பக்கம் - 22 -
ஆக, குஜாஆவினர் கஅபாவை நிர்வகித்த காலம் 300 ஆண்டுகளாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் அதாவது கி.பி. 440ல் குஸய் மக்காவையும் கஅபாவையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தார். (ஃபத்ஹுல் பாரி)

இதன் காரணமாக மக்கா நகரின் முழு தலைமைத்துவம் குஸய்ம்க்கும், அவருக்குப் பின்னர் குறைஷி கோத்திரத்தாருக்கும் கிடைத்தது. அரபிய தீர்பகற்பத்தின் பல பகுதிகளிலிருந்து அரபியர் தரிசிக்க வரும் கஅபாவின் மதத் தலைவராக குஸய் விளங்கினார்.

அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த குறைஷி கோத்திரத்தாரை மக்காவுக்கு வரவழைத்து ஒவ்வொரு குறைஷி குடும்பத்துக்கும் இடங்களைப் பிரித்துக் கொடுத்து அவர்களது வாழ்க்கை வசதிகளைக் குஸய் மேம்படுத்திக் கொடுத்தார். அவ்வாறே ஆலு ஸஃப்வான், பனூ அத்வான், முர்ரா இப்னு அவ்ஃப் போன்றோருக்கு அவர்களிடம் இருந்த பொறுப்பை அவர்களுக்கே வழங்கினார். புனித மாதங்களை தங்களது வசதிக்கேற்ப முன்பின்னாக மாற்றியமைத்துக் கொள்ளும் வழக்கத்தை அவரும் பின்பற்றினார். ஏனெனில், இவ்வாறான சடங்குகள் அனைத்தும் மாற்றத்தகாத மார்க்க சடங்குகள் என அவர் நம்பியிருந்தார். (இப்னு ஹிஷாம்)

குறைஷியர்களுக்காக கஅபாவின் வடக்குப் பகுதியில் ‘தாருந் நத்வா’ எனும் ஒரு சங்கத்தை நிறுவியது குஸய் செய்த நற்செயல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அது குறைஷியர்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு காணுமிடமாகவும், அவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மன்றமாகவும் விளங்கியதால், அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. அதனுடைய வாசல் கஅபாவை நோக்கி அமைந்திருந்தது. (இப்னு ஹிஷாம், இக்பாருல் கிராம் பி அக்பால் மஸ்ஜிதில் ஹராம்)

குஸய்யின் சாதனைகள்

1) தாருந் நத்வாவின் தலைமை

குறைஷியர்கள் தங்களுக்கு நிகழும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்கு தான் ஆலோசனை நடத்துவார்கள். மேலும், தங்களின் பெண் பிள்ளைகளுக்கு இதனைத் திருமண மண்டபமாக பயன்படுத்தினார்கள். இந்த தாருந் நத்வாவின் தலைவராக குஸய் விளங்கினார்.

2) கொடி

பிற சமுதாயத்துடன் போர் செய்வதாக இருந்தால் அதற்கான சிறிய அல்லது பெரியகொடி, குஸய் அல்லது அவரது பிள்ளைகளின் கரத்தில் கொடுக்கப்பட்டு தாருந் நத்வாவில் நடப்படும்.

3) வழிநடத்துதல்

மக்காவிலிருந்து வியாபாரம் அல்லது வேறு நோக்கங்களுக்காக வெளியில் செல்லும் பயணக் கூட்டங்களுக்கு குஸய் அல்லது அவரது பிள்ளைகளில் ஒருவர் தலைமை வகிப்பார்.

4) கஅபாவை நிர்வகித்தல்

கஅபாவின் வாயிலைத் திறப்பது, மூடுவது, பராமரிப்பது, வழிபாடுகள் நடத்துவது அனைத்தையும் குஸய் மேற்கொள்வார்.