கிப்லா
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும் போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும.; கஅபா ஆலயத்தையே தொழுவதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்க கூடாது. எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏக இறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பதுதான் இதற்குக் காரணம்.

பலரும் சேர்ந்து தொழும் இடங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத்தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.
மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்.

குர்பானி
முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும். இவ்வாறு பலியிடுவது இறைவனைச் சென்றடையும் என்று கருதக் கூடாது. ஏனெனில் அவற்றின் இரத்தங்களோ, இறைச்சிகளோ அல்லாஹ்வை அடையாது என்று திருக்குர்ஆன் அறிவிக்கிறது. (22:37)

பொருளாதாரம் தொடர்பான எதையும் இறைவனுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு. எனவே ஏழைகள் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும், இப்ராஹீம் நபியைப் போல் எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்பதை உணர்த்தும் வகையிலும் தான் இது கடமையாக்கப்பட்டுள்ளது.

தவாஃப்
தவாஃப் என்றால் சுற்றுதல் எனப் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தவாஃப் என்பது கஅபா ஆலயம் நமக்கு இடது கைப்பக்கம் இருக்குமாறு ஏழு தடவை சுற்ற வேண்டும். இதுதான் தவாஃப் என்பது. இது ஹஜ் மற்றும் உம்ராவின் ஒரு பகுதியாகும்.

தவ்ராத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டது போல மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதமே தவ்ராத். தவ்ராத் பற்றியும், மூஸா நபி பற்றியும் பல இடங்களில் குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறது.

தாலூத்
தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும்பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான்.

தாவூத்
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.

துப்பஉ
துப்பஉ என்ற பெயரில் ஒரு சமுதாயம் இருந்ததாகவும், அவர்கள் குற்றம் புரிந்ததால் அழிக்கப்பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது. அவர்களைப் பற்றிய அதிகமான விபரம் ஏதும் கூறப்படவில்லை.

துல்கர்னைன்
இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்த நல்ல மன்னர் என்று குர்ஆன் கூறுகிறது. இவரைப் பற்றி குர்ஆன் 18:83 முதல் 18:98 வரை கூறப்பட்டுள்ளது.

துல்கிஃப்ல்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி கூறவில்லை.

நபிமார்கள்
நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள். நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை.

நூஹ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் மிகவும் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார்.

பஜ்ரு
பஜ்ர் என்பது ஐந்து நேரத் தொழுகையில் வைகறையில் தொழப்படும் முதல் தொழுகையின் பெயர் ஆகும். சில இடங்களில் வைகறை நேரத்தையும் இச்சொல் குறிக்கும்.

பாபில் நகரம்
திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது ஈராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.

மத்யன்
இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகரமாகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

மர்யம்
இவர் ஈஸாவின் தாயார். கிருத்தவர்கள் இவரை மேரி என்பர். திருக்குர்ஆனில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் பெண்மணி இவர்தான்.

மன்னு, ஸல்வா
மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க புகாரி : 4478, 4639,5708) அவ்வுணவுகள் யாவை என்பதை அறிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. இறைவன் தன் புறத்திலிருந்து சிறப்பாக அந்த சமுதாயத்திற்கு உணவளித்தான் என்ற அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.

மனாத்
நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே மனாத்.

மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக்குன்றின் பெயராகும்.

மஸீஹ்
ஈஸா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

மஸ்ஜிதுல் ஹராம்
கஅபா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

முஸ்லிம் - முஸ்லிம்கள்
முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் ‘அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்’ என்பதாகும். இச்சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தாமல் எல்லா இடங்களிலும் முஸ்லிம் என்றே குறிப்பிடுகிறோம்.

இச்சொல்லை தமிழக முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லீம் என்று நெடிலாக உச்சரித்தும் எழுதியும் வருகின்றனர். அது தவறாகும். முஸ்லிம் என்பதே சரியாகும்.

மூஸா
திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிருத்தவர்கள் இவரை மோஸே என்பர்.

யஃகூப்
இஸ்ராயீல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

யஃஜூஜ், மஃஜூஜ்
இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்னைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்துவிட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க 18:94, 21:96)

யஸ்ரிப்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பெயர்தான் யஸ்ரிப். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர் மதீனா எனச் சுருங்கியது.

யஹ்யா
இவர் ஜகரிய்யா நபியின் மகனும் இறைத்தூதருமாவார். இவர் ஜகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிருத்தவர்கள் இவரை யோவான் என்பர்.

யூஸுஃப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மற்ற இறைத்தூதர்களிலிருந்து பலவகையான தனிச் சிறப்புகள் இவருக்கு உள்ளன. பாரம்பரியம், குணம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்கவேண்டுமென்றால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும். இவரும் இறைத்தூதராக இருந்தார். இவரது தந்தை யஃகூப் என்றழைக்கப்படும் இஸ்ராயீல். இவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக். அவரும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீம். அவரும் இறைத்தூதர் ஆவார். இந்த கருத்தில் நபிமொழியும் உள்ளன. (புகாரி 3382, 3390, 4688)
குர்ஆனில் இவருடைய வரலாறுதான் சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான். இவரைப் பற்றி அறிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

யூனுஸ்
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப்போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே அவர்கள் திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது. இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே அவரை அல்லாஹ் தண்டித்தான்.

