970. முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸஃபீ அறிவித்தார்.
நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன்;. அதற்கவர்கள் 'தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப் படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப் படவில்லை' என்று விடையளித்தார்கள்.
Volume :1 Book :13
971. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
Volume :1 Book :13
972. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.
Volume :1 Book :13
973. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப் பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்) தொழுவார்கள்.
Volume :1 Book :13
974. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள்.
Volume :1 Book :13
975. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் (சிறுவனாக இருக்கும் போது) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் (பகுதிக்கு) வந்து அவர்களுக்குப் போதனையும் அறிவுரையும் வழங்கினார்கள். தர்மம் செய்யுமாறும் அவர்களை வலியுறுத்தினார்கள்.
Volume :1 Book :13
976. பராஃ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் பகீஃ எனுமிடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களை நோக்கி, 'இன்று நாம் செய்யும் முதல் காரியம் தொழுகையை நிறைவேற்றுவது. பின்னர்(இல்லம்) திரும்பி (குர்பானிப் பிராணியை) அறுப்பது. இவ்வாறு தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் தம் குடும்பத்தாருக்காக, அவசரமாக அறுத்தவராவார். அது குர்பானியாகாது' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்கு முன்பே) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய ஆட்டை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று இருக்கிறது. (அதை அறுக்கலாமா?)' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதை அறுப்பீராக! உமக்குப் பின் மற்றவர்களுக்கு இது பொருந்தாது" என்று கூறினார்கள்.
Volume :1 Book :13
977. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்:
நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்ததுண்டா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஆம்! (நபி(ஸல்) அவர்களுடன்) நெருக்கமான உறவு எனக்கு இல்லாவிட்டால் நான் சிறுவனாக இருந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது' என்று கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் கஸீர் இப்னு ஸல்த் என்பவரின் இல்லத்தினருகில் இருந்த அடையாளத்திற்கு வந்தார்கள். பிறகு தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்களிடம் வந்தார்கள். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார்கள். பெண்களுக்குப் குனிந்து தம் கைகளால் பிலாலுடைய துணியில் பொருட்களைப் போட்டதை பார்த்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரலி) உடன் தம் இல்லத்திற்கு புறப்பட்டனர்' என்றார்கள்.
Volume :1 Book :13
978. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்திவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கிப் பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள்.
(ஜாபிர் வழியாக இதை அறிவிக்கும்) அதாஃவிடம் பித்ரு ஸதகாவையா? என்று கேட்டேன். அதற்கவர் 'இல்லை! அப்போது அவர்களாக விரும்பிச் செய்த தர்மத்தையே போட்டனர். கால் விரலில் அணிந்து கொள்ளும் மெட்டிகளையும் அவர்கள் போட்டுள்ளனர்' என்று விடையளித்தார்.
இமாம் பெண்களுக்கும் போதனை செய்வது அவசியமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? என அதாஃவிடம் கேட்டேன். அதற்கவர் 'நிச்சயமாக அவர்களுக்கு அது கடமை தான். அதை அவர்கள் எப்படிச் செய்யாமலிருக்க முடியும்?' என்று பதிலளித்தார் என இப்னு ஜுரைஜ் அறிவித்தார்.
Volume :1 Book :13
979. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுகை நடத்துபவர்களாக அவர்கள் இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் மக்களைத் தம் கைகளால் அமரச் செய்தது இன்றும் நான் பார்ப்பது போலுள்ளது. பிறகு ஆண்களை (வரிசையினூடே) பிளந்து கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். 'நபியே உம்மிடம் இறைநம்பிக்கையுள்ள பெண்கள் உறுதி மொழி எடுக்க வரும் போது" (திருக்குர்ஆன் 60:12) என்ற வசனத்i ஓதினார்கள். ஓதி முடித்துவிட்டு 'இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?' என்று கேட்டார்கள். எவரும் விடையளிக்கவில்லை. ஒரு பெண் மட்டுமே 'ஆம்' என்றார். அவர் யாரென்று அறிவிப்பாளர் ஹஸனுக்குத் தெரியவில்லை - பிலால் தம் ஆடையை ஏந்தினார்.
'வாருங்கள்! தாய் தந்தையரை அர்ப்பணிக்க வாருங்கள்!' என்று பிலால் கூறினார். மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்.
Volume :1 Book :13
980. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தவராவார்.
உம்மு அதிய்யா கூறினார்:
'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்மு அதிய்யா(ரலி) '(என்னிடம்) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என கேட்டேன். அதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார்கள். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம்' என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார்.
'கன்னிப் பெண்களும் மாதவிடாய் பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்) எனக் கேட்டபோது, 'மாதவிடாயுள்ள பெண் அரஃபாவிலும் மற்ற (மினா, முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்கள்.
Volume :1 Book :13
981. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள்.
Volume :1 Book :13
982. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர்.
Volume :1 Book :13
983. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்" என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் சாப்பிட்டு விட்டோம்" என்றார். அப்போது நபி(ஸல்) 'அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறுமாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?' என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
Volume :1 Book :13
984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுகை நடத்திவிட்டு உரை நிகழ்த்தினார்கள். தொழுகைக்கு முன் (குர்பானிப் பிராணிகளை) அறுத்தவர் மீண்டும் அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அன்ஸார்களைச் சேர்ந்த ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு வறுமை நிறைந்த அண்டை வீட்டார் உள்ளனர். (அவர்களுக்கு முன்பே நான் அறுத்து விட்டேன் என்னிடம் கொழுத்த இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?) என்று கேட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
Volume :1 Book :13
985. ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். 'தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்ரை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்" என்றார்கள்.
Volume :1 Book :13
986. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.
Volume :1 Book :13
987. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' எனும் 'கொட்டு' அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி 'அபூ பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்" என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.
Volume :1 Book :13
988. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(உமரே!) அவர்விட்டு அபீ ஸீனியர்களை நோக்கி 'அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்!" என்று கூறினார்கள்.
Volume :1 Book :13
989. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலாலும் சென்றனர்.
Volume :1 Book :13