பக்கம் - 235 -
எதிரிகளின் பாய்ச்சல்

போரின் ஆரம்பமே எதிரிகளைப் பொருத்தவரை கெட்டதாக அமைந்தது. தங்களின் தளபதிகளிலும் குதிரை வீரர்களிலும் மிகச் சிறந்த மூவரை அவர்கள் இழந்தனர். இதனால் ஆத்திரமடைந்து, முஸ்லிம்களின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தனர். ஆனால், முஸ்லிம்களோ தங்களது இறைவனிடம் உதவியும் பாதுகாப்பும் கோரி, பணிவுடன் தங்களது எண்ணங்களை தூய்மைப்படுத்திக் கொண்டே, எதிரிகளின் தொடர் தாக்குதல்களை சமாளித்தனர். முஸ்லிம்கள் தங்கள் இடங்களிலேயே உறுதியாக நின்று எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்தனர். ‘அஹத்! அஹத்!’ (அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!!) என்று கூறிக்கொண்டே இணைவைப்பவர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தினர்.

நபியவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள்

முஸ்லிம்களின் அணிகளைச் சரிசெய்து திரும்பிய பின் நபி (ஸல்) தனது இறைவன் தனக்கு வாக்களித்ததை அவனிடம் வேண்டினார்கள்.

அவர்கள் கேட்டதாவது: “அல்லாஹ்வே! நீ எனக்களித்த வாக்கை நிறைவேற்றுவாயாக! அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும் ஒப்பந்தத்தையும் உன்னிடம் கேட்கிறேன்.”

மோதல்களும் தாக்குதல்களும் கடுமையாகச் சூடுபிடித்து உச்சக்கட்டத்தை அடைந்த போது “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று அல்லாஹ்விடம் கையேந்தினார்கள். கரங்களை உயர்த்தியதால் அவர்களின் புஜத்திலிருந்து போர்வை நழுவி விழுந்தது. அந்தளவு அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் போர்வையை அபூபக்ர் (ரழி) சரிசெய்து, “அல்லாஹ்வின் தூதரே! போதும், நீங்கள் உங்கள் இறைவனிடம் அதிகம் வேண்டிவிட்டீர்கள்” என்றார்கள்.

நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்து, வானவர்களுக்குக் கட்டளைப் பிறப்பித்தான்.

(நபியே!) உங்களது இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப் படுத்துங்கள் (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களைக் கணுக் கணுவாகத் துண்டித்து விடுங்கள்” என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 8:12)

மேலும் தனது தூதருக்கு அறிவித்தான்:

(உங்களைப்) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் வேண்டிய போது “அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)

அதாவது, அந்த வானவர்கள் உங்களுக்குப் பின்னிருந்து உங்களுக்கு உதவிபுரிவார்கள் என்றோ அல்லது வானவர்கள் ஒரே தடவையில் வராமல் சிலருக்குப் பின் சிலராக வருவார்கள் என்றோ கருத்து கொள்ளலாம்.