பக்கம் - 191 -

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்தார்கள். இந்த ஹிஜ்ராவிற்குக் காரணம் மக்காவில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களிருந்து தப்பித்துத் தங்களை விடுவித்துக் கொள்வது மட்டுமல்ல மாறாக, பாதுகாப்பான ஓர் ஊரில் புதிதொரு சமுதாயத்தை நிறுவுவதும் ஹிஜ்ராவின் நோக்கமாக இருந்தது. ஆகவே, ஹிஜ்ரா செய்ய ஆற்றல் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் ஹிஜ்ரா செய்து அந்தப் புதிய சமுதாயத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும், அந்த ஊரைப் பாதுகாப்பதற்கும் அதன் தகுதியை உயர்த்துவதற்கும் முழு அளவில் முயற்சி செய்யவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

அந்த சமூகத்தை நிறுவுவதிலும் அதை அமைப்பதிலும் நபி (ஸல்) அவர்களே முன்னோடியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்கள். அனைத்து பொறுப்புகளுக்குரிய அதிகாரங்கள் முழுவதும் நபி (ஸல்) அவர்களிடமே இருந்தன. இதில் மற்ற எவருக்கும் எவ்வித மனக் கசப்பும் இருக்கவில்லை.

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த மக்கள் மூன்று வகையினராக இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் நிலைமையும் பிறரின் நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. ஒரு வகையினரிடம் நபி (ஸல்) அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றொரு வகையினரிடம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன.

அம்மூன்று வகையினர்:

1) முஸ்லிம்கள் அதாவது, சிறப்பிற்குரிய நபித்தோழர்கள்.

2) மதீனாவின் பூர்வீக குடிகளில் உள்ள முஷ்ரிக்குகள். அதாவது, அந்நேரம்வரை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த மதீனாவாசிகள்.

3) யூதர்கள்.

மக்காவில் நபித்தோழர்களுக்கு இருந்த நிலைமையும், இப்போது மதீனாவில் அவர்களுக்கு இருக்கும் நிலைமையும் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருந்தன. மக்காவில் முஸ்லிம்கள் இஸ்லாமின் மூலம் ஒருங்கிணைந்து ஒரே நோக்கமுடையவர்களாக இருந்தும் அவர்களால் ஒரு முழுமையான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். ஏனெனில், முஸ்லிம்கள் பல குடும்பங்களில் பிந்திருந்தனர். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு கேவலப் படுத்தப்பட்டு பலவீனமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. முஸ்லிம்களின் எதிரிகளே, மக்காவில் முழு அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆகவேதான் மக்காவில் அருளப்பட்ட குர்ஆன் அத்தியாயங்களில் இஸ்லாமிய அடிப்படை விளக்கங்களும், ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்ள வேண்டியக் கட்டளைகளும் குறிப்பாக கூறப்பட்டிருந்தன. மேலும் நன்மை, உபகாரம், நற்பண்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அதிகம் ஆர்வம் ஊட்டப்பட்டன. கெட்ட குணங்கள், இழி செயல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டன.