-2-

ஆ) ஆர்வக் கோளாறு
மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர். மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்கு போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.

நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஸதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

 • மோதிரம் அணிந்து தொழுவது மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.

 • தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.

 • தலைப்பாகை அணிந்து ஒரு ஜும்ஆ தொழுகை தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் எழுபது ஜும்ஆக்களைவிடச் சிறந்தது.

 • நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள்.

 • முஹம்மத் என்ற பெயரைத் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களில் தடவுதல்.

 • ரஜப் 27க்கு சிறப்புத் தொழுகை, நோன்பு நோற்பது.

 • ஷஅபான் 15ம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

 • ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள். குறிப்பிட்ட பகல், குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள்.

 • ஆஷுரா நாளைப்பற்றிக் கூறப்படும் சிறப்புகள் அடங்கிய ஹதீஸ் (அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்பது மட்டும் தான் ஆதாரப்பூர்வமானவை)

 • பாத்திஹா, ஆலஇம்ரான், பகரா, ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்பு அத்தியாயம், குல்வல்லாஹு அத்தியாயம், குல்அவூது பிரப்பில் ஃபலக், குலஅவூது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிருன், தபாரகல்லதி தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்பு பற்றிக் கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.

 • அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணிக் கொண்டு இட்டுகட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.

  இ) தனி மரியாதை பெறுவதற்காக
  மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களின் கடவுளின் ஏஜெண்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்துவிட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

 • ஆலிமுக்கு முன்னால் மாணவன் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகிறான் அவரை விட்டு எழும்போது அன்று பிறந்த பாலகனைப் போல் எழுகிறான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மையைத் தருவான்.

 • சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்கவாசிகள் சந்திப்பார்கள் வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது? என்று தெரியாததால் உலாமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலாமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

 • ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்கு படிக்கும் மாணவரோ ஒரு ஊரைத் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.

 • ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதைவிட சிறந்தது.
  என் சமுதாயத்தின் உலாமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்.
  ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ்.

 • ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.

 • யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னை சந்தித்தவர் போலாவார். உலாமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார்.

 • ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீத்களின் இரத்தத்தை விட சிறந்தது.

 • இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுகட்டியவைகளாகும்.

  ஈ) மன்னர்களை மகிழ்விக்க
  மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள். மன்னர் மஹ்தியின் ஆட்சியின் போது அவருக்கு ஏற்ப ஹதீஸ்களை இட்டுக் கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் இதற்கு உதாரணமாக கூறப்படுகின்றார்.

 • மன்னர்களுக்கு தண்டனை இல்லை.

 • மன்னரின் அனுமதி இன்றி ஜும்ஆ தொழுகை இல்லை.

 • என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம் இது மன்னர்களுக்குகாகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன.

  உ) இயக்க வெறி
  மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்திவெறி காரணமாகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

 • மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்து இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்

 • அலி (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்.

 • துருக்கியர், சூடானியர், அபிசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.

 • ஒரு மொழியை புகழ்ந்தும் மற்ற மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.

 • அது போல் நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.

 • இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள். அலியின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக் கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.

 • இவை அனைத்தும் இத்தகைய வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

  ஊ) பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள
  மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்புப் பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.
  நீண்ட நேரம் - புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களை கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இவற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைத்தட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.
  பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.

 • ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பிண்ணியது. புறா முட்டையிட்டது.

 • இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் துஆக் கேட்டது.

 • அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது.

 • சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்த, இரு கைகள் வழியாக இரு பாதிகளாக வெளியே வந்தது.

 • ஹிழ்ர், இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள். மினாவில் ஆண்டுதோறும் அவர்கள் சந்தித்து கொள்கிறார்கள் என்ற ஹதீஸ்கள்.

 • அலி (ரலி)க்காக மறைந்த சூரியன் மீண்டும் உதித்தது.

 • முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது.

 • எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும்.

 • இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும்.

 • செஸ் விளையாடுபவன் சபிக்கப்பட்டவன்.

 • இப்படியெல்லாம் இட்டுக் கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துகள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!

 • அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.

 • சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.

 • கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.

 • தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது.

 • சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்தது.

 • நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.

 • வறுமை எனக்குப் பெருமை.

 • உண்ணும் போது பேசக் கூடாது.

 • தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.

 • ஒருவனுக்கு எது தெரியவில்லையே அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.

 • அடுத்தவனுக்கு குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.

 • தெரியாது என்று கூறுவது பாதி கல்வியாகும்.

 • பிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.

 • நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்கு கெட்டதாகத் தெரியும்.

 • மூஃமினின் உமிழ் நீர் நோய் நிவாரணியாகும்.

 • தனிமையில் தான் ஈமானுக்கு பாதுகாப்பு.

 • பல் துலக்குவது பேச்சாற்றலை வளர்க்கும்.

 • நல்லடியார்களைப் பற்றி பேசினால் அங்கு அருள் இறங்கும்.

 • எந்த இடத்தில் மக்கள் கூட்டமாகக் இருக்கிறார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள். அவரும் கூட, தான் வலியுல்லாஹ் என்பதை அறியமாட்டார்.

 • நோயாளி முனகுவது தஸ்பீஹ் ஆகும்.

 • சாவதற்கு முன் செத்து விடுங்கள்.

 • அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.

 • அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) செய்த வஸிய்யத் என்ற பெயரில் ஏராளமான கட்டுக் கதைகள்..........

 • இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

  எ) சுயலாபத்திற்காக இட்டுக் கட்டியோர்
  ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைத் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள். இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன், பேரீச்சம் பழம், கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

 • ஆனால் யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் என்று பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமாக இட்டுக்கட்டியுள்ளனர்.

 • இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர்.

 • ஒவ்வொரு நோய்க்கும், நபி(ஸல்) மருந்து கூறியதாகக் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள்.

 • இன்றும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) பெயரில் கூறுவதில் 99 சதவீதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம்.

  ஏ) மூளை குழம்பியவர்களின் உளறல்கள
  சில பேர் முதுமையின் காரணமாக, மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

  இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில சாம்பிள்கள்தாம் இவை. நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும்.

  தங்களின் முழுவாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்ல அறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

  ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகிறார்கள். இது தான் வேதனையான ஒன்று குறைந்த பட்சம் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய நூற்களையாவது மதராஸக்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.