பக்கம் - 175 -

குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்

குறைஷிகள் தங்களின் அன்றாட வேலைகளில் சகஜமாக ஈடுபட்டு, தங்களின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் தெரியாத விதத்தில் நடந்துகொண்டனர். பிறர் இந்த சதித் திட்டத்தின் வாடையைக் கூட நுகர முடியாத வண்ணம், அந்த குறைஷிகள் நடந்து கொண்டனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு சூழ்ச்சி செய்ய நாடினர். அல்லாஹ் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களது சூழ்ச்சிகளை வீணாக்கி விட்டான். குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். “நீங்கள் ‘ஹிஜ்ரா’ செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்” என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)

மக்கள் எல்லாம் தங்களது இல்லங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மதிய வேளையில் ஹிஜ்ராவின் திட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரிடம் வந்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

மதிய வேளையில் நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்தபோது ஒருவர் அபூபக்ரிடம் “இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தை மறைத்தவராக உங்களிடம் வந்திருக்கிறார்” என்று கூறினார். அது நபி (ஸல்) எங்களிடம் வரும் வழக்கமான நேரமல்ல! “எனது தாயும் தந்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்நேரத்தில் அவர்கள் வந்திருப்பதற்குக் காரணம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம்தான்” என்று அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

எங்களிடம் வந்த நபி (ஸல்) உள்ளே வர அனுமதி கேட்கவே அபூபக்ர் (ரழி) அனுமதி கொடுத்தார்கள். உள்ளே நுழைந்த நபி (ஸல்) அபூபக்ரிடம் “உங்களுடன் இருப்பவர்களை உடனே வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாவேனாக! இங்கு உங்கள் குடும்பத்தார்கள்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “எனக்கு மக்காவைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது” என்றார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நானும் உங்களுடன் வருகிறேன்” என்று கூறவே, நபி (ஸல்) “சரி!” என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

பின்பு ஹிஜ்ரா எவ்வாறு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அபூபக்ர் (ரழி) அவர்களுடன் பேசி முடிவு செய்து கொண்டார்கள். வீட்டிற்குத் திரும்பிய நபி (ஸல்) அன்று சூரியன் மறைந்து இருட்டுவதை எதிர்பார்த்திருந்தார்கள். தான் குறைஷிகளின் தீய திட்டத்தை தெரிந்து கொள்ளாதது போன்றே, தன் அன்றாடச் செயல்களை வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் தீய திட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பிறர் தனது ஹிஜ்ராவின் திட்டத்தைத் தெரிந்து கொள்ளதவாறு நடந்து கொண்டார்கள்.