வெறுக்கப்பட்டதாகும்.26 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களே! உங்களது மதவிவகாரங் களில் எல்லை மீறிவிடாதீர்கள். இறைவனைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். (4:171)
7299. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'தொடர் நோன்பு நோற்காதீர்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கிற நிலையில் நான் உள்ளேன்' என்று பதிலளித்தார்கள். இருந்தும், மக்கள் தொடர்நோன்பைக் கைவிடவில்லை. எனவே, அவர்களுடன் சேர்ந்து நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு தினங்கள்' அல்லது 'இரண்டு இரவுகள்' தொடர் நோன்பு நோற்றார்கள். பிறகு மக்கள் பிறையைப் பார்த்தனர். நபி(ஸல்) அவர்கள், 'பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர் நோன்பை) அதிகமாக்கச் செய்திருப்பேன்' என்று மக்களைக் கண்டிப்பதைப் போன்று சொன்னார்கள்.27
Book : 96
7300. யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்க விடப்பட்டிருந்தது. அவர்கள் (தம் உரையில்), 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகிற நூல் எதுவும் எங்களிடம் இல்லை' என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன. மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது; மதீனா நகரம் 'அய்ர்' எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து கூடுதலான வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.28
Book :96
7301. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதியளித்தார்கள். அப்போது சிலர் அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (உரையாற்ற எழுந்து) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'சிலருக்கு என்னாயிற்று? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்' என்று கூறினார்கள்.29
Book :96
7302. இப்னு அபீ முலைக்கா(ஹ்) அவர்கள் அறிவித்தார்.
(ஒரு முறை) நல்லவர்களான அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். (ஹிஜ்ரீ 9ஆம் ஆண்டு) பனூதமீம் தூதுக்குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தனர். அப்போது (அபூ பக்ர், உமர் ஆகிய) அந்த இருவரில் ஒருவர், பனூ முஜாஷிஉ குலத்தாரான அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ அல்ஹன்ழலீ(ரலி) அவர்களை (தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார்; மற்றொருவர், இன்னொருவரை (தலைவராக்கும்படி) சைகை செய்தார். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள்' என்று சொல்ல, அதற்கு உமர்(ரலி) அவர்கள் 'தங்களுக்கு மாறு செய்வது என் நோக்கமன்று' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போதுதான், 'இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 49:2 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்றது.
இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்: இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எதைப் பேசினாலும் இரகசியம் பேசுபவரைப் போன்று (மெதுவாகத்)தான் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.
இந்த ஹதீஸை தம் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டு அறிவிப்பதாக இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் குறிப்பிடவில்லை.30
Book :96
7303. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இறுதி நாள்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தபோது 'மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடம் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். நான், 'நீங்கள் (தொழுகைக்காக) நிற்கும் இடத்தில் (என் தந்தை) அபூ பக்ர் நிற்பார்களானால், (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும்; எனவே, உமர்(ரலி) அவர்களிடம் கூறுங்கள்; அவர் தொழுகை நடத்தட்டும்' என்று சொன்னேன். ஆனால் நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரிடம் சொல்லுங்கள்; மக்களுக்கு அவர் தொழுவிக்கட்டும்' என்று கூறினார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் 'உங்களது இடத்தில் அபூபக்ர் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுது, அவர்கள் ஓதுவது மக்களுக்குக் கேட்காமல் போய்விடும். எனவே, மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி உமர்(ரலி) அவர்களுக்கு உத்தரவிடுங்கள்' என்று சொல்' என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே செய்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் தாம் யூசுஃப்(அலை) அவர்களுடைய தோழிகள் (போன்றவர்கள்). எனவே, மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடமே சொல்லுங்கள்' என்றார்கள். அப்போது ஹஃப்ஸா(ரலி) அவர்கள் என்னிடம் 'உன்னால் நான் நன்மை எதையும் கண்டதில்லை' என்று கூறினார்.31
Book :96
7304. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
அஜ்லான குலத்தைச் சேர்ந்த உவைமிர்(ரலி) அவர்கள், ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவனை இவன் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? எனக்காக (இதைப் பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேளுங்கள், ஆஸிமே!' என்றார். அவ்வாறே ஆஸிம்(ரலி) அவர்களும் நபியவர்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவர்கள் திரும்பிவந்து உவைமிர்(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை' என்று தெரிவித்தார்கள். அதற்கு உவைமிர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றி நேரடியாகக் கேட்பதற்காகச்) செல்வேன்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ஆஸிம்(ரலி) வந்துவிட்டுச் சென்றபின் உயர்ந்தோன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை அருளியிருந்தான். எனவே, (தம்மிடம் வந்த) உவைமிர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'உங்களின் விஷயத்தில் அல்லாஹ் குர்ஆன் (வசனத்தை) அருளிவிட்டான்' என்று கூறி, தம்பதியர் இருவரையும் அழைத்தார்கள். அவர்கள் இருவரும் வந்து பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். பிறகு உவைமிர்(ரலி) அவர்கள், '(இதற்குப் பிறகும்) அவளை நான் எண்ணுடனேயே வைத்துக் கொண்டிருந்தால் நான் பொய் சொன்னதாக ஆகிவிடும், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறிவிட்டு (விவாக விலக்குச் செய்து) மனைவியிடமிருந்து (தாமாகவே) பிரிந்து கொண்டார்கள். அவ்வாறு அவளைப் பிரிந்துவிடுமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. (அவராகவே அந்த முடிவுக்கு வந்தார்.) பிறகு (இந்தத் தம்பதியரின் சம்பவமே) சாப அழைப்புப் பிரமாணம் செய்வோருக்கான வழிமுறையாகத் தொடர்ந்தது.
