பக்கம் - 172 -

இது குறைஷிகளின் ஆலோசனை மன்றம்.

நபித்தோழர்கள் தங்களது மனைவி, மக்களுடன் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ்களுடன் குடியேறியதைப் பார்த்த இணைவைப்பவர்கள் மிகப்பெரிய சங்கடத்துக்கு ஆளானார்கள். இதற்கு முன்பில்லாத அளவுக்கு எந்நேரமும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தங்களின் சிலை வழிபாட்டையும், அரசியல் அந்தஸ்தையும் முற்றிலும் அடியோடு தகர்த்தெறியக் கூடிய பேராபத்து ஒன்று வரப்போவதை உணர்ந்தனர்.

நபி (ஸல்) பிறரைக் கவரும் ஆற்றல் உள்ளவர்கள் தலைமைத்துவத்துக்கும் நேர்வழிபடுத்தவும் முழுத் தகுதி பெற்றவர்கள் நபித்தோழர்கள் நெஞ்சுறுதி மிக்கவர்கள் நிலைத்தன்மை கொண்டவர்கள் நபியவர்களுக்காக எதையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் மதீனாவில் உள்ள அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினரோ மிகுந்த ஆற்றலும் பலமுமிக்கவர்கள் இவ்விரு சமூகத்திலும் உள்ள அறிஞர்களோ சமாதானத்தையும், சீர்திருத்தத்தையும் விரும்புபவர்கள் குரோதம் கொள்வதை எதிர்ப்பவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர்களால் மதீனா நகரம் பாதிக்கப்பட்டிருக்கும் போது தற்போது சண்டை சச்சரவுகளை அன்சாரிகள் அறவே விரும்ப மாட்டார்கள் என்று மக்காவாசிகள் நன்கு விளங்கி வைத்திருந்தனர்.

மதீனா மிக முக்கிய மைய நகரமாக விளங்குகின்றது. யமன் நாட்டிலிருந்து ஷாம் வரை நீண்டு செல்லக்கூடிய செங்கடலின் கரை வழியாக செல்லும் வியாபாரக் கூட்டங்கள் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மக்காவாசிகள் மட்டும் ஓர் ஆண்டுக்கு மதீனா வழியாக ஷாம் தேசத்துடன் குறைந்தது இரண்டரை லட்சம் தங்க நாணயங்களுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இது மட்டுமல்லாமல் தாயிஃப் நகர மக்களும் அதைச் சுற்றியுள்ள மக்களும் மதீனா வழியாகவே வியாபாரம் செய்து வந்தனர். மதீனா பாதுகாப்புடையதாக இருந்ததால் அனைவரும் வியாபாரத்திற்காக இவ்வழியையேத் தேர்ந்தெடுத்தனர். எனவே, மதீனா இத்தகைய முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

ஆகவே, இஸ்லாமிய அழைப்பு மதீனாவில் மையம் கொள்வதாலும் மதீனாவாசிகள் தங்களுக்கு எதிராக ஒன்று கூடுவதாலும் ஏற்படும் மாபெரும் ஆபத்தை குறைஷிகள் உணராமல் இருக்கவில்லை.

தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆபத்து அதிகமாகுவதைக் குறைஷிகள் நன்கு உணர்ந்து கொண்டனர். இந்த ஆபத்து உருவாகுவதின் மூலக் காரணத்தை, அதாவது நபி முஹம்மது (ஸல்) அவர்களையே அழித்து விடுவதுதான் இந்த ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்றமான வழி என்று முடிவு செய்தனர்.

நபித்துவத்தின் பதினான்காம் ஆண்டு, ஸஃபர் மாதம் 26 வியாழன், அதாவது கி.பி. 622, செப்டம்பர் 12” இரண்டாவது அகபா உடன்படிக்கை முடிந்து இரண்டரை மாதங்கள் கழிந்து காலையில் குறைஷிகளின் மிக முக்கியமான ஆலோசனை மன்றம் ஒன்று கூடியது.”” இந்த சபையில் குறைஷிகளின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஏகத்துவ அழைப்பைப் பரப்பி வரும் நபி (ஸல்) அவர்களையும் அவ்வழைப்பின் தாக்கத்தையும் முழுமையாக அழித்து விடுவதற்கு ஆலோசனை செய்து சரியான திட்டம் தீட்ட ஒன்று கூடினர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன், இப்னு இஸ்ஹாக்)