பக்கம் - 158 -
உபாதத் இப்னு ஸாமித் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “வாருங்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது திருடக்கூடாது விபசாரம் செய்யக் கூடாது உங்களின் பிள்ளைகளை கொலை செய்யக்கூடாது அவதூறு கூறக்கூடாது நன்மையில் எனக்கு மாறு செய்யக்கூடாது என்று என்னிடம் நீங்கள் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து தாருங்கள். உங்களில் யார் இந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். யார் சில குற்றங்களை செய்து அதற்காக உலகிலேயே தண்டிக்கப் படுவாரோ அத்தண்டனையே அவர் பாவத்தைப் போக்கிவிடும். ஒருவர் குற்றம் செய்து அந்த குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டால் அது அல்லாஹ்வின் விருப்பத்திற்குட்பட்டது. அவன் விரும்பினால் அவரைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம்.” நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி முடித்தபின் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோமென்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி)

மதீனாவில் அழைப்பாளர்

மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் நல்லமுறையில் முடிந்தது. ஹஜ்ஜுடைய காலங்கள் கழிந்தப் பின் ஒப்பந்தம் செய்து கொடுத்தவர்களுடன் நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் அல் அப்த (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.

மகிழ்ச்சி தரும் வெற்றி

முஸ்அப் இப்னு உமைர், அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். ‘அல்முக்’ (குர்ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். முஸ்அபும் அஸ்அதும் சேர்ந்து மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் பரப்பினார்கள்.

முஸ்அப் (ரழி) அழைப்புப் பணியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டார். பல சாதனைகள் படைத்தார் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்று: ஒரு நாள் அஸ்அத் இப்னு ஜுராரா (ரழி) முஸ்அபை அழைத்துக் கொண்டு அப்துல் அஷ்ஹல், ளஃபர் ஆகிய கோத்திரத்தார்களின் இல்லங்களுக்குச் சென்றார். வழியில் ளஃபர் கோத்திரத்தாரின் தோட்டத்திற்குள் சென்று ‘மரக்’ என்ற கிணற்றுக்கருகில் அமர்ந்தனர். அவர்களுடன் பல முஸ்லிம்களும் அங்கு சேர்ந்து கொண்டனர். ஸஅது இப்னு முஆத் என்பவரும் உஸைத் இப்னு ஹுழைர் என்பவரும் அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இணைவைப்பில்தான் இருந்தனர். இவ்விருவரும் தங்களின் கூட்டத்தினருக்குத் தலைவர்களாக இருந்தனர். முஸ்அபும், அஸ்அதும் தங்களின் தோட்டங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டவுடன் ஸஅத், உஸைதிடம் “நீ நமது எளியோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று, அவர்களை எச்சரிக்கை செய்! நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்துவிடு! நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ்அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகனாவார். இந்த உறவு மட்டும் இல்லாதிருந்தால் நானே இக்காரியத்தை செய்திருப்பேன்” என்று கூறினார்.

இதைக் கேட்ட உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்துவிட்ட அஸ்அத் இப்னு ஜுராரா தனது நண்பர் முஸ்அபிடம் “இதோ தனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையான வற்றைக் கூறிவிடுங்கள்!” என்று கூறவே அதற்கு முஸ்அப், “அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்” என்று கூறினார்.