பக்கம் - 15 -
விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ் தோண்டியவர்கள் அழிக்கப் பட்டார்கள்.... (அல்குர்ஆன் 85 : 4-7)

இச்சம்பவத்தால் கிறிஸ்துவர்கள் மிகவும் கொதிப்படைந்து பழிவாங்கத் துடித்தனர். எனவே, ரோமானிய அரசர்களின் தலைமைக்கு கீழ் ஒன்றிணைந்து யமன் நாட்டின் மீது போர் புரிய ஆயத்தமாயினர்.

ரோம் மன்னர்கள் ஹபஷியர்களைத் தூண்டிவிட்டு அவர்களுக்கென கப்பல் மற்றும் படகுகளைத் தயார்செய்து கொடுத்தார்கள். அதன் காரணமாக ‘அர்யாத்’ என்பவன் தலைமையில் ஹபஷாவிலிருந்து 70,000 வீரர்கள் யமன் வந்திறங்கி கி.பி 525ம் ஆண்டு அதனை இரண்டாவது முறையாக கைப்பற்றினர். அர்யாத் கி.பி 549 வரை ஹபஷா மன்னன் கவர்னராக இருந்தான். அர்யாத்தின் தளபதிகளில் ஒருவனான ‘அப்ரஹா இப்னு ஸப்பாஹ் அல் அஷ்ரம்’ என்பவன் அர்யாதை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு ஹபஷா மன்னன் ஒப்புதலுடன் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். இந்த அப்ரஹாதான் இறையில்லமான கஅபாவை இடிக்க படையைத் திரட்டியவன். அவனும் அவனது யானைப் படையினரும் ‘அஸ்ஹாபுல் ஃபீல்’ என அறியப்படுகின்றனர். அந்நிகழ்ச்சிக்குப்பின் ஸன்ஆ திரும்பிய அவனை அல்லாஹ் அழித்தொழித்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ‘யக்ஸூம்’ என்பவனும் அதற்குப் பிறகு இரண்டாவது மகன் ‘மஸ்ரூக்’ என்பவனும் யமனை ஆட்சி செய்தனர். இந்த இருவரும் தங்களது தந்தையைவிட குடிமக்களைக் கொடுமை செய்யும் மிகக் கொடிய கொடுங்கோலர்களாக இருந்தனர்.

யானை சம்பவத்திற்குப்பின் கி.பி. 575ல் யமனியர், மஅதீ கப ஸைஃப் இப்னு தூ யஜின் அல்ஹிம்யரின் தலைமையின் கீழ் பாரசீகர்களின் உதவியுடன் யமனை ஆக்கிரமித்திருந்த ஹபஷியர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை யமனிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரைத் தங்களது அரசராகவும் ஏற்றுக் கொண்டனர். ‘மஅதீ கப’ தனக்கு ஊழியம் செய்யவும் பயணங்களில் துணையாக இருப்பதற்காகவும் ஒரு ஹபஷிப் படையைத் தன்னுடன் வைத்திருந்தார். அவரை அவர்கள் திடீரெனத் தாக்கி வஞ்சகமாகக் கொன்று விட்டனர். அவரது மரணத்துடன் ‘தூ யஜின்’ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு பாரசீக மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் யமன் நாடு வந்தது. பாரசீக மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்தனர். அவர்களில் முதலாமவர் வஹ்ருஜ், பிறகு மிர்ஜ்பான் இப்னு வஹ்ருஜ், பிறகு அவரது மகன் தீன்ஜான், பிறகு குஸ்ரு இப்னு தீன்ஜான், பிறகு பாதான். இவரே பாரசீக மன்னர்களில் இறுதியானவர். இவர் கி.பி. 628ல் இஸ்லாமை ஏற்றார். இத்துடன் யமன் மீதான பாரசீகர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆ) ஹீரா நாடு

இராக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘கூரூஷுல் கபீர்’ என்பவரின் தலைமையின் கீழ் கி.மு. 557லிருந்து கி.மு. 529 வரை பாரசீகர்கள் ஆட்சி செய்தனர். அவர்களை எவராலும் வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, பாரசீகர்களின் அரசரான ‘தாரா’ என்பவரை ‘இஸ்கந்தருல் மக்தூனி’ என்பவர் கி.மு. 326ல் தோற்கடித்தார். மேலும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் வலிமையையும் முறியடித்து அவர்களது நகரங்களை சின்னா பின்னமாக்கினார். பிறகு தவாயிஃப் என்ற பெயருடைய அரசர்கள் அந்நாட்டை பல பகுதிகளாகக் பிரித்து கி.பி. 230 வரை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி காலத்தில் கஹ்தான் கோத்திரத்தினர் இராக்கின் சில கிராம பகுதிகளைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் போட்டியாக அத்னான் கோத்திரத்தார்களும் ஃபுராத் நதிக்கரையின் சில பகுதிகளில் குடியேறினர்.