பக்கம் - 187 -
மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபி (ஸல்) குபாவில் குல்ஸும் இப்னு ஹத்ம்’ என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். சிலர் ஸஅது இப்னு கைஸமா வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால், முந்திய கூற்றே வலுவானதாகும்.

அலீ இப்னு அபூதாலிப் (ரழி) மக்காவில் மூன்று நாள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற அமானிதங்களை” உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு கால்நடையாகவே மதீனா புறப்பட்டார்கள். பின்பு, குபா வந்தடைந்து நபி (ஸல்) தங்கியிருந்த குல்ஸும் இப்னு ஹத்ம் வீட்டில் தங்கினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நபி (ஸல்) குபாவில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

அப்போது குபாவில் ஒரு பள்ளியை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள். ஐந்தாவது நாள், அதாவது வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் உத்தரவு வரவே அங்கிருந்து புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரழி) அமர்ந்திருந்தார்கள்.

நபி (ஸல்) தான் வரும் செய்தியை தனது தாய்மாமன்மார்களுக்கு, அதாவது, நஜ்ஜார் கிளையினருக்கு சொல்லி அனுப்பினார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக வாட்களை அணிந்து வந்தனர். அவர்கள் சூழ்ந்து செல்ல, நபி (ஸல்) மதீனா நோக்கி பயணமானார்கள். (ஸஹீஹுல் புகாரி)

குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். நபி (ஸல்) பயணித்துக் கொண்டிருக்கும்போது ஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

மதீனாவில்

ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு, மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இதற்கு முன் ‘எஸ்ப்’ என்று பெயர் கூறப்பட்டு வந்த அந்த நகரம் அன்றிலிருந்து ‘மதீனத்துர் ரஸுல்’ - இறைத்தூதரின் பட்டணம்- என்று அழைக்கப்பட்டது. இதையே சுருக்கமாக இன்று ‘அல்-மதீனா’ என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது. மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

“நமக்கு முழு நிலா தோன்றியது.
ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,
அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்
நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.
எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!
பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே! ”