பாடம் : 1 ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு,அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள்- நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)
876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 11
பாடம் : 2 ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது அவர்கள் மீது கடமையா என்பதும்.
877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 11
878. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து 'ஏனிந்தத் தாமதம்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்' என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) 'உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!' என்று கேட்டார்கள்.
Book :11
879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.'
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book :11
பாடம் : 3 ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது.
880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் 'குளிப்பது அவசியம்' என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது' என்று குறிப்பிட்டார்கள்.
Book : 11
பாடம் : 4 ஜுமுஆவின் சிறப்பு.
881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 11
பாடம் : 5
882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் பாங்கைக் கேட்டதும் உளூச் செய்வதற்குத் தவிர (குளிப்பதற்கு) நேரமில்லை' என்றார். அதற்கு, 'உங்களில் ஒருவர்ஜும்ஆவுக்குச் செல்வதாயிருந்தால் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் கேள்விப் படவில்லையா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள்.
Book : 11
பாடம் : 6 ஜுமுஆவுக்காக தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது.
883. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.'
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
Book : 11
884. தாவூஸ் அறிவித்தார்.
'ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சிலர் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு குளிப்பைப் பொறுத்த வரை சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது' என்று விடையளித்தார்கள்.
Book :11
885. தாவூஸ் அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ எண்ணெய்யோ ஒருவரின் இல்லத்தில் இருந்தால் அதைப்பூசிக் கொள்ள வேண்டுமா?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'எனக்குத் தெரிய வில்லை' என்று விடையளித்தார்கள்.
Book :11
பாடம் : 7 தம்மிடம் இருப்பதில் அழகான ஆடையை ஜுமுஆவுக்காக அணிந்து கொள்ளவேண்டும்.
886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். 'மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.
Book : 11
பாடம் : 8 ஜுமுஆ நாளில் (ஜுமுஆத் தொழுகைக்காக) பல் துலக்குவது. (ஜுமுஆத் தொழுகைக்காக) பல்துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (காண்க: ஹதீஸ்எண்- 880)
887. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 11
888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :11
889. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.
Book :11
பாடம் : 9 பிறரது பல்துலக்கும் குச்சியால் ஒருவர் பல் துலக்குவது.
890. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) 'அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி, மென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 11
பாடம் : 10 ஜுமுஆ நாள் ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை.
891. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் ஸஜ்தா'வையும் 'ஹல்அதா அலல் இன்ஸான்' என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.
Book : 11
பாடம் : 11 நகரங்களிலும் கிராமங்களிலும் ஜுமுஆ நடத்துவது.
892. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நடத்தப் பட்ட ஜும்ஆவுக்கு அடுத்து பஹ்ரைனில் உள்ள ஜுவாஸா எனும் கிராமத்தில் அப்துல் கைஸ் பள்ளியில்தான் முதன்முதலாக ஜும்ஆ நடந்தது.
Book : 11
893. அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.'
'ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்' என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
Book :11
பாடம் : 12 ஜுமுஆவுக்கு வராத பெண்கள் சிறுவர்கள் போன்றோர் மீது குளியல் கடமையா? யாருக்கு ஜுமுஆத் தொழுகை கடமையோ அவர் மீதே குளியலும் கடமை என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்கள்.
894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 11
895. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.'
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book :11