பக்கம் - 228 -
பின்பு அவ்விருவரையும் அழைத்து “குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) கேட்கவே, “நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள் இருக்கிறார்கள்” என்றனர். “அவர்கள் எத்தனை நபர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “மிக அதிகமாக இருக்கின்றனர்” என்று அவர்கள் கூறினார்கள். “அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள் உள்ளன” என்று நபி (ஸல்) கேட்கவே, அவர்கள் “தெரியாது” என்று கூறினர். நபி (ஸல்) “அவர்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஒரு நாள் ஒன்பது. மறுநாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) “அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை இருக்கலாம்” என்றார்கள். பின்பு அவர்களிடம் “குறைஷி பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?” என்று நபி (ஸல்) கேட்க “உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம் இப்னு ஜாம், நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர் இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் ஆகியோரும் மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்” என அவ்விருவரும் கூறினர்.

நபி (ஸல்) மக்களை நோக்கி “இதோ! மக்கா தனது ஈரக் குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறது” என்றார்கள்.

மழை பொழிதல்

அல்லாஹ் அன்றிரவு மழையை இறக்கினான். அந்த மழை இணைவைப்பவர்களுக்கு அடைமழையாக இருந்தது. அது அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தது. ஆனால், முஸ்லிம்களுக்கோ அது மென்மையான தூறலாக இருந்தது. அம்மழையினால் அல்லாஹ் முஸ்லிம்களைச் சுத்தப்படுத்தினான். ஷைத்தானின் அசுத்தத்தை அவர்களை விட்டும் அகற்றினான். அங்கிருந்த மணற்பாங்கான பூமியை முஸ்லிம்கள் தங்குவதற்கு வசதியாக இறுக்க மாக்கிக் கொடுத்தான். மேலும், அவர்களது உள்ளங்களையும் பாதங்களையும் உறுதியாக்கினான்.

முக்கிய ராணுவத் தளத்தை நோக்கி இஸ்லாமியப் படை

இணைவைப்பவர்கள் வருவதற்குள் பத்ர் மைதானத்திற்கருகில் உள்ள நீர்நிலைகளுக்கு நாம் சென்றுவிட வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) தனது படையை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். ஏனெனில், அப்போதுதான் அந்த நீர்நிலைகளை எதிரிகள் கைப்பற்ற விடாமல் தடுக்க முடியும். அல்லாஹ்வின் அருளால் இஷா நேரத்தில் பத்ரின் நீர்நிலைகளில் ஒரு நீர்நிலைக்கு அருகில் நபி (ஸல்) வந்திறங்கினார்கள். அப்போது போர் தந்திரங்களை நன்கறிந்த (ராணுவ நிபுணர்) அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது என அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்” என்றார்கள்.

அதற்கவர் “அல்லாஹ்வின் தூதரே! இது தங்குவதற்குரிய இடமல்ல. நீங்கள் மக்களை அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நாம் குறைஷிகளுக்கு மிக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்று தங்குவோம். பின்பு மற்ற அனைத்து நீர்நிலைகளையும் நாம் அழித்து விடுவோம். மேலும், ஒரு நீர் தடாகத்தை ஏற்படுத்தி அதை தண்ணீரால் நிரப்பி விடுவோம். நாளை போர் நடக்கும் போது நாம் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்கும். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இருக்காது” என்றார். நபி (ஸல்) அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு, “நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்” என்றார்கள்.