பக்கம் - 136 -
இதுபோன்ற நற்செய்திகளை மறைமுகமாகவோ, அந்நியர்களுக்குத் தெரியாமல் இரகசியமாகவோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக, முஸ்லிம்கள் இந்த நற்செய்தியை தெரிந்து வைத்திருந்தது போலவே, நிராகரிப்பவர்களும் தெரிந்து வைத்திருந்தனர். அஸ்வத் இப்னு முத்தலிபும் அவனது கூட்டாளிகளும் நபித்தோழர்களை எப்போது பார்த்தாலும் இடித்துரைப்பதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தனர். மேலும், இதோ பாருங்கள் “கிஸ்ரா கைஸன் நாடுகளுக்கு வாரிசுகளாக ஆகப்போகும் அரசர்கள் உங்களைக் கடந்து செல்கிறார்கள்” என்று நபித்தோழர்களைக் குத்திக் காண்பித்து, விசில் அடித்து கைதட்டி கேலி செய்வார்கள்.

இவ்வுலகில் அதிவிரைவில் ஒளிமயமான சிறப்புமிக்க எதிர்காலம் உண்டு என்று கூறப்பட்ட நற்செய்திகளால் எல்லாப் புறத்திலிருந்தும் தங்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் அநியாயங்களையும் கோடை காலத்தில் வெகு விரைவில் களைந்துவிடும் மேகமூட்டமாகவே நபித்தோழர்கள் கருதினார்கள். மேலும், இந்த நற்செய்திகள் உலக வெற்றியை மட்டும் குறிப்பிடாமல் அழியாத மறுமையில் நிலையான சுவர்க்கம் முஸ்லிம்களுக்கு உண்டு என்று கூறியன. இது நபித்தோழர்களுக்கு மிகுந்த ஆறுதலையும் ஆதரவையும் கொடுத்தது.

இதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் ஆன்மாவிற்கு நபி (ஸல்) இறைநம்பிக்கை எனும் பயிற்சி மூலம் வலுவூட்டி வந்தார்கள். அவர்களைக் குர்ஆன் மற்றும் நல்லுபதேசங்களால் பரிசுத்தமாக்கினார்கள்; உலகப் பொருட்களுக்கும் அற்ப சுகங்களுக்கும் அடிமையாவதிலிருந்து விடுவித்து உளத்தூய்மை, நற்பண்பு, உயரிய குணங்கள் என மிக உயர்ந்த தரத்திற்கு தங்களது தோழர்களை மேம்படுத்தினார்கள். அகிலங்களைப் படைத்த அல்லாஹ்வின் பக்கம் அவர்களின் கவனங்களைத் திருப்பினார்கள். “வழிகேடு’ என்ற இருள் அகற்றி “இஸ்லாம்’ என்ற ஒளியில் அவர்களை நிறுத்தினார்கள். துன்பங்களையும் துயரங்களையும் பொறுத்து, சகித்து, துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்காமல் உள்ளத்தை அடக்கி அழகிய முறையில் மன்னிக்கும் பண்பாட்டை நபி (ஸல்) தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் நபித்தோழர்களிடம் மார்க்க உறுதி, ஆசாபாசங்களை விட்டு விலகி வாழ்வது, இறை திருப்திக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வது, சுவர்க்கத்தை விரும்புவது, மார்க்கக் கல்வியின் மீது பேராசை கொள்வது, மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்வது ஆகிய அனைத்தும் காணப்பட்டன. மேலும், மன ஊசலாட்டங்களுக்கு கடிவாளமிட்டு, அற்ப உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுவிடாமல் மனக் குழப்பங்களைக் கட்டுப்படுத்தி பொறுமை, நிதானம், கண்ணியம் ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து சிறந்த நன்மக்களாக விளங்கினார்கள்.