பக்கம் - 165 -
இவ்வாறு அஸ்அத் செய்ததற்குக் காரணம் மதீனாவாசிகள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்ய எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான்.

இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் முதன்மையாக ஒப்பந்தம் செய்து கொடுத்தது அஸ்அது இப்னு ஜுராராதான். (இப்னு ஹிஷாம்)

ஏனெனில், இவர்தான் முஸ்அப் இப்னு உமைடம் சென்ற மாபெரும் மார்க்க அழைப்பாளராவார். இதற்குப் பிறகு மக்கள் அனைவரும் பைஆ செய்தனர்.

ஜாபிர் (ரழி) கூறுவதாவது: நாங்கள் ஒவ்வொருவராக எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) எங்களிடம் வாக்குறுதிப் பெற்றபின் அதற்கு பகரமாக எங்களுக்கு சொர்க்கத்தை வாக்களித்தார்கள். (முஸ்னது அஹ்மது)

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடிக்காமல் சொல்லால்தான் ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) எந்த ஒரு அந்நியப் பெண்ணிடமும் கை கொடுத்ததில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)
12 தலைவர்கள்

மேற்கூறப்பட்ட முறைப்படி ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் 12 தலைவர்களை தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். தங்களது கூட்டத்தினரை கண்காணிப்பதும், ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றத் தூண்டுவதும் அந்தத் தலைவர்களின் பணியாக இருந்தது.

மதீனாவாசிகள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களையும், அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று நபர்களையும் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.

கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:

1) அஸ்அது இப்னு ஜுராரா இப்னு அதஸ்

2) ஸஅது இப்னு ரபீஃ இப்னு அம்ரு

3) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இப்னு ஸஃலபா

4) ராஃபிஃ இப்னு மாலிக் இப்னு அஜ்லான்

5) பராஃ இப்னு மஃரூர் இப்னு ஸக்ர்

6) அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம்

7) உபாதா இப்னு ஸாபித் இப்னு கய்ஸ்

8) ஸஃது இப்னு உபாதா இப்னு துலைம்

9) முன்திர் இப்னு அம்ரு இப்னு குனைஸ் (ரழியல்லாஹு அன்ஹும்).

அவ்ஸ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:

1) உஸைத் இப்னு ஹுழைர் இப்னு சிமாக்

2) ஸஅது இப்னு கைஸமா இப்னு ஹாரிஸ்

3) ஃபாஆ இப்னு அப்துல் முன்திர் இப்னு ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹும்).

இந்தத் தலைவர்களிடம் அவர்கள் தலைவர்கள் என்ற அடிப்படையில் மற்ற சில உடன்படிக்கையையும் நபி (ஸல்) வாங்கினார்கள்.