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'இவளைக் கண்காணித்துவாருங்கள்; இவள் அரணையைப் போன்று குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் கணவன் சொன்னது பொய் என்றே நான் கருதுவேன். இவள் கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளின் மீது உவைமிர் சொன்னது உண்மை என்றே நான் கருதுவேன்' என்றார்கள். பிறகு விரும்பத்தகாத அந்தத் தோற்றத்திலேயே அவள் குழந்தை பெற்றெடுத்தாள்.32
Book :96
7305. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் மாலிக் இப்னு அவ்ஸ் இப்னி ஹதஸான்(ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக் சம்பவம் பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் 'யர்ஃபஉ' என்பவர் அவர்களிடம் வந்து, 'உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கோருகின்றனர்; தங்களுக்கு இசைவு உண்டா?' என்று கேட்டார். உமர்(ரலி) அவர்கள், 'ஆம் (வரச் சொல்லுங்கள்)' என்று கூறினார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்போது (மீண்டும்) யர்ஃபஉ (வந்து), 'அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?' என்று கேட்டார். அவர்கள் இருவருக்கும் அனுமதி அளித்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்கள், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் (என்னுடைய) இந்த அக்கிரமக்கார(ப் பங்காள)ருக்கும் இடையே (இச்சொத்து தொடர்பாக) தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அப்போது (அங்கிருந்த) உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்தம் தோழர்களும் கொண்ட அந்தக் குழுவினர் 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்துவிடுங்கள்' என்று கூறினர்.
உமர்(ரலி) அவர்கள், 'சற்று பொறுங்கள். வானமும் பூமியும் எந்த அல்லாஹவின் கட்டளையால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன்: 'இறைத்தூதர்(ஸல்) அவர்க்ள, '(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே' என்று தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், '(ஆம்) நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்' என்று பதிலளித்தனர். உமர்(ரலி) அவர்கள், அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவ்விருவரும், 'ஆம் (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)' என்று பதிலளித்தனர்.
உமர்(ரலி) அவர்கள், 'அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன்: '(போரிடாமல் கிடைத்த) இந்த ('ஃபய்உ')ச் செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ் எச்செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று' எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து 'எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கே கொடுத்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடாந்திரச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு,) 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்களைக் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், 'உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும், 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தனர்.
(தொடர்ந்து,) 'பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது ('கலீஃபா' பொறுப்பேற்ற) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்' என்று கூறி அ(ந்த செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கிச் சொல்கிறார்கள் 'அபூ பக்ர் அச்செல்வத்தில் இன்னின்னவாறு செயல்படுகிறார்' என்று கூறினீர்கள். அல்லாஹ் அறிவான். அபூ பகர்(ரலி) அவர்கள் அது விஷயத்தில் உண்மையே சொன்னார்கள். நல்லதே செய்தார்கள்; நேரான முறையில் நடந்து சத்தியத்தையே பின்பற்றினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது (கலீஃபா பொறுப்பேற்ற) நான், 'இறைத்தூதர்(ஸல்), அ(ச் செல்வத்)தை இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி நானும் செயல்பட்டுவந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; உங்கள் இருவரின் பேச்கும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. நீங்கள் இருவரும் ஒன்றுபட்டே இருந்தீர்கள். (அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (-நபி) இடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். இவரும் (-அலீயும்) தம் துணைவியாருக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்கவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கோரியபடி என்னிடம் வந்தார். அதற்கு நான் உங்கள் (இருவரிடமும்,) 'நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டர்களோ, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்து விடுகிறேன்; அவ்வாறில்லையாயின் இது விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னிடம் பேச வேண்டாம்' என்று நான் சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், 'எங்களிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்; அந்த நிபந்தனைகள் படியே (நாங்கள் செயல்படுகிறோம்)' என்று சொன்னீர்கள். அதனடிப்படையிலேயே உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?' என்று கேட்டார்கள். இருவரும் 'ஆம்' என்றார்கள். உமர்(ரலி) அவர்கள், 'இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் மறுமை வரும்வரை இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் அளிக்கமாட்டேன்! உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்கு பதிலாக நானே அதைப் பராமரித்துக்கொள்கிறேன்' என்றார்கள்.33
Book :96
பாடம் : 6 மார்க்கத்தில் புதியவற்றை (பித்அத்தை)ப் புகுத்துவபனுக்குப் புக-டம் தருவது பாவமாகும். இது தொடர்பான ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அலீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.34
7306. ஆஸிம் இப்னு சுலைமான் அல்அஹ்வல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; இன்ன இடத்திலிருந்து இன்ன இடம் வரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும், சொன்னார்கள்:) அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக்கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்' என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள்.35
அனஸ்(ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், 'அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கிறவன் மீது' என்று வந்துள்ளது.
Book : 96
பாடம் : 7 (அடிப்படை ஆதாரங்களுக்கு மாறான) சொந்தக் கருத்தும் வ-ந்து திணிக்கப்படும் கணிப்பும் இழிவானவை ஆகும்.36 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எதைப் பற்றி உங்களுக்கு(த் தீர்க்கமான) ஞானம் இல்லையோ அதைப் பற்றிப் பேச வேண்டாம் (17:36). (நூஹே!) நீங்கள் அறியாதவற்றைப் பற்றி என்னிடம் (துருவிக்) கேட்காதீர்கள் (11:46).
7307. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்' என்று கூறக் கேட்டேன்.
பிறகு நான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம், 'என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்' என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்' என்றார்கள்.37
Book : 96