பக்கம் - 208 -
அந்நேரத்தில் தனது தோழர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து போர் செய்வதிலிருந்து இப்னு உபை விலகிக் கொண்டாலும், சமயமேற்படும் போதெல்லாம் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான். ஆனால், அல்லாஹ்வின் அருளால் அவர்களது வஞ்சகத் தீ மூழும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் ஞானமிக்க நடவடிக்கை அதை அணைத்துக் கொண்டே இருந்தது.

அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் “நான் கஅபாவை வலம் வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்” என்று கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு கஅபாவிற்குச் சென்றான்.

அந்த இருவரையும் வழியில் அபூஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் “அபூ ஸஃப்வானே!” உன்னுடன் இருப்பவர் யார்?” என்று கேட்டான். அதற்கு உமய்யா “இவர் ஸஅது” என்றான். அப்போது அபூஜஹ்ல் ஸஅதிடம் “நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப் செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாது” என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்தி “நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்” என்று எச்சரித்தார். (ஸஹீஹுல் புகாரி)

குறைஷிகளின் மிரட்டல்

உண்மையில், குறைஷிகள் இதைவிட மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற உறுதியில் இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள் அல்லது தங்களின் தோழர்களின் பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள்.

இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) மதீனாவுக்கு வந்த காலத்தில் ஓரிரவு விழித்திருந்தார்கள். அப்போது “எனது தோழர்களில் நல்லவர் ஒருவர் இன்று இரவு என்னை பாதுகாக்க வேண்டுமே” என்றார்கள். அங்கு ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் “அது யார்?” என்று கேட்கவே, வந்தவர் “நான்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் “நீர் ஏன் வந்தீர்?” என்று வினவினார்கள். அதற்கவர் “நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறேன்” என்றார். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஸஅதுக்காக துஆ (பிரார்த்தனைச்) செய்து விட்டு தூங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி)