பக்கம் - 234 -
ஒண்டிக்கு ஒண்டி

இந்த முதல் கொலை, போரின் நெருப்பை மூட்டியது. குறைஷிகளின் மிக தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம்மூவடரிமும் அந்த எதிரிகள் “நீங்கள் யார்?” என்றனர். அதற்கு அவர்கள் “நாங்கள் மதீனாவாசிகள்” என்றனர். அதற்கு அந்த எதிரிகள், “சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள்தான். ஆனால் உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள் தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் “முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!” என்று கத்தினான். நபி (ஸல்) அவர்கள். “உபைதா இப்னு ஹாஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே! எழுந்து செல்லுங்கள்!” என்றார்கள்.

இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் “நீங்கள் யார்?” என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் “சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே” என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி) எதிரி வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)

ஆனால், ஹம்ஜாவும் அலீயும் தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும் கொன்றுவிட்டனர். ஆனால், உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக் கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றார்கள். அதற்குப் பிறகு உபைதாவை சுமந்து கொண்டு படைக்குத் திரும்பினர். உபைதா (ரழி) இதனால் நோய்வாய்ப்பட்டு இப்போருக்குப் பின் 4 அல்லது 5 நாட்கள் கழித்து மதீனாவிற்கு செல்லும் வழியில் ‘ஸஃப்ரா’ என்ற இடத்தில் இறந்தார்கள்.

(இறைநம்பிக்கையாளர்கள், இறைமறுப்பாளர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றி தர்க்கித்தனர். ஆகவே, அவர்களில் எவர் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டு இருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும். (அல்குர்ஆன் 22:19)

இந்த வசனம் தங்கள் விஷயத்தில்தான் இறங்கியது என்று அலீ (ரழி) சத்தியமிட்டு கூறுகிறார்கள்.