பக்கம் - 116 -
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கவிஞரும் அல்லர். ஏனெனில், கவியையும் அதன் பல வகைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவரை “பைத்தியக்காரர்” என்று கூறினீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் பைத்தியக்காரரும் அல்லர். பைத்தியத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இவருக்கு பைத்தியத்தின் எந்தக் குழப்பமும், ஊசலாட்டமும் இல்லை. குறைஷிகளே! உங்களது நிலையை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கு ஏதோ மிகப்பெரியசிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவன் கூறி முடித்தான்.

எல்லா எதிர்ப்புகளுக்கும், சவால்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அனைத்து ஆசாபாசங்களையும் தூக்கி எறிந்தார்கள். எந்நிலையிலும் தடுமாறவில்லை. மேலும், அவர்களிடம் உண்மை, ஒழுக்கம், பேணுதல், சிறந்த நற்பண்புகள் ஆழமாகக் குடிகொண்டிருந்தன. இதைக் கண்ட இணைவைப்பவர்களுக்கு முஹம்மது உண்மையில் தூதராக இருப்பாரோ? என்ற சந்தேகம் வலுத்தது. எனவே, யூதர்களுடன் தொடர்பு கொண்டு முஹம்மதைப் பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். நழ்ர் இப்னு ஹாரிஸ் அவர்களுக்கு ஏற்கனவே மேற்கூறியவாறு உபதேசம் செய்திருந்தான். அவனையே மற்ற ஓருவருடன் சேர்த்து மதீனாவில் உள்ள யூதர்களிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

நழ்ர் இப்னு ஹாரிஸ் மதீனா சென்று அங்குள்ள யூத அறிஞர்களைச் சந்தித்து நபி (ஸல்) அவர்கள் குறித்து விவாதித்தான். அவர்கள், நீங்கள் அவரிடம்

“1) முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

2) பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

3) ரூஹ் (உயிர்) என்றால் என்ன?

இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதில் கூறினால் அவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட (நபி) தூதராவார். அவ்வாறு கூறவில்லையெனில் அவர் தானாக கதை கட்டி பேசுபவரே என அறிந்துகொள்ளலாம்” என்றனர்.

நழ்ர் மக்காவிற்கு வந்து “குறைஷிகளே! உங்களுக்கும் முஹம்மதுக்கும் இடையிலுள்ள பிரச்சனைக்குச் சரியான தீர்வைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறி யூதர்கள் கூறியதை அவர்களுக்கு அறிவித்தான். குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அம்மூன்று கேள்விகளையும் கேட்டனர். அவர்கள் கேட்ட சில நாட்களுக்குப் பிறகு “கஹ்ஃப்’ என்ற அத்தியாயம் அருளப்பட்டது. அதில் குகைவாசிகளாகிய அவ்வாலிபர்களின் வரலாறும், பூமியை சுற்றி வந்த துல்கர்னைன் என்பவர் சரித்திரமும் தெளிவாக விவரிக்கப்பட்டது. ரூஹைப் பற்றிய பதில் குர்ஆனில் “இஸ்ரா’ என்ற அத்தியாயத்தில் இறங்கியது. இதைத் தொடர்ந்து குறைஷிகள் நபி (ஸல்) அவர்கள் “உண்மையாளரே, சத்தியத்தில் உள்ளவரே’ என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டனர். ஆனாலும் அநியாயக்காரர்கள் ஏற்க மறுத்தனர். (இப்னு ஹிஷாம்)