பக்கம் - 161 -

நபித்துவத்தின் 13 ஆம் ஆண்டு (கி.பி. 622 ஜூன் திங்கள்) ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ்ஜுக்காக மதீனாவாசிகளில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் கலந்து, எழுபதுக்கும் அதிகமானோர் மக்கா வந்தனர். மதீனாவில் இருக்கும்போது அல்லது மக்காவிற்கு வரும் வழியில் இந்த முஸ்லிம்கள் இவ்வாறு பேசிக் கொண்டனர். “மக்காவின் மலைப்பாதைகளில் சுற்றித் திரிந்து கொண்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மக்களை அஞ்சிய நிலையில் வாழ்ந்து வர நபி (ஸல்) அவர்களை நாம் எதுவரை விட்டு வைத்திருப்பது?” மதீனாவாசிகளின் இந்த உணர்ச்சிமிக்க பேச்சிலிருந்து நபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை அவர்களது உள்ளத்தில் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவர்கள் அனைவரும் மக்கா வந்து சேர்ந்தனர். பிறகு அதிலிருந்த முஸ்லிம்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் இரகசியமான முறையில் சந்திப்புகள் பல நடந்து கொண்டிருந்தன. இறுதியாக, ஹஜ்ஜுக் கடமைகளை முடித்து மினாவில் முதல் ஜம்ராவுக்கு அருகிலுள்ள அகபாவில் பிறை 12ம் நாள் நள்ளிரவில் சந்திப்போமென்று நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முடிவு செய்தனர். சிலை வழிபாட்டிற்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வரலாற்று பிரசித்திமிக்க இந்த சந்திப்பைப் பற்றி அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கஅப் இப்னு மாலிக் (ரழி) விவரிப்பதை நாம் பார்ப்போம்:

“நாங்கள் ஹஜ் செய்ய மக்காவிற்கு வந்திருந்தோம். ஹஜ் முடிந்த இரண்டாவது தினத்தில் அகபாவில் சந்திக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி முடிவு செய்தோம். அதன்படி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாரானோம். அப்போது எங்களுடன் எங்களின் தலைவர்களில் சிறப்புமிக்க ஒருவரான ‘அபூஜாபிர்’ எனப்படும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில், அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இருந்தவர்களுக்கு நாங்கள் இதைப் பற்றி எதையும் கூறவில்லை. அபூஜாபிருக்கு நாங்கள் இஸ்லாமைப் பற்றி விளக்கம் கொடுத்தோம். “அபூஜாபிரே! நீங்கள் எங்களின் தலைவர்களில் ஒருத்தர் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர்களில் நீங்களும் ஒருத்தர். நீங்கள் நாளை நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறி இஸ்லாமை ஏற்க அழைப்பு கொடுத்தோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களை அகபாவில் சந்திக்க இருக்கிறோம் என்பதையும் கூறினோம். அவர் எங்களின் அழைப்பை ஏற்று இஸ்லாமைத் தழுவி எங்களுடன் அகபா ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார். பிறகு நியமிக்கப்பட்ட 12 தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

தொடர்ந்து கஅப் (ரழி) கூறுகிறார்: அன்றிரவு நாங்கள் எங்களது கூடாரங்களில் எங்களது கூட்டத்தினருடன் தங்கியிருந்துவிட்டு இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இரகசியமாக வெளியாகி அகபாவிற்கு அருகிலுள்ள கணவாயில் ஒன்று சேர்ந்தோம். நாங்கள் ஆண்களில் 73 பேரும், பெண்களில் மாஜின் குடும்பத்தைச் சேர்ந்த ‘உம்மு உமாரா’ என்ற நுஸைபா பின்த் கஅப் என்பவரும், ஸலமா குடும்பத்தைச் சேர்ந்த ‘உம்மு மனீஃ’ என்ற அஸ்மா பின்த் அம்ர் என்பவரும் கலந்துகொண்டனர்.