பக்கம் - 176 -
சுற்றி வளைத்தல்

குறைஷிகளின் தலைவர்கள், பகலில் தாங்கள் செய்த தீய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பதினொரு மூத்த தலைவர்களைத் தேர்வு செய்தனர்.

1) அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம்

2) ஹகம் இப்னு அபூஆஸ்

3) உக்பா இப்னு அபூமுயீத்

4) நள்ர் இப்னு ஹாரிஸ்,

5) உமைய்யா இப்னு கலஃப்,

6) ஜம்ஆ இப்னு அஸ்வத்

7) துஐமா இப்னு அதீ

8) அபூலஹப்

9) உபை இப்னு கலஃப்,

10) நுபைஃ இப்னு ஹஜ்ஜாஜ்,

11) முனப்பிஹ் இப்னு ஹஜ்ஜாஜ் (ஜாதுல் மஆது)

பொதுவாக நபி (ஸல்) இஷா தொழுத பின் முன்னிரவில் தூங்கி இரவின் நடுநிசிக்குப் பின் எழுந்து சங்கைமிகு பள்ளிக்குச் சென்று இரவுத் தொழுகைகளைத் தொழுவார்கள். அன்றிரவு அலீ (ரழி) அவர்களைத் தனது விரிப்பில் படுத்து, தனது யமன் நாட்டு பச்சை நிறப் போர்வையை போர்த்திக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். மேலும், எந்த ஓர் ஆபத்தும் உங்களுக்கு ஏற்படாது என்றும் அலீ (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்.

நன்கு இரவாகி அமைதி நிலவி, மக்கள் உறங்கிய பின் மேற்கூறப்பட்ட கொலைகாரர்கள் இரகசியமாக நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து வீட்டு வாசலில் அவர்களை எதிர்பார்த்தவர்களாக நின்று கொண்டனர். “முஹம்மது தூங்குகிறார். அவர் எழுந்து பள்ளிக்கு செல்லும்போது அனைவரும் அவர் மீது பாய்ந்து நமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வோம்” என்று எண்ணியிருந்தனர்.

இந்த மோசமான சதித்திட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர். அபூஜஹ்ல் மிகவும் கர்வமும், பெருமையும் கொண்டு சுற்றியிருந்த தனது தோழர்களிடத்தில் மிகவும் பரிகாசத்துடன் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்தான். “நீங்கள் முஹம்மதை பின்பற்றினால் அரபிகளுக்கும், அரபியல்லாதவர்களுக்கும் அரசர்களாக ஆகிவிடலாம் நீங்கள் மரணித்தபின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள் அப்போது உங்களுக்கு ஜோர்டான் நாட்டு தோட்டங்களைப் போல் சொர்க்கங்கள் உண்டு அப்படி நீங்கள் செய்யவில்லையென்றால் அவர் உங்களைக் கொன்று விடுவார் பின்பு நீங்கள் மரணித்த பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள் அங்கு நெருப்பில் நீங்கள் பொசுக்கப்படுவீர்கள் என்று முஹம்மது கூறுகிறார். ஆனால், இன்று அவரது நிலையைப் பார்த்தீர்களா!”- இவ்வாறு அபூஜஹ்ல் தனது சகாக்களிடம் கிண்டலும் கேலியுமாகப் பேசினான். (இப்னு ஹிஷாம்)

நடுநிசிக்குப் பின் நபி (ஸல்) தமது வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிக்குச் செல்லும் நேரத்தைத் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்திருந்தனர். நடுநிசியை எதிர்பார்த்து விழித்திருந்தனர். அல்லாஹ் தனது காரியத்தில் அவனே மிகைத்தவன் வானங்கள் பூமியின் ஆட்சி அவனது கையில்தான் இருக்கின்றது அவன் நாடியதை செய்யும் ஆற்றல் உள்ளவன் அவனே பாதுகாப்பளிப்பவன் அவனுக்கு யாரும் பாதுகாப்பளிக்கத் தேவையில்லை. இத்தகைய வல்லமை படைத்த அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பின் குர்ஆனில் இறக்கிய வசனத்தில் கூறியதைப் போன்றே செய்து காட்டினான்.