பக்கம் - 17 -
குபாதுக்குப் பிறகு ‘அனூஷேர்வான்’ (கி.பி. 531-578) என்பவர் மன்னரானார். இவர் இந்த தவறான வழியை முற்றிலும் வெறுத்தார். மஜ்தக் மற்றும் அவனது வழியை பின்பற்றியவர்களைக் கொலை செய்தார். ஹாஸ் இப்னு அம்ரை நீக்கிவிட்டு மீண்டும் முன்திரை ஹீராவின் அரசராக்கினார். ஹாஸ் இப்னு அம்ரை கைது செய்ய முயன்றபோது அவன் ‘கல்பு’ கோத்திரத்தாரிடம் சென்று அடைக்கலமாகி மரணம் வரை அங்கேயே தங்கிவிட்டான். முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தாரிடமே ஆட்சி இருந்தது. அவரது மகன் நுஃமான் இப்னு முன்திர் கி.பி. 583 லிருந்து 605 வரை ஆட்சி செய்தார். அப்போது ‘ஜைது இப்னு அதீ’ என்பவன் கூறிய தவறான தகவலால் நுஃமான் மீது கோபமடைந்து அவரைத் தேடிவர கிஸ்ரா வீரர்களை அனுப்பி வைத்தார். நுஃமான் ரகசியமாக வெளியேறி ஷைபான் கோத்திரத்தின் தலைவரான ஹானி இப்னு மஸ்வூதிடம் அடைக்கலம் பெற்று அவரிடம் தனது குடும்பத்தினரையும் செல்வங்களையும் ஒப்படைத்துவிட்டு கிஸ்ராவிடம் திரும்பினார். கிஸ்ரா அவரை மரணமடையும் வரை சிறையில் அடைத்தார்.

அதன்பிறகு நுஃமானுக்குப் பதிலாக ‘இயாஸ் இப்னு கபீஸா அத்தாம்’ என்பவரை ஹீராவின் அரசராக்கினார். ஹானி இப்னு மஸ்வூதிடம் நுஃமான் கொடுத்து வைத்திருந்ததை மீட்டு வருமாறு, இயாஸுக்கு கிஸ்ரா உத்தரவிட்டார். கிஸ்ராவின் உத்தரவிற்கிணங்க இயாஸ் சிலரை ஹானியிடம் அனுப்பியபோது ஹானி, நுஃமானின் அமானிதத்தை தர முற்றிலும் மறுத்துவிட்டு கிஸ்ராவுடன் போரை பிரகடனப்படுத்தினார். அதைக் கண்ட இயாஸ் தன்னிடமிருந்த கிஸ்ராவின் படை பட்டாளங்களை அழைத்துக் கொண்டு ஹானியிடம் போர் புரிய பயணமானார். ‘தீ கார்’ என்னுமிடத்தில் இரு படைகளுக்குமிடையே மிகக் கடுமையான போர் நடந்தது. இறுதியில் ஷைபான் கோத்திரத்தினர் வெற்றிபெற்றனர். பாரசீகர்கள் படுதோல்வி அடைந்தனர். இதுவே அரபியர்கள் அரபியரல்லாதவர்கள் மீது கொண்ட முதல் வெற்றியாகும். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்கள் பிறந்த பிறகு நடைபெற்றது.

இப்போர் நடைபெற்ற காலம் குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே மாறுபட்ட பல கருத்துகள் இருக்கின்றன.

1) நபி (ஸல்) அவர்கள் பிறந்த சிறிது காலத்திலேயே இப்போர் நடைபெற்றது ஹீராவிற்கு இயாஸ் இப்னு கபீஸா கவர்னராகப் பொறுப்பேற்ற எட்டாவது மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

2) நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்னால் இப்போர் நிகழ்ந்தது என்று சிலர் கூறுகின்றனர். இதுவே ஏற்கத்தக்கது.

3) நபித்துவம் கிடைக்கப் பெற்றதற்கு சிறிது காலத்திற்கு பிறகு இப்போர் நிகழ்ந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

4) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றதற்கு பிறகு இப்போர் நிகழ்ந்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

5) பத்ர் யுத்தத்திற்குப் பிறகு இப்போர் நடைபெற்றது என்றும் சிலர் கூறுகின்றனர். மற்றும் பல கருத்துக்களும் கூறப்படுகின்றன.

இயாஸுக்குப் பிறகு ‘ஆஜாதிபா இப்னு மாஹ்பியான் இப்னு மஹ்ரா பந்தாத்’ என்ற பாரசீகரை ஹீராவின் கவர்னராக கிஸ்ரா நியமித்தார். அவர் பதினேழு ஆண்டுகள் (கி.பி. 614-631) ஆட்சி செய்தார். பிறகு கி.பி. 632ல் ‘லக்ம்’ கோத்திரத்தார்களிடம் ஆட்சி திரும்பியது. அவர்களில் ‘மஃரூர்’ என்றழைக்கப்பட்ட முன்திர் இப்னு நுஃமான் என்பவர் ஆட்சி பொறுப்பேற்றார். எனினும், அவரது ஆட்சி எட்டு மாதங்களே நீடித்தது. காலித் இப்னு வலீத் (ரழி) முஸ்லிம்களின் படையுடன் சென்று அந்நாட்டை வெற்றி கொண்டார்கள்.