பக்கம் - 138 -
தாஃயிபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள். அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததினால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இதோ நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனை:

“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”

நபி (ஸல்) அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் “திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடு” என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி சாப்பிட்டார்கள்.

இதைக் கண்ட அத்தாஸ் “இந்தப் பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேச்சல்லNவ் உங்களுக்கு இது எப்படித் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு, “உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?” என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் “நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்” என்றார். “நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சரியத்துடன் “யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்” என்றார். “அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார் நானும் இறைத்தூதர் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.