பக்கம் - 143 -
3) ‘ஆமிர் இப்னு ஸஃஸஆ’ கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். அவர்களில் பைஹரா இப்னு ஃபிராஸ் என்பவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இந்த குறைஷி வாலிபரை பிடித்து என்னிடம் வைத்துக் கொண்டால் இவர் மூலம் முழு அரபியர்களையும் நான் வெற்றி கொள்வேன்” என்று கூறினார். மேலும், நபி (ஸல்) அவர்களை சந்தித்து, “உங்களது மார்க்கத்தில் சேர்ந்து நாங்கள் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோம். பிறகு உங்களுக்கு மாறு செய்யும் சமுதாயத்திற்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தந்தால், உங்களுடைய மறைவுக்குப் பின் எங்களுக்கு அதிகாரம் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் விரும்பிய கூட்டத்திற்கு அதைக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு பைஹரா “உங்கள் முன்னிலையில் அரபியர்களுக்கு எதிராக நாங்கள் போரிட்டு அவர்களின் அம்புகளுக்கு எங்கள் கழுத்துக்களை இலக்காக்கிக் கொள்ள, அல்லாஹ் உங்களுக்கு வெற்றி கொடுத்தப்பின் நிர்வாக அதிகாரம் எங்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கா? இதெப்படி நேர்மையாகும்? அப்படிப்பட்ட உங்கள் மார்க்கம் எங்களுக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டான். அதற்குப்பின் அந்த கிளையினரும் இஸ்லாமை ஏற்க மறுத்துவிட்டனர். (இப்னு ஹிஷாம்)

ஆமிர் கிளையினர் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு தங்களது ஊருக்குத் திரும்பியபோது ஹஜ்ஜில் கலந்துகொள்ள இயலாத ஒரு முதியவரிடம் சென்று, “அப்துல் முத்தலிபின் கிளையிலுள்ள குறைஷி வாலிபர் ஒருவர் எங்களிடம் தன்னை ‘நபி’ என்று அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவரை நமது ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று எங்களிடம் கூறினார்” என்றார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் “கைவிட்டுப் போய்விட்டதே! அவரை விட்டுவிட்டீர்களே! எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பொய் கூறமாட்டார்கள். நிச்சயம் அவர் கூறியது உண்மைதான். உங்களது அறிவு உங்களை விட்டு எங்கே போனது?” என்று கடிந்துரைத்து மிகுந்த கைசேதத்தை வெளிப்படுத்தினார்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமை பல குலத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் குழுக்களுக்கும் அறிமுகப்படுத்தியது போன்றே தனி நபர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்களில் சிலரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் நல்ல பதில்களை பெற்றார்கள். ஹஜ் முடிந்து சில காலங்களிலேயே அவர்களில் பலர் இஸ்லாமைத் தழுவினர். அவர்களில் சிலரை இங்கு பார்ப்போம்:

1) ஸுவைத் இப்னு ஸாமித்: இவர் மதீனாவாசிகளில் நுண்ணறிவு மிக்க பெரும் கவிஞராக விளங்கினார். இவன் வீரதீரம், கவியாற்றல், சிறப்பியல்பு, குடும்பப் பாரம்பரியம் ஆகிய சிறப்புகளால் இவரது சமுதாயம் இவரை ‘அல்காமில்’ (முழுமையானவர்) என்று அழைத்தனர். இவர் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக மக்கா வந்தார். இஸ்லாமிய அழைப்புக்காக அவரிடம் நபி (ஸல்) அவர்கள் பேசியபோது அவர் “உங்களிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும் ஒன்றாகத்தான் இருக்கும்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களிடம் என்ன இருக்கிறது?” என்று கேட்டதற்கு “நான் லுக்மான் (அலை) வழங்கிய ஞானபோதனைகளைக் கற்று வைத்துள்ளேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “எனக்கு அதை சொல்லிக் காட்டுங்கள்” என்று கேட்கவே, அவர் அதை சொல்லிக் காண்பித்தார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக இது அழகிய பேச்சுதான். எனினும், என்னிடம் இருப்பதோ இதைவிட மிகச் சிறந்தது. அதுதான் அல்லாஹ் எனக்கு அருளிய குர்ஆன். அது ஒளிமிக்கது நேர்வழி காட்டக்கூடியது” என்று கூறி, குர்ஆனை அவருக்கு ஓதி காண்பித்து, அவரை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். குர்ஆன் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. “இது மிக அழகிய வசனங்கள் உடைய வேதமாக இருக்கிறதே” என வருணித்து இஸ்லாமைத் தழுவினார். பிறகு மதீனா வந்த சில காலத்திலேயே புஆஸ் போருக்கு முன்பாக அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தாடையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அநேகமாக நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இஸ்லாமை தழுவியிருக்கலாம்.