பக்கம் - 181 -
நபி (ஸல்) வழியில் எந்தெந்த இடங்களைக் கடந்து சென்றார்கள் என்பது பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதைப் பார்ப்போம்:

இப்னு உரைகித், நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் மக்காவின் தெற்குத் திசையில் அழைத்துச் சென்று கடற்கரை வந்தவுடன், ‘உஸ்ஃபான்’ என்ற ஊரின் எல்லை வழியாக சென்று ‘அமஜ்’ என்ற ஊரின் எல்லையை அடைந்தார். பின்பு அங்கிருந்து குறுக்கு வழியில் ‘குதைத்’ என்ற ஊருக்கு வந்து, பின்பு ‘கர்ரார்“, அங்கிருந்து ‘ஸனியத்துல் மர்ரா“, அங்கிருந்து ‘லிக்ஃப்“, அங்கிருந்து ‘லிக்ஃப்’ எனும் காட்டு வழியாக அழைத்துச் சென்றார். பின்பு ‘மிஜாஜ்’ காட்டு வழியாக ‘மிஜாஹ்’ வந்து, பின்பு ‘துல்குழுவைன்“, பின்பு ‘தீ கஷ்ர்“, ‘ஜதாஜித்“, ‘அஜ்ரத்’ வழியாக வந்து அங்கிருந்து ‘திஃன்’ காட்டு வழியாக ‘அபாபீத்’ சென்றடைந்து பின்பு அங்கிருந்து ‘ஃபாஜா’ சென்றடைந்து ஃபாஜாவிலிருந்து ‘அர்ஜ்’ என்ற இடத்தில் தங்கி பின்பு ‘ரகூபா’ என்ற ஊரின் வலது புறம் உள்ள ‘ஸனியத்துல் ஆம்ர்’ என்ற ஊரின் வழியாக சென்று ‘ஃம்’ என்ற பள்ளத்தாக்கில் இறங்கி குபாவுக்கு அழைத்துச் சென்றார். (இப்னு ஹிஷாம்)

வழியில் நடந்த சம்பவங்களில் சிலவற்றை நாம் பார்ப்போம்:

1) அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அன்று இரவும் அடுத்த நாளும் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது மதிய நேரத்தை அடைந்தவுடன் வெயிலின் காரணமாக, பாதை ஆள் நடமாட்டமின்றி இருந்தது. மிகப் பெரிய உயரமான பாறை ஒன்று தென்படவே அதன் அருகில் சென்றோம். நல்ல நிழல் இருந்தது. நபி (ஸல்) தூங்குவதற்காக அங்கு இடத்தைச் சரிசெய்து விரிப்பை விரித்தேன். பின்பு “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தூங்குங்கள். நான் உங்களைச் சுற்றி பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) தூங்கிக் கொண்டார்கள்.

நான் அவர்களை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆட்டிடையர் தன்னுடைய ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டு நிழல் தேடி அப்பாறையை நோக்கி வந்தார். நான் அவரிடம் “நீ யாரின் அடிமை?” என்று கேட்டவுடன் அவர் “மக்காவைச் சேர்ந்த அல்லது மதீனாவைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் கூறி அவருடைய அடிமை” என்று கூறினார். நான் அவரிடம் “உனது ஆட்டு மந்தையில் பால் கிடைக்குமா?” என்றேன். அவர் “கிடைக்கும்” என்றார். “கறந்து தரமுடியுமா?” என்றேன். அவர் “முடியும்” என்றார். பின்பு ஓர் ஆட்டைப் பிடித்து வரவே, நான் அவரிடம் “மண், முடி அசுத்தத்திலிருந்து மடியை சுத்தம் செய்துகொள்” என்று கூறினேன். அவர் தடிப்பமான பாத்திரத்தில் கொஞ்சம் பால் கறந்து கொடுத்தார். நான் நபி (ஸல்) தண்ணீர் குடிப்பதற்காகவும், ஒளு செய்வதற்காகவும் எடுத்து வந்த சிறிய பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரைப் பாலில் கலந்து, பால் குளிர்ந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்ப மனமில்லாததால் அவர்கள் விழிக்கும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

அவர்கள் விழித்தவுடன் “அல்லாஹ்வின் தூதரே! இந்த பாலைக் குடியுங்கள்” என்றேன். நான் திருப்தியடையும் வரை நபி (ஸல்) பாலைக் குடித்தார்கள். பின்பு நபி (ஸல்) “என்ன! பயணிக்க இன்னும் நேரம் வரவில்லையா?” என்று கேட்கவே “ஆம்! நேரம் வந்துவிட்டது” என்று கூறினேன். பின்பு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். (ஸஹீஹுல் புகாரி)