இஹ்ராம் கட்டுவது
ஒருவர் தொழ நாடினால் அவர் ‘அல்லாஹ் அக்பர்’ என்று தக்பீர் கூறவேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாக கூறுகின்ற இந்த தக்பீர், ‘தஹ்ரீமா’ என்று குறிப்பிடப்படுகின்றது. ‘தஹ்ரீமா’ என்றால், தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் விலக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது.

அதுபோல் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறுவதற்குத்தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் மக்கள் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என விளங்கியுள்ளனர். நெஞ்சில் கைகட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக்கூடாது. ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்வதே தக்பீராகும்.

இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். ‘இஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.

ஜுப்பா (குளிராடை) அணிந்து ஒருவர் இஹ்ராம் கட்டிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டார். சற்று நேரம் மௌனமாக இருந்த நபி (ஸல்) அவர்கள், வஹி வந்த பின் ஜுப்பாவைக் கழற்றி விடுமாறு அவருக்குக் கூறினார்கள் (சுருக்கம்)
அறிவிப்பவர் : யஃலாபின் உமய்யா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இஹ்ராமுக்குப் பிரத்தியோகமான ஆடை அணிவது அவசியம் என்றாலும், அவ்வாறு ஆடை அணிவதே இஹ்ராம் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால், “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூறவேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக ஹஜ்ஜன்” என்று கூறவேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக உம்ரதன்” என்று கூறவேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

தல்பியா கூறுதல்
தல்பியாவின் வாசகம் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்திலமைந்த பள்ளிக்கருகில் அவர்களின் வாகனம் எழுந்து நின்றதும், அதன் மேல் அமர்ந்து “அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

பொதுவாக, நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்ததற்கு மேல் நாமாக எதையும் அதிகப்படுத்த அனுமதி இல்லாவிட்டாலும், தல்பியாவின் போது இறைவனைப் புகழும் விதமாக நாமாக சில வாசகங்களை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தல்பியாவுடன் உயர்வுகளுக்கு உரியவன் (தல் மஆரீஜ்) என்ற வார்த்தையையும், இது போன்ற கருத்துடைய வார்த்தைகளையும் மக்கள் சேர்த்துக் கூறலானார்கள். இதனைச்செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் (அவர்களைக் கண்டித்து) எதனையும் கூறவில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட தல்பியாவுடன் “லப்பைக் லப்பைக் வஸஃதைக, வல்கைரு பியதைக வர்ருக்பாவு இலைக வல்அமல்” என்பதை அதிகப்படியாகக் கூறுவார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இந்த ஹதீஸ்களிலிருந்து தல்பியாவில் இறைவனின் பெருமையைக் கூறும் வாசகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை அறிய முடிகின்றது.

தல்பியாவை உரத்துக் கூறுதல்
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தல்பியாவை உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாயிப் பின் கல்லாத் (ரலி) நூல்கள் : ஹாகிம், பைஹகீ.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)

நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

நான் அரஃபாவிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல் : இப்னுகுஸைமா

எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓதவேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.
இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்

இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும்வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச் சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும்போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டிவிடுங்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா


“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ


தைக்கப்படாத ஆடைகளை கிடைக்கும்போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.

“யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
இஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தையல் இல்லாத ஆடை அணிந்து குளித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்கள் : திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, தாரகுத்னி.

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தன்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களின் தலையிலும் தாடியிலும் எண்ணெய்யின் மினுமினுப்பை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.
1. இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது. பிறருக்கு திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்கள்; : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா.


2. மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக்கூடாது.
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட சில மாதங்களாகும். யாரேனும் அம்மாதங்களில் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சச்சரவில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.”
அல்குர்ஆன் - 2 : 197

இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் இந்த வசனம் தடை செய்கின்றது.

3. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர்ப்பிராணியையும் கொல்லக்கூடாது; உண்பதற்காக வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது.

“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். ஏனென்றால், மறைவில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு”. அல்குர்ஆன் - 5:94

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதை உங்களில் நேர்மைமிக்க இருவர் முடிவு செய்யவேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்பு நோற்க வேண்டும்.
அல்குர்ஆன் - 5:95

“உங்களுக்கும் இதரபிராணிகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு (இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களும் ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”.
அல்குர்ஆன் - 5:96

வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது.

இந்த வசனங்களில் வேட்டையாடுவதுதான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டையாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றிதிரியும் மான், முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டையாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடல்வாழ் உயிரினங்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிவிட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்யவேண்டும்.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும். அந்த முடிவுப்படி நடந்து கொள்ள வேண்டும்.

மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும், முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும்.

இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது நோன்பு நோற்க வேண்டும்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் நீங்கள் வேட்டையாடமலிருந்தால் அல்லது உங்களுக்காக வேட்டையாடப்படாமலிருந்தால், நிலத்தில் (மற்றவர்களுக்காக) வேட்டையாடப்பட்டவை ஹலாலாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள். உங்களுக்காகவே வேட்டையாடினேன் என்று நான் கூறியதால் நபி(ஸல்) அவர்கள் சாப்பிடவில்லை. மற்றவர்கள் சாப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா

இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும், அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரே வேட்டையாடினாலோ, அவருக்காகவே வேட்டையாடப்பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக்கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது.

உயிர்பிராணிகளைக் கொல்லக் கூடாது என்பதில் சில விலக்குப் பெறுகின்றன.
வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம

4. இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் தலையை மறைக்ககூடாது ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்கவேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்றால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது முகத்தையோ தலைமுடியையோ மூடவேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா

மறுமையில் அவர் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியயதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

நாங்கள் கடைசி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும்வரை அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து கொண்டார்; மற்றொருவர் அவர்கள் மீது வெயில்படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.
அறிவிப்பவர் : உம்முல் ஹுஸைன் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்

வெயில்படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

5. இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப்பொருட்களை உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசிக்கொள்ளக்கூடாது.

இஹ்ராம் கட்டியவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகக் கூறப்படும் ஹதீஸின் ஒரு அறிவிப்பில் “அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

6. இஹ்ராம் கட்டியவர் ஹஜ் கிரியைகளை முடிக்கும்வரை மயிர்களை நீக்கக்கூடாது. நகங்களை வெட்டக்கூடாது. தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக்கொண்டால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்துவிட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஃ’ பேரீச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர் : கஃப் பின் உஜ்ரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்
இந்தக் கருத்து புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.

உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்கவும் எண்ணினால் தனது முடியையும் நகங்களையும் வெட்டாமல் தடுத்துக் கொள்ளட்டும் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ

குர்பானி கொடுக்கக் கூடிய மற்றவர்களுக்குரிய இந்த தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியதுதான்.

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
ஹஜ்ஜுக்குச் செல்பவர் இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும் என்று நாம் விளங்கினோம். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைபா’ என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ‘ஜுஹ்பா’ என்ற இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன்அல்மனாஸில்’ என்ற இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். “இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்


இந்தியாவிலிருந்து செல்பவர்கள் ‘யலம்லம்’ வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல் போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.