பக்கம் - 189 -
ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அப்போது மதீனா அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் மிகுந்ததாக இருந்தது. மதீனாவிற்கு அருகிலுள்ள ‘புத்ஹான்’ என்ற ஓடையில் கலங்கிய நீர் ஓடிக்கொண்டிருந்தது.

மேலும், ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூபக்ர், பிலால் (ரழி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. நான் அவர்களிடம் சென்று தந்தையே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? பிலாலே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

பொதுவாக அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்,

“ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் கலந்திருக்க...
மரணமோ அவனது செருப்பு வாரைவிட மிகச் சமீபத்தில் இருக்கிறது”

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

பிலால் (ரழி) அவர்களுக்கு காய்ச்சலின் சூடு சற்று குறைந்தால் வேதனையுடன் குரலை உயர்த்தி,

“இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க,
அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இராப்பொழுதையேனும் நான் கழிப்பேனா?
ம்மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா?
ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் எனக்குத் தென்படுமா?”

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் “இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபிஆ, உமையா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி விடுவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். மேலும், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளம் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு மாற்றிவிடு!” என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்! நபி (ஸல்) அவர்களின் இந்த துஆவை ஏற்றுக் கொண்டான். ஒரு நாள் கனவில் தலைவிரிக் கோலமான கருப்பு நிறப்பெண் மதீனாவிலிருந்து வெளியேறி ஜுஹ்ஃபா சென்றடைந்ததைப் பார்த்தார்கள். இது மதீனாவிலிருந்து அந்த நோய் ஜுஹ்ஃபாவை நோக்கி வெளியேறிவிட்டது என்பதற்கான அறிவிப்பாக இருந்தது. அல்லாஹ்வின் அருளால் மதீனாவின் தட்பவெப்ப நிலையினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் முற்றிலும் சுகமடைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் ஒரு பகுதி, அதாவது மக்கா வாழ்க்கை இத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையை சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!