பக்கம் - 227 -
இஸ்லாமியப் படை பயணத்தைத் தொடர்கிறது

பின்பு நபி (ஸல்) ‘ஃதபிரான்’ என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, அஸாஃபிர் வழியாகச் சென்று, ‘தப்பா’ என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து மலை போன்ற மிகப் பெரிய மணற் குன்றான ஹன்னானை வலப்பக்கம் விட்டுவிட்டு பத்ருக்குச் சமீபமாக வந்திறங்கினார்கள்.

கண்காணிக்கும் பணியில் நபியவர்கள்

அங்கிருந்து நபி (ஸல்) தனது குகைத் தோழர் அபூபக்ருடன் மக்கா படைகளைக் கண்காணிக்கப் புறப்பட்டார்கள். அவ்விருவரும் மக்கா படையினர் எங்கு கூடாரமிட்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு வயது முதிர்ந்தவரைப் பார்த்தார்கள். அவரிடம் “குறைஷிகளைப் பற்றியும் முஹம்மது மற்றும் அவரது தோழர்களைப் பற்றியும் உமக்குத் தெரியுமா?” என்று விசாரித்தார்கள். அவர் தங்களை யார் என விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் இரு படைகளைப் பற்றியும் விசாரித்தார்கள். ஆனால், அந்த வயது முதிர்ந்தவரோ “நீங்கள் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாத வரை நான் உங்களுக்கு எந்த செய்தியையும் கூறமாட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நாங்கள் கேட்டதை நீர் கூறினால் நாங்கள் யார் என்பதை உமக்குக் கூறுவோம்” என்றார்கள். அதற்கு அந்த வயோதிகர் “அவ்வாறுதானே!” என்று கேட்க அதற்கு நபி (ஸல்) “ஆம்!” என்றார்கள்.

அதற்குப் பின் அந்த வயோதிகர் “முஹம்மதும் அவன் தோழர்களும் இன்ன நாளில் மதீனாவிலிருந்து வெளியேறினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இந்த செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இந்த இடத்தில் இருப்பார்கள்” என்று மதீனாவின் படை இருந்த இடத்தை சரியாகக் கூறினார். மேலும், “குறைஷிகள் இந்த நாளில் மக்காவிலிருந்து கிளம்பினார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்தது. எனக்கு இச்செய்தியைக் கூறியவர் உண்மையைக் கூறியிருந்தால் அவர்கள் இன்று இன்ன இடத்தில் இருப்பார்கள்” என்று மக்கா படை தங்கியிருந்த இடத்தைச் சரியாகக் கூறினார்.

“பின்பு நீங்கள் யார்?” என்று அவர் கேட்க, நபி (ஸல்) “நாங்கள் (மாஃ) தண்ணீலிருந்து வந்திருக்கிறோம்” என்று கூறி, அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் “என்ன! தண்ணீலிருந்து வந்தவர்களா? எந்தத் தண்ணீலிருந்து...? இராக் நாட்டு தண்ணீலிருந்தா...?” என்று புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

மக்கா படையின் முக்கிய விஷயங்களை அறிதல்

அன்றைய மாலை எதிரிகளைப் பற்றி மேலும் பல புதிய தகவல்களை அறிந்து வருவதற்காக முஹாஜிர்களில் உள்ள மூன்று முக்கிய தளபதிகளை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அலீ இப்னு அபூ தாலிப், ஸுபைர் இப்னு அவ்வாம், ஸஅது இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆவார்கள். இவர்கள் பத்ரின் தண்ணீர் உள்ள இடத்திற்குச் சென்றபோது அங்கு இருவர் மக்கா படைகளுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) தொழுது கொண்டிருந்தார்கள். அவ்விருவரிடமும் இஸ்லாமிய படையினர் விசாரிக்கவே அவர்கள், “நாங்கள் குறைஷிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம்” என்றனர். இவர்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தினராக இருக்கலாம் என்றெண்ணி இவர்களின் பதிலை ஏற்றுக் கொள்ளாமல் கடுமையாக அடித்தனர். அடிக்குப் பயந்த அவ்விருவரும் “ஆம்! நாங்கள் அபூஸுஃப்யானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்” என்றனர். உடனே அவ்விருவரையும் அடிக்காமல் விட்டுவிட்டனர்.

நபி (ஸல்) தொழுது முடித்தவுடன் தங்களது படையினரை கண்டிக்கும் விதமாக “அவ்விருவரும் உங்களிடம் உண்மை கூறியபோது அடித்தீர்கள். ஆனால் பொய் கூறியபோது அவர்களை விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரும் உண்மையைத்தான் கூறினார்கள். அவர்கள் குறைஷிகளுக்காக வந்தவர்களே!” என்று கூறினார்கள்.