பக்கம் - 224 -
திரும்பிட நினைத்த மக்கா படையில் பிளவு

அபூஸுஃப்யான் எழுதிய கடிதம் குறைஷிகளுக்கு கிடைத்த போது அவர்கள் அனைவரும் திரும்பிவிடலாம் என்றே எண்ணினர். ஆனால், குறைஷிகளின் அட்டூழியக்காரன் அபூஜஹ்ல் கர்வத்துடன் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் திரும்பமாட்டோம் நாங்கள் பத்ருக்குச் செல்வோம் அங்கு மூன்று நாட்கள் தங்குவோம் ஒட்டகங்களை அறுத்து சமைத்து சாப்பிடுவோம் மது அருந்துவோம் அடிமைப் பெண்கள் இசைப்பாடுவர் எங்களைப் பற்றியும் எங்களது பயணத்தைப் பற்றியும், எங்கள் கூட்டத்தைப் பற்றியும் அரபிகள் கேள்விப்படுவார்கள். அதனால் எங்களை எப்பொழுதும் பயந்தே வாழ்வார்கள்” என்று கூறினான்.

அபூஜஹ்லுக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே ஆக வேண்டுமென்று ஆலோசனைக் கூறினார். ஆனால், அவரது பேச்சைப் பலர் செவிமடுக்கவில்லை. ஆனால், இவருக்கு நண்பர்களாக இருந்த ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். இந்தப் போரில் ஜுஹ்ராவினருக்கு அக்னஸ்தான் தலைவராக இருந்தார். எனவே, ஜுஹ்ரா கிளையினரில் எவரும் போரில் கலந்து கொள்ளாமல் அக்னஸுடன் திரும்பி விட்டனர். இவர்கள் ஏறக்குறைய 300 நபர்கள் இருந்தனர். பத்ர் போர் நடந்து முடிந்தபின் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியையும் நஷ்டத்தையும் பார்த்த ஜுஹ்ரா கிளையினர் அக்னஸின் ஆலோசனையை பெரிதும் மெச்சினர். அதற்குப் பின் அக்னஸ் ஜுஹ்ராவனரிடம் மிகுந்த மதிப்பிற்குரியவராகவும் கண்ணியத்திற்குரியவராகவும் என்றென்றும் இருந்தார்.

ஹாஷிம் கிளையினரும் திரும்பிட நாடவே நாங்கள் திரும்பும் வரை நீங்கள் திரும்பக் கூடாதென அபூஜஹ்ல் அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்றான்.

இவ்வாறு ஜுஹ்ரா கிளையினர் 300 பேர் போரிடாமல் திரும்பிவிடவே, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் ‘அல் உத்வதுல் குஸ்வா’ என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.

இக்கட்டான நிலையில் இஸ்லாமிய ராணுவம்

மதீனா படையின் ஒற்றர்கள், நபி (ஸல்) ‘தஃபிரான்’ பள்ளத்தாக்கில் இருக்கும் போது அபூஸுஃப்யானின் வியாபாரக் கூட்டம் மற்றும் மக்கா படை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வந்தனர். ஒற்றர்கள் கூறிய செய்திகளை நன்கு ஆராய்ந்த பின் கண்டிப்பாக அபாயகரமான போரைச் சந்திக்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். மக்கா படைகளை எதிர்க்காமல் விட்டுவிட்டால் அந்தப் பகுதியில் அவர்கள் தங்களின் ராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தி விடுவார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு அந்தப் பகுதி மக்களிடம் கேவலமும் அவமானமும் ஏற்படலாம். இஸ்லாமிய அழைப்புப் பணி தனது வலிமையை இழந்து விடலாம். இஸ்லாமின் மீது வெறுப்பும் பகைமையும் கொண்ட ஒவ்வொருவரும் முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய துணிவு கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு நபி (ஸல்) மக்கா படையினரை எதிர்த்தே ஆகவேண்டுமென்ற உறுதியான முடிவுக்கு வந்தார்கள்.

முஸ்லிம்கள் சண்டையிடாமல் தங்களின் ஊருக்குத் திரும்பி விடுவதால் மக்கா எதிரிகள் மதீனாவரை படையெடுத்து வரமாட்டார்கள் என்பதற்கு எவ்விதமான உத்திரவாதமுமில்லை. ஆகவே, ஒருவேளை முஸ்லிம்கள் மதீனா திரும்பியிருந்தால் அவர்களுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் மற்றவர்களிடம் அவர்களைப் பற்றிய அச்சமற்றத் தன்மையும், துணிவும் பிறந்திருக்கும்.