ருகூவு
பணிதல் என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகையில் குனிந்து சிறிது நேரம் நின்று கூற வேண்டியவற்றைக் கூறுவது ருகூவு எனப்படும். பணிதல் என்ற பொருளிலும், தொழுகையின் ஒரு நிலை என்ற பொருளிலும் திருக்குர்ஆனில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைச் சற்று கவனித்தால் கண்டு கொள்ளலாம்.

ரூஹு, ரூஹுல் குதுஸ்
வானவர்களின் தலைவராக திகழ்பவர் ஜிப்ரயீல் எனும் வானவர். இவர் திருக்குர்ஆனில் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். ரூஹு, ரூஹுல் குதுஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார். ரூஹு என்றால் உயிர் என்றும், ரூஹுல் குதுஸ் என்றால் பரிசுத்த உயிர் என்றும் பொருள்.

லாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கையுடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயர் லாத்.

லூத்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சமகாலத்தவராக இருந்தார். ஆயினும் வேறு பகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார். இவரது சமுதாயம் பல கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

வஹீ
வஹீ என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பது இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்.

ஷுஐப்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் அவரது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.

ஷைத்தான்
இப்லீஸ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஸஃபா, மர்வா
இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக் குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன் முதன்முதலில் இப்றாஹீம் நபி தமது மனைவியையும், கைக்குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார். அப்போது குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக்குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (புகாரி : 3364, 3365)

எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இதற்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த இருமலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக் குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்ட வெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான்.

ஸகாத்
கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. 87 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்பிற்குரிய பணம், வெள்ளி மற்றும் வர்த்தகப் பொருட்கள் வைத்திருப்போர் அதில் கட்டாயமாக இரண்டரை சதவிகிதம் வழங்குவது ஸகாத் எனப்படும்.

குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனம் மற்றும் வீட்டு உயயோகப் பொருட்கள் தவிர மற்ற அனைத்துக்கும் மதிப்பிட்டு இரண்டரை சதவிகிதம் வழங்கியாக வேண்டும். அதுபோல் விளை பொருட்களில் நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவாரியாக விளைபவற்றில் பத்து சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கி விட வேண்டும். அழுகும் பொருட்கள் மட்டும் விதிவிலக்குப் பெறும்.
நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள், ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு). இஸ்லாமிய அரசாக இருந்தால் கட்டாயமாக வசூலிக்கப்படும். (9:103)

ஸகாத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன. ஸகாத் குறித்த ஏனைய சட்டங்கள் நபிமொழிகளில் தான் காணக் கிடைக்கிறது. ஸகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது.

ஜகரிய்யா
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம். இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுமுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும்போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்தததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக் கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஜகரிய்யா நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் ஆதாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் இருக்கும் போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும். மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.

ஜக்கூம்
நரகவாசிகளுக்கு உணவாக வழங்கப்படும் மரத்தின் பெயரே ஜக்கூம்.

ஜபூர்
தாவூது நபிக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் ஜபூர் (பார்க்க 4:163, 17:55)

ஸமூத்
ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.

ஸலாம்
சாந்தி, அமைதி, நிம்மதி என்று இச்சொல் பொருள்படும். ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது கூறும் வாழ்த்து இஸ்லாமிய வழக்கில் ஸலாம் எனப்படும்.

ஸஜ்தா - ஸுஜுது
இதன் அகராதிப் பொருள் பணிவு, பணிதல் என்பதாகும். பல இடங்களில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தொழுகையில் உள்ள ஒரு நிலையை இச்சொற்கள் குறிக்கின்றன. அதாவது நெற்றி, மூக்கு, இரண்டு கால் மூட்டுக்கள், இரண்டு உள்ளங்கைகள் ஆகியவை தரையில் படுமாறு இறைவனுக்காக பணிந்து அதில் கூற வேண்டியதைக் கூறுவது தான் ஸஜ்தா எனப்படும். இது தொழுகையின் ஒரு அங்கமாகவும் உள்ளது. தொழுகையில்லாமல் தனியாகவும் செய்யலாம்.

ஸாபியீன்கள்
இறைத்தூதர்கள் அனுப்பப்படாத போதும் அல்லது இறைத்தூதர்கள் வழிகாட்டுநெறி சென்றடையாத போதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்! இவ்வுலகுக்கு ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும். மனிதனால் உருவாக்கப்பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைத்தூதர் வழியாக இல்லாமல் இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொள்வார்கள். மேலும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் போது எவையெல்லாம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்திற்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள். நல்லவை எனத் தெரிபவற்றைக் கடைபிடிப்பார்கள்.

வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள். நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைக் கூறிய போது அவர்களையும் ஸாபியீன்கள் என்று குறிப்பிட்டனர். (பார்க்க புகாரி : 344) யாராவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மார்க்கத்தில் சேர்ந்தால் அவர் ஸாபியீன்களில் சேர்ந்து விட்டார் எனவும் கூறியுள்ளனர். (பார்க்க புகாரி : 3522)
இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும். இல்லையெனில் மறுமையில் அவர்கள் குற்றவாளிகளே.

ஸாமிரி
இவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். மூஸா நபியவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று தூர் மலைக்குச் சென்ற போது நகைகளை உருக்கி காளைக்கன்றின் சிற்பத்தை உருவாக்கினான். இதுதான் இறைவன் எனக் கூறி மூஸா நபியின் சமுதாயத்தை வழிகெடுத்தான்.

ஸாலிஹ்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். வலிமைமிக்க ஸமூத் எனும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா
ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். இம்மரத்தின் ஒவ்வொரு இலையும் யானையின் காதுபோல் பெரிதாக இருக்கும். இம்மரத்தின் பலவிதமான வர்ணங்கள் கண்ணைப் பறித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். புகாரி: 349, 3207, 3342, 3887)

ஸுந்துஸ்
ஸுந்துஸ் என்பது சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடையின் பெயராகும்.

ஸுலைமான்
ஸுலைமான் அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூத் (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி எனலாம். யூத, கிருத்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.

ஸூர்
ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும். இறைவன் தன் வசமுள்ள ஸூர் மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் ஊதப்படும்போது என்ற சொல் குறிப்பிடுகின்றது

ஜைது
இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் எடுத்து வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகனாவார். இஸ்லாத்தில் வளர்ப்பு மகன் இல்லை என்ற கட்டளை வருவதற்கு முன் நபிகள் நாயகத்தின் மகன் என்று இவர் குறிப்பிடப்பட்டார். திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே நபித்தோழர் இவர் மட்டுமே.

ஜாலூத்
கொடுங்கோன்மை புரிந்த ஒரு மன்னனின் பெயரே ஜாலூத். இவனைப் போர்க்களத்தில் தாவூத் நபி அவர்கள் கொன்றார்கள்.

ஜிப்ரீல்
ரூஹு என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஜின்
‘ஜின்’ என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப்போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகம் அடைவார்கள்.

ஹஜ்
முஸ்லிம்களில் சக்தி பெற்றவர்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமைகளில் ஹஜ் ஒன்றாகும். குறிப்பிட்ட நாட்களில் தான் இதை நிறைவேற்ற வேண்டும். மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல், அரஃபா, முஸ்தலிபா, மினா ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தல் ஹஜ் எனப்படும்.

ஹாமான்
இவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனுக்கு அமைச்சராக இருந்தான். இவனைப் பற்றி அதிக விபரம் ஏதும் குர்ஆனில் கூறப்படவில்லை.

ஹாரூத், மாரூத்
இவ்விருவரும் நபிகள் நாயகத்திற்கு முந்தைய சமுதாயத்தில் சூனியம் எனும் வித்தையைக் கற்றுக் கொடுத்த தீயவர்களாவர். இவ்விருவரும் வானவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்களது நடவடிக்கைகள் வானவர்களின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் இவ்விருவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே சரியான கருத்தாகும்.

ஹாரூன்
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரும் மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டாத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.

ஹிஜ்ரத்
ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்;லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு ஊரில், ஒரு நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தின் படி வாழ முடியாத நிலை ஏற்பட்டால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைபிடித்து ஒழுக ஏற்ற இடத்துக்குச் செல்வது தான் ஹிஜ்ரத் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் முஸ்லிம்கள் இந்த நிலையைச் சந்தித்த போது அபீஸீனியாவுக்குச் சிலர் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) மேற்கொண்டனர். வேறு சிலர் மதீனா நகருக்குச் சென்றார். அவர்கள் ஹிஜ்ரத் செய்ததிலிருந்து முஸ்லிம் ஆண்டு ஹிஜ்ரா ஆரம்பமாகிறது. ஹிஜ்ரி முதல் ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53ம் வயது என்பது பொருள். 53ம் வயதில்தான் நபிகள் நாயகம் (ஸல்) தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

ஹுது ஹுது
இது ஒரு பறவையின் பெயராகும். ஸுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு ராணியைப் பற்றி உளவறிந்து ஸுலைமான் நபிக்கு இப்பறவை தெரிவித்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஹுது
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இறைவன் படைப்புகளிலேயே நிகரற்றவர்களாக கருதப்படும் ஆது சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஹூருல் ஈன்
சொர்க்கவாசிகள் வாழ்க்கைத் துணைவியர் ஹூருல் ஈன் எனப்படுவர்.