பக்கம் - 236 -
வானவர்கள் வருகிறார்கள்

நபி (ஸல்) சற்று தலையைத் தாழ்த்தி, பின்பு உயர்த்தி “அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். இதோ... ஜிப்ரீல் புழுதிகளுடன் காட்சியளிக்கிறார்” அல்லது “அபூபக்ரே! நற்செய்தி அடைந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு வந்துவிட்டது. இதோ.. ஜிப்ரீல் குதிரையின் கடிவாளத்தை இழுத்து வருகிறார். அவர் உடம்பில் புழுதி படிந்திருக்கிறது” என்று கூறினார்கள்.

கவச ஆடை அணிந்து நபி (ஸல்) தங்களது கூடாரத்திலிருந்து வெளியேறி,

அதிசீக்கிரத்தில் இக்கூட்டம் தோற்கடிக்கப்படுவார்கள், (பிறகு) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)

என்ற வசனத்தைக் கூறியவர்களாக பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை “முகங்கள் மாறட்டும்” என்று கூறி எதிரிகளின் முகத்தை நோக்கி எறிந்தார்கள். அது எதிரிகளின் கண், தொண்டை, வாய் என்று அனைத்தையும் சென்றடைந்தது.

இது குறித்தே,

நீங்கள் எறியும்போது உண்மையில் அதை நீங்கள் எறியவில்லை. எனினும், அதை நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். (அல்குர்ஆன் 9:17)

என்ற வசனம் இறங்கியது.

எதிர் பாய்ச்சல்

இந்நேரத்தில்தான், நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு தனது இறுதிக் கட்டளையை அறிவித்தார்கள். “எதிரிகள் மீது பாயுங்கள்” என்று கூறி, போர் புரிய முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள். மேலும் கூறினார்கள், “முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! இன்றைய தினத்தில் போர் புரிந்து சகிப்புடனும், நன்மையை நாடியும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்களையும் பூமிகளையும் அகலமாகக் கொண்ட சொர்க்கத்தின் பக்கம் விரைந்தோடுங்கள்” என்று கூறி போருக்கு ஆர்வமூட்டினார்கள். உமைர் இப்னு அல்ஹுமாம் (ரழி) “ஆஹா! ஆஹா!” என்றார்கள். நபி (ஸல்) “நீ ஏன் ஆஹா! ஆஹா!” என்று கூறுகிறாய்? என்று கேட்க, அவர் “நான் தவறான எண்ணத்தில் கூறவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆக வேண்டுமென்ற ஆசையில் அவ்வாறு கூறினேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “ஆம்! நிச்சயமாக நீர் சொர்க்கவாசிகளில் ஒருவர்தான்” என்றார்கள். அவர் தன்னிடமிருந்த சில பேரீத்தம் பழங்களை எடுத்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு, “இந்தப் பேரீத்தம் பழங்களை சாப்பிடும் வரை நான் உயிர் வாழ்வதை நீண்ட ஒரு காலமாகக் கருதுகிறேன்” என்று கூறியவராக அந்தப் பேரீத்தம் பழங்களை எறிந்து விட்டு எதிரிகளுடன் போர் புரிந்து வீரமரணம் எய்தினார். (ஸஹீஹ் முஸ்லிம்)