பக்கம் - 185 -
சுராக்கா எங்களை விட்டு திரும்பியபோது, மக்கள் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களிடம் உங்களுக்காக நான் இங்கு எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன். நீங்கள் இங்கு தேடவேண்டிய அவசியமில்லை என்று கூறி மக்களைத் திசை திருப்பினார். காலையில் நபி (ஸல்) அவர்களை ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தவர் மாலையில் நபி (ஸல்) அவர்களின் பாதுகாவலராக மாறினார். (ஜாதுல் மஆது)

5) பயண வழியில் நபி (ஸல்) புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமியை சந்தித்தார்கள். அவருடன் அவருடைய கிளையினரில் எண்பது குடும்பங்களையும் சந்தித்தார்கள். அவருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறவே அவரும் அவரது கூட்டத்தாரும் இஸ்லாமைத் தழுவினர். பின்பு நபி (ஸல்) இஷா தொழுகையைத் தொழ வைக்க, அவர்கள் அனைவரும் இஷா தொழுதார்கள். புரைதா (ரழி) தங்களது கூட்டத்தினடமே தங்கியிருந்து விட்டு உஹுத் போர் நடந்த பின்பு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.

புரைதாவின் மகன் அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கின்றார்: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நல்ல பெயர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், சகுனம் பார்க்க மாட்டார்கள். நபி (ஸல்) மதீனாவை நோக்கி ஹிஜ்ரா சென்று கொண்டிருக்கும்போது எனது தந்தை புரைதா தங்களது குடும்பத்தினர் பனூ சஹ்முடன் எழுபது வாகனங்களில் வந்து கொண்டிருந்தார். அவரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் “நீர் எந்தக் கிளையைச் சேர்ந்தவர்?” என்று கேட்க, அவர் “அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அபூபக்ரிடம் “நாம் பாதுகாப்பு பெற்றுவிட்டோம்” என்றார்கள். (ஏனெனில் ‘அஸ்லம்’ என்றால் ‘மிகுந்த பாதுகாப்புப் பெற்றவர்’ என்பது பொருள்) பின்பு நபி (ஸல்), அவரிடம் “நீர் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். அவர் “சஹம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார். நபி (ஸல்)அபூபக்ரிடம் “உமது அம்பு வெளியாகிவிட்டது” (எதிரிகளிடமிருந்து நாம் தப்பித்துக் கொண்டோம்) என்று கூறினார்கள்.

6) நபி (ஸல்) வழியில் அஸ்லம் கிளையைச் சேர்ந்த அபூஅவ்ஸ் தமீம் இப்னு ஹஜரை அல்லது அபூ தமீம் அவ்ஸ் இப்னு ஹஜரைச் சந்தித்தார்கள். அவர் ‘அர்ஜ்’ என்ற இடத்தில் ஜுஹ்ஃபா, ஹர்ஷா என்ற இரண்டு மலைகளுக்கிடையில் தனது கொழுத்த ஒட்டகங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் ஒரே ஒட்டகத்தில் இருந்தார்கள். காரணம், நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அபூபக்ர் (ரழி) அவர்களைத் தவிர மற்ற இருவரும் அவர்களுடைய ஒட்டகங்களுடன் வர தாமதமாகி விட்டதால் இவர்கள் இருவரும் ஒரே ஒட்டகத்தில் வந்தார்கள். அப்போது அபூஅவ்ஸ் தனது ஒட்டகங்களில் நல்ல ஆண் ஒட்டகை ஒன்றை அபூபக்ருக்கு வழங்கி, அதில் பயணிக்க வைத்தார்கள். பின்பு தனது அடிமை மஸ்வூதையும் அவர்களுடன் வழிகாட்டுவதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தனது அடிமையிடம் “யாரும் செல்லாத தனி வழியில் இவர்களை அழைத்துச் செல். இவர்களை விட்டு எங்கும் நீ பிரிந்து சென்றுவிட வேண்டாம்” என்று கூறினார். (அஸதுல் காபா)

அந்த அடிமை நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரழி) அவர்களையும் பத்திரமாக அழைத்து வந்து மதீனாவில் சேர்த்தார். பின்பு நபி (ஸல்) அந்த மஸ்வூதிடம் “உமது எஜமானரிடம் தனது ஒட்டகங்களின் கழுத்துகளில் இரண்டு வளையங்களைக் கொண்டு அடையாளமிடச் சொல்!” என்று கூறி அவரை அவரது எஜமானரிடம் அனுப்பி வைத்தார்கள். உஹுத் போர் நடந்தபோது மக்காவிலிருந்து இணைவைப்பவர்கள் வரும் செய்தியை ‘அவ்ஸ்’ தனது அடிமை மஸ்வூதை அர்ஜிலிருந்து கால் நடையாகவே அனுப்பி நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து வரச் செய்தார். உஹுத் போர் நடந்து நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பியவுடன் இவர் இஸ்லாமை ஏற்று அர்ஜிலேயே வசித்து வந்தார். (அஸதுல் காபா)