பாடம் : 1 வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை.
990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் :
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்' என்று கூறினார்கள்.
Book : 14
991. நாஃபிவு அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள்.
Book :14
992. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம். நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூச்) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். என்னுடைய காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள், இன்னும் இரண்டு ரக்அத்கள் மறுபடியும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து மற்றும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஸுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்.
Book :14
993. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், 'மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். எல்லாமே அனுமதிக்கப் பட்டது தாம். இதில் எப்படிச் செய்தாலும் குற்றமில்லை என கருதுகிறேன்' என்று குறிப்பிட்டார்கள்.
Book :14
994. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.
Book :14
பாடம் : 2 வித்ருத் தொழுகையின் நேரம். தூங்குவதற்கு முன் வித்ருத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
995. அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார்.
ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னுள்ள (ஸுன்னத்) இரண்டு ரக்அத்களில் நீண்ட அத்தியாயங்களை நாங்கள் ஓதலாமா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத்தைக் கொண்டு அவற்றை ஒற்றையாக்குவார்கள். பாங்கு சொல்லி முடித்தவுடன் விரைந்து இரண்டு ரக்அத்களைத் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book : 14
996. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.
Book :14
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரை வித்ருத் தொழுகைக்காக உறக்கத்திலிருந்து எழுப்பியது.
997. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழ எண்ணும்போது என்னை எழுப்புவார்கள். நானும் தொழுவேன்.
Book : 14
பாடம் : 4 ஒருவர் தமது நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும்.
998. இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்:
'இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 14
பாடம் : 5 வாகனப் பிராணியின் மீது அமர்ந்தவாறு வித்ருத் தொழுகை தொழுவது.
999. ஸயீத் இப்னு யஸார் அறிவித்தார் நான் மக்கா செல்லும் வழியில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் இரவு பயணம் மேற்கொண்டுடிருந்தேன் ஸுப்ஹை (நெருங்குவதை) அஞ்சிய நான் வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதுவிட்டுப் பின்னர் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன் அப்போது அவர்கள் எங்கே சென்றிருந்தீர் என்று கேட்டனர் நான் ஸுப்ஹை அஞ்சி வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதேன் என்றேன் அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இருக்கிறது என்றேன் அப்போது இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கிறார்கள் எனக் கூறினார்கள்.
Book : 14
பாடம் : 6 பயணத்தில் வித்ருத் தொழுவது.
1000. இப்னு உமர்(ரலி) கூறியதாவது
நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள் கடமையான தொழுகை தவிர (உபரியான) இரவுத் தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுது கொண்டிருப்பார்கள் தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்.
Book : 14
பாடம் : 7 (தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுதல்.
1001. முஹம்மது கூறியதாவது நபி(ஸல்) அவர்கள் ஸீப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'ஆம்' என்றனர். 'ருகூவுக்கு முன்பு குனூத் ஓதி இருக்கிறார்களா?' என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு 'ருகூவுக்குப் பின்பு சிறிது காலம் (நபி(ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள்) என விடையளித்தார்கள்.
Book : 14
1002. ஆஸிம் அறிவித்தார்.
குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு 'ருகூவுக்கு முன்பு தான்' என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினார்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள்.
Book :14
1003. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.
Book :14
1004. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது.
Book :14

பாடம் : 1 மழை வேண்டுதலும், மழைவேண்டிப் பிரார்த்திக்க நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றதும்.
1005. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
Book : 15
பாடம் : 2 யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
1006. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் 'இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று; இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று. இறைவா! நம்பிக்கையாளர்களில் பலவீனர்களைக் காப்பாற்று. இறைவா! முழர் கூட்டத்தினர் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இவர்களுக்கு யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!' என்று கூறுபவர்களாக இருந்தனர். மேலும் 'ம்ஃபார் கூட்டத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! அஸ்லம் கூட்டத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
இது ஸுப்ஹுத் தொழுகையில் நடந்ததாகும் என அபூ ஸீனாத் கூறுகிறார்.
Book : 15
1007. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!' என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தையும் வேரறுத்தது. தோல்கள், பிணங்கள் ஆகியவற்றை உண்ணலானார்கள். அவர்கள் (மழை மேகம் தென்படுகிறதோ என்று) வானத்தைப் பார்க்கும்போது பசியினால் புகை மூட்டத்தையே காண்பார்கள். இந்நிலையில் அபூ ஸுப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! நீர் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டுமென்வும் கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யும்' என்று கூறினார். அப்போது பின்வரும் வசனங்களை அல்லாஹ் கூறினான்.
'எனவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பாரும்!
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும் 'இது நோவினை செய்யும் வேதனையாகும்.
எங்கள் இறைவனே! நீ எங்களைவிட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம்' (எனக் கூறுவர்).
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம் பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கிறார்கள்.
அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி '(மற்றவர்களால் இவர்) கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்' எனக் கூறினர்.
நிச்சயமாக! நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புவர்களே.
ஒரு நாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழிதீர்ப்போம்'. (திருக்குர்ஆன்: 44:10-16)
கடுமையான பிடி என்பது பத்ருப் போரில் ஏற்பட்டது புகை மூட்டமும் கடுமையான பிடியும் நடந்தேறியது. அதுபோல் ரூம் அத்தியாயத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்பும் நிறைவேறியது.
Book :15
பாடம் : 3 பஞ்சம் நிலவும் போது மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது.
1008. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
'இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்று அபூ தாலிப் பாடிய கவிதையை இப்னு உமர்(ரலி) எடுத்தாள்பவராக இருந்தனர்.
Book : 15
1009. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.
'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூ தாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன்.
Book :15