பாடம் : 1 இரு பெரு நாட்களும் அதில் அலங்காரம் செய்து கொள்வதும்.
948. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்' என்று கூறினார்கள்.
தற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்!' என்று கூறினார்கள்.
Book : 13
பாடம் : 2 பெரு நாள் தினத்தில் ஈட்டிகள், தோல்கேடயங்கள் (உள்ளிட்ட போர்க்கருவிகளால்) வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவது).
949. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'புஆஸ்' (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து 'நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?' என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி 'அவ்விருவரையும்விட்டு விடுங்கள்' என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர்.
Book : 13
950. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) 'அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!' என்று கூறினார்கள்.
Book :13
பாடம் : 3 இரு பெரு நாட்களிலும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை (சுன்னத்).
951. பராஃ(ரலி) அறிவித்தார்.
'நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன்பின்னர் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையைப் பேணியவராவார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
Book : 13
952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்' என்று கூறினார்கள்.
Book :13
பாடம் : 4 நோன்புப் பெரு நாள் தினத்தில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
953. அனஸ்(ரலி) அறிவித்தார்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Book : 13
பாடம் : 5 ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் (தொழுகைக்கு முன்பே) உண்ணுதல்.
954. அனஸ்(ரலி) அறிவித்தார்.
'(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து 'மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது; சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது' என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி(ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.
Book : 13
955. பராஃ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.' என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்' என்றார். அப்போது நபி(ஸல்) 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
Book :13
பாடம் : 6 பெரு நாள் தொழுகைக்காக சொற்பொழிவு மேடையேதும் இல்லாத (திறந்த வெளித்) திடலுக்குச் செல்வது.
956. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன்.
அதற்கு மர்வான் 'நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது' என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாகமிகச் சிறந்ததாகும் என கூறினேன்.
அதற்கு மர்வான் 'மக்கள் தொழுகைகுப் பிறகு இருப்பதில்லை' எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார்.
Book : 13
பாடம் : 7 பெரு நாள் தொழுகைக்காக நடந்தும் வாகனத்திலும் செல்லலாம். (பெரு நாள் தொழுகைக்கு) பாங்கும் இகாமத்தும் வேண்டியதில்லை.
957. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.
Book : 13
958. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகை தொழப் புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள்.
Book :13
959. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.
Book :13
960. ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்:
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.
Book :13
961. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள்.
பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள்.
உரை நிகழ்த்தி முடித்துவிட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்குப் போதனை செய்வது இன்றைக்கும் இமாம்களின் மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா? என அதாஃவிடம் கேட்டேன். அதற்கு 'நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாமலிருக்க முடியும்?' என்று கேட்டார் என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.
Book :13
பாடம் : 8 தொழுகைக்குப் பிறகே உரை.
962. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான், நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
Book : 13
963. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர்.
Book :13
964. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.
Book :13
965. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
'இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)' என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக் கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று விடையளித்தார்கள்.
Book :13
பாடம் : 9 பெரு நாளின் போதும் ஹரம்-புனித எல்லைக்குள்ளும் ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. பெரு நாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்கள் தடைவிதிக்கப்பட்டார்கள். ஆனால் எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
966. ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) உடைய பாதத்தின் மையப் பகுதியில் அம்பு தாக்கி அவர்களின் பாதம் வாகனத்துடன் ஒட்டிக் கொண்ட சமயத்தில் நான் அவர்களுடன் இருந்தேன். நான் (கீழே) இறங்கி அதைப் பிடுங்கினேன். இது மினாவில் இருந்தபோது நடந்தது.
இச்செய்தி ஹஜ்ஜாஜு(பின் யூஸுஃபு)க்குக் கிடைத்து அவர் நோய் விசாரிக்க வந்தார். 'உம்மைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (நடவடிக்கை எடுப்போம்)' என்று அப்போது குறிப்பிட்டார்.
அதற்கு இப்னு உமர்(ரலி) 'நீர் தாம் தாக்கினீர்' என்றார்கள். 'அது எப்படி?' என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். 'ஆயுதம் கொண்டு செல்லக் கூடாத நாளில் நீர் தாம் ஆயுதம் தரித்தீர்! ஹரம் எல்லையில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படக் கூடாது என்ற நிலையில் நீர் ஹரம் எல்லையில் ஆயுதங்களை நடமாட விட்டீர்' என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்.
Book : 13
967. ஸயீத் இப்னு அம்ர் ( அறிவித்தார்) இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது நானும் அவர்களுடனிருந்தேன். 'இப்னு உமர்(ரலி) எப்படி இருக்கிறார்?' என்று (என்னிடம்) கேட்டார். நலமாக உள்ளார் என்று கூறினேன்.
பிறகு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'உம்மைத் தாக்கியவர் யார்?' என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். 'அயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத நாளில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கியவர்' என்று ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக் குறிப்பிட்டார்கள்.
Book :13