பக்கம் - 226 -
இந்த மூன்று தளபதிகளும் முஹாஜிர்களில் உள்ளவர்கள். முஹாஜிர்கள் படையில் மிகக் குறைவானவர்களாக இருந்ததால், நபி (ஸல்) அன்சாரி தளபதிகளின் கருத்துகளை அறிய விரும்பினார்கள். ஏனெனில், இவர்கள்தான் அதிகமாக இருந்தனர். மேலும், போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அன்சாரிகளையே அதிகம் பாதிக்கக் கூடியதாக இருக்கும். நபி (ஸல்) அகபாவில் செய்து கொண்ட உடன்படிக்கையில் அன்சாரிகள் மதீனாவிற்கு வெளியில் சென்று போர் புரிய வேண்டுமென்ற நிபந்தனை இல்லாமலிருந்தது. ஆகவே தான் நபி (ஸல்) அன்சாரிகளின் கருத்துகளைக் கேட்க விரும்பினார்கள். மூன்று தளபதிகளின் பேச்சைக் கேட்டதற்குப் பின்பு அன்சாரிகளை மனதில் கொண்டு “மக்களே! எனக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று பொதுவாகக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் நோக்கத்தை விளங்கிக் கொண்ட அன்சாரிகளின் தளபதியாக இருந்த ஸஅது இப்னு முஆது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் கேட்பது போல் தெரிகிறதே” என்றார். அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அவர்கள் எழுந்து பின்வருமாறு பதிலளித்தார்:

“நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையானவர்கள் என நம்பினோம் நீங்கள் கொண்டு வந்ததுதான் சத்தியமென்று சாட்சி கூறினோம் இதை ஏற்று உங்களின் கட்டளைகளைச் செவிமடுத்தோம், அதற்குக் கட்டுப்படுவோம் என்று உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொடுத்தோம் எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம் எங்களிலிருந்து ஒருவரும் பின் தங்கிவிட மாட்டார் நாளை எங்களுடன் எதிரிகளை நீங்கள் சந்திப்பதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக போரில் நாங்கள் உறுதியுடன் இருப்போம் எதிரிகளைச் சந்திப்பதில் உண்மை யாளர்களாக இருப்போம் உங்களுக்குக் கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வுடைய அருளுடன் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.”

மற்றுமொரு அறிவிப்பில் வந்துள்ளது: “அல்லாஹ்வின் தூதரே! தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டு உங்களுக்கு உதவி செய்வது மட்டுமே கடமை என அன்சாரிகள் நினைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அன்சாரிகளின் சார்பாக நான் பேசுகிறேன் அவர்களின் சார்பாக நான் பதிலளிக்கிறேன் நீங்கள் விரும்பிய இடத்திற்குப் பயணித்துச் செல்லுங்கள் நீங்கள் விரும்பியவருடன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியவன் உறவை வெட்டிவிடுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை எங்களுக்குக் கொடுங்கள் நீங்கள் எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டது நீங்கள் எங்களுக்காக விட்டுவிட்டதை விட மேலானதாகும் நீங்கள் எங்களுக்கு எவ்விஷயத்திலும் எதைக் கட்டளையிடுகிறீர்களோ அது விஷயத்தில் எங்களின் செயல்கள் உங்களின் கட்டளைக் கிணங்கத்தான் இருக்கும் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களை ‘கிம்தான்’ பகுதியில் உள்ள ‘பர்க்’ என்ற இடம் வரை அழைத்துச் சென்றாலும் நாங்கள் உங்களுடன் வருவோம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று மூழ்கினால் நாங்களும் மூழ்குவோம்” என்று ஸஅது இப்னு முஆது, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

ஸஅதின் பேச்சையும் அவன் உற்சாகத்தையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தார்கள். பின்பு “நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றை எனக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கூட்டத்தினர் வெட்டுண்டு விழும் இடங்களை நான் இப்போது பார்ப்பதைப் போன்று இருக்கின்றது” என்று கூறினார்கள